விண்ணில் அதிக நாட்கள் தங்கிய டாப் 10 வீரர்கள்!

Space Research
Astronauts
Published on

இன்றைய நவீன உலகில் விண்வெளி ஆராய்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப உலக நாடுகள் பலவும் போட்டி போட்டுக் கொண்டு விண்வெளி ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன. இதற்காக அவ்வப்போது வீரர்கள் விண்வெளிப் பயணம் மேற்கொள்வது வழக்கம். பல அற்புதங்கள் நிறைந்த விண்வெளியின் ரகசியங்களை உலகிற்கு உணர்த்த சில நாட்கள் விண்வெளி வீரர்கள் அங்கேயே தங்குவார்கள். அவ்வகையில், விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த வீரர்கள் யார் யார் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

சாதாரண மனிதர்களால் விண்வெளியை அண்ணாந்துதான் பார்க்க முடியும். விண்வெளிக்கே சென்று ஆராய்ச்சி செய்ய விண்வெளி வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் மட்டும் தான் முடியும். விண்ணில் நடக்கும் மற்றும் நடக்கப் போகும் அற்புதங்களை உலகிற்கு அறியப்படுத்த பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து உழைத்து வருகின்றனர். இது போதாதென்று சர்வதேச விண்வெளி நிலையத்தையும் விண்வெளியில் நிறுவியிருக்கின்றன உலக நாடுகளைச் சேர்ந்த விண்வெளி நிறுவனங்கள்.

ஆராய்ச்சிக்காக விண்வெளியில் தங்கியிருந்த வீரர்கள் பலர் உள்ளனர். இதில் அதிக நாட்களை விண்ணில் கழித்தவர்கள் பட்டியலில் ரஷ்ய வீரர்களே முன்னணியில் இருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து அமெரிக்க வீரர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த வீரர்களின் பட்டியலில் முதல் 5 இடங்களில் ரஷ்ய வீரர்களே உள்ளனர்.

இதில் முதலிடத்தில் இருப்பவர் ரஷ்யாவை சேர்ந்த ஒலெக் கோனோனென்கோ. இவர் 1,110 நாட்களை விண்ணில் கழித்துள்ளார். இது கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குச் சமமாகும்.

2வது இடத்தில் 878 நாட்களுடன் கென்னடி படல்கா, 3வது இடத்தில் 803 நாட்களுடன் செர்கெய் க்ரிகலெவ், 4வது இடத்தில் 769 நாட்களுடன் அலெக்சாண்டர் கலேரி, 5வது இடத்தில் 747 நாட்களுடன் செர்கெய் அவ்தெயெவ் ஆகிய ரஷ்ய வீரர்கள் உள்ளனர்.

675 நாட்களுடன் 6வது இடத்தில் இருப்பவர் அமெரிக்க வீரரான பெக்கி விட்சன். விண்ணில் அதிக நாட்களைக் கழித்த அமெரிக்க வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இவர் தான். அதற்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் ப்யோடர் யுர்சிகின் 672 நாட்களுடன் 7வது இடத்திலும், ரஷ்யாவின் யூரி மாலென்சென்கோ 641 நாட்களுடனும் 8வது இடத்திலும் உள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸ் 609 நாட்கள் விண்வெளியில் தங்கி 9வது இடத்தில் இருக்கிறார். இருப்பினும் இவர் விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த அமெரிக்க வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அடுத்ததாக ரஷ்யாவின் பாவெல் வினோக்ரதோ 546 நாட்களுடன் 10வது இடத்தில் இருக்கிறார்.

சுனிதா வில்லியம்ஸுடன் இணைந்து பணியாற்றிய பேர்ரி புட்ச் வில்மோர், 462 நாட்களை விண்ணில் கழித்து அமெரிக்க வீரர்களில் 6வது இடத்தில் இருக்கிறார். விண்ணில் அதிக நாட்களைக் கழித்த டாப் 10 விண்வெளி வீரர்களில் அமெரிக்காவின் பெக்கி விட்சன் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இருவர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com