
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த நிலையில், உலக அளவில் இருக்க கூடிய முன்னணி இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தன் முயற்சிகளை மேலும் விரிவுபடுத்தி டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் என்ற மூன்று சக்கர மின்சார வாகனத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் இந்த டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மாநிலங்களில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பலநவீன அம்சங்களுடன் வந்துள்ள இவ்வாகனம், ஆட்டோ ஓட்டுநர்களிடமும் பயணிகளிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தபின் சுமார் 179 கி.மீதூரம் பயணிக்க முடியும். இது தினசரி பயணங்கள் மற்றும் வருமானத்தை அதிகரிக்க விரும்பும் ஓட்டுநர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக விளங்குகிறது. இந்த எலக்ட்ரிக் ஆட்டோவின் முக்கிய அம்சங்களில், உயர் செயல்திறன் கொண்ட 51.2 விலித்தியம்-அயன் (LFP) பேட்டரி இடம்பெற்றுள்ளது.
விரைவில் சார்ஜ் செய்யக்கூடிய வசதியும் இந்த வாகனத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும். 0 முதல் 80% வரை சார்ஜ் செய்ய 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். 0 முதல் 100% வரை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். இது விரைவில் சார்ஜ் செய்து மீண்டும் பயணத்தைத் தொடங்க உதவியாக இருக்கிறது.
இத்தகைய சிறப்புமிக்க டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் மணிக்கு 60 கி.மீ. வரை அதிகபட்ச வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் சிறப்பம்சமாக மூன்று ரைடிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. எக்கோ மோடில் 40 கி.மீ/மணி, சிட்டி மோடில் 50 கி.மீ/மணி, மற்றும் பவர் மோடில் 60 கி.மீ./மணி வேகத்தில் செல்லும் திறனை ஓட்டுநரின் தேவைக்கேற்ப மாற்றி பயன்படுத்தலாம்.
மேலும், இருசக்கர மின்வாகனங்களைப் போலவே இந்த டிவிஎஸ் கிங் இவி மேக்ஸிலும் டிவிஎஸ் ஸ்மார்ட் X கனெக்ட் என்ற ப்ளூடூத் கனெக்டிவிட்டி அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓட்டுநர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் லொக்கேஷன், முக்கிய எச்சரிக்கைகள் மற்றும் வாகனத்துடன் தொடர்புடைய பல தகவல்களை ஸ்மார்ட்போனில் தெரிந்து கொள்ளலாம். இது பயணத்தை எளிதாக்குவதோடு வாகன பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த வாகனத்திற்கு 6 ஆண்டுகள் அல்லது 1,50,000 கி.மீ. வரை விரிவான வாரண்ட்டி வழங்கப்படுகிறது. இதனால், நீண்டகால பராமரிப்பு செலவில் வாடிக்கையாளர்களுக்கு சிக்கனமும் உறுதி செய்யப்படுகிறது.
டிவிஎஸ் கிங் இவி மேக்ஸின் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை ரூ. 2,95,000/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பான செயல்திறன், பயனர்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட நவீன வசதிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இயல்புகள் ஆகியவை நகர்ப்புறத்தில் பயணம் மேற்கொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் சிறந்த தீர்வாக அமைகின்றன.