பொதுவாகவே வெயில் காலங்களில் கார் ஏசியின் செயல்பாடு அதிகமாக இருக்கும். அந்த தருணங்களில் இதில் என்னென்ன கவனிக்க வேண்டுமென உங்களுக்குத் தெரியுமா?
வெயில் காலம் வேற தொடங்கிடுச்சு. வெப்பத்திலிருந்து தப்பிக்க நாம எல்லாருமே தேடி ஓடுவது ஏசிய தான். அதுலயும் ஏசி இல்லாம கார் வச்சிருக்கிறவங்களுடைய பாடு திண்டாட்டம் தான். பங்குனி வெயில் பல்லை இளித்துக்கொண்டு உக்கிரம் அடைவதற்குள், உங்கள் காரின் ஏசி எப்படி செயல்படுகிறது என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏர் பில்டர் நன்றாக இருக்கிறதா? ரெஃப்ரிஜிரேஷன் லெவல் சரியாக இருக்கிறதா? என அனைத்தையும் சரிபார்த்துவிட்டு, அதில் ஏதாவது குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்து கொள்ளுங்கள். என்னதான் ஏசி நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது என நாம் நினைத்தாலும், அதில் காட்டும் சின்னச் சின்ன அலட்சியங்கள் கூட மிகப் பெரிய செலவை வைத்துவிடும் வாய்ப்புள்ளது. அதிகமாக ஏசியை பயன்படுத்தவில்லை என்றாலும், குறிப்பிட்ட கிலோமீட்டர் ஓட்டத்திற்குப் பிறகு, ஏசியை நல்ல முறையில் பரிசோதித்து சர்வீஸ் செய்து கொள்வது நல்லது. அப்போதுதான் நமது கார் ஏசி நீண்ட காலம் நீடித்து உழைக்கும்.
ஏசியில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஏர் ஃபில்டர். அதை அழுக்கு படியாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். இதை சரியாக கவனிக்கவில்லை என்றால், அதில் படிந்து காரினுள்ளே மோசமான காற்றைத்தான் வழங்கும். இது ஏசிக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்து இயங்கச் செய்வதால், காரின் மைலேஜையும் குறைத்துவிடும். இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க ஏசி பில்டரை அவ்வப்போது கவனித்துக் கொள்ளுங்கள்.
கார் இஞ்சினை இயக்கிய பிறகே ஏசியை ஆன் செய்ய வேண்டும். அதேபோல ஏசியை அனைத்த பிறகுதான், கார் இன்ஜினை ஆஃப் செய்ய வேண்டும். மேலும் கார் நீண்ட நேரம் சூரிய வெளிச்சத்தில் நேரடியாக நிறுத்தப் பட்டிருந்தால், உடனடியாக ஏசியை ஆன் செய்யக் கூடாது. இன்ஜினை ஆன் செய்த பிறகு, காரின் அனைத்து கண்ணாடிகளையும் திறந்து உள்ளே இருக்கும் வெப்பம் சிறிது தனியும் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகு ஏசியை 'ஆன்' செய்யுங்கள். ஏனென்றால் காரனுள்ளே இருக்கும் அதிகப்படியான வெப்பத்தைக் குறைக்க ஏசியின் செயல்பாடு அதிகமாக இருக்கும். அப்படி இருக்கும்போது ஏசி பழுதடைய வாய்ப்புள்ளது.
அடுத்ததாக எடுத்த எடுப்பிலேயே ஏசியை அதிக குளிர்ச்சி நிலைக்கு கொண்டுபோகக் கூடாது. அவ்வாறு செய்தாலும் ஏசி ஆன் செய்த உடனே அதிக அழுத்தம் ஏற்பட்டு பழுதடையலாம். மேலும் இதுபோன்று நீங்கள் ஏசி சிஸ்டத்திற்கு கொடுக்கும் அதிகப்படியான அழுத்தத்தால், ஏசியின் ஆயுட்காலம் குறைவது மட்டுமல்லாமல், காரின் மைலேஜ் ஒட்டுமொத்தமாக குறைத்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மேற்கூறிய சின்ன சின்ன டிப்ஸ்களை வெயில் காலங்களில் கார் ஏசியில் கையாண்டாலே, அதன் செயல்திறனை அதிகரிப்பதோடு, நீண்ட காலம் பழுதாகாமல் பாதுகாக்கலாம்.