
வானத்தில் நாம் பார்க்கும் மேகங்கள் நீர் துளிகளால் உருவானவை. மேகங்கள் பூமியின் வளிமண்டலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வெப்பத்தை கடத்துவதற்கு தடைகளாக செயல்படுகின்றன மற்றும் கிரகத்தின் காலநிலையை ஒழுங்குபடுத்துகின்றன. மேகங்களில் மொத்தம் 10 அடிப்படை வகைகள் உள்ளன. பூமியின் மேற்பரப்பில் இருந்து அவற்றின் தொலைவின் அடிப்படையில் மேகங்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
குறைந்த உயரத்தில் உள்ள மேகங்கள், தரையிலிருந்து 6,500 அடிக்கும் குறைவான உயரத்தில் இருப்பவை. இவை நீர் துளிகளால் உருவானவை. இதில் குமுலஸ், குமுலோனிம்பஸ், ஸ்ட்ராடஸ் மற்றும் ஸ்ட்ராடோகுமுலஸ் ஆகிய மேக வகைகள் அடங்கும்.
6500 அடி உயரம் முதல் 23,000 அடி உயரத்தில் இருப்பவை நடுத்தர உயர மேகங்கள் எனப்படுகின்றன. இவை பெரும்பாலும் நீர் துளிகள் மற்றும் பனி படிகங்களின் கலவையால் ஆனவை. அல்டோகுமுலஸ், அல்டோஸ்ட்ராடஸ் மற்றும் நிம்போஸ்ட்ராடஸ் ஆகிய வகை மேகங்கள் இதில் அடங்கும்.
16,500 அடி முதல் 45,000 அடி வரை உயரத்தில் இருப்பவை உயரமான வகை மேகங்கள் என்று வகைப்படுத்த பட்டுள்ளன. இந்த மேகங்கள் முழுவதுமாக பனி படிகங்களால் ஆனவை. இந்த வகையில் சிரஸ், சிரோகுமுலஸ் மற்றும் சிரோஸ்ட்ராடஸ் ஆகிய மேகங்கள் அடங்கும்.
மேகங்கள் லேசானவை அல்ல:
மேகங்களைப் பார்ப்பதற்கு ஒரு பஞ்சுப் பொதி போல இருந்தாலும் உண்மையில் அவை மிகவும் எடை கொண்டவை. எடுத்துக்காட்டாக, 1 கன கிலோமீட்டர் அளவுள்ள ஒரு குமுலஸ் மேகம் தோராயமாக 500 மில்லியன் கிராம் நீர்த்துளிகளைக் கொண்டுள்ளது. இது 1.1 மில்லியன் பவுண்டுகள் அல்லது 100 யானைகளின் எடைக்கு சமமாக இருக்கும். இவ்வளவு எடையுடன் மேகங்கள் எவ்வாறு காற்றில் மிதந்து செல்கின்றன என்று நாம் யோசிக்கலாம். பூமியில் நீராவியாதல் என்ற முறையில் நீர் ஆவியாகி அதன் எடை குறைந்து வானத்தில் மேகமாக உருவாக பங்களிக்கிறது.
மனிதனால் உருவாக்கப்படும் மேகங்கள்:
நாம் அனைவரும் வானில் அடிக்கடி நேராக ஒரே கோடு போல் அல்லது நேராக இரண்டு கோடுகளைப் போல் மேகங்களை பார்த்திருப்போம் . அது ஜெட் விமானம் சென்று பாதை என்றும் நாம் அறிந்திருப்போம். இந்த நேரான கோடு போன்ற மேகங்கள் ஜெட் விமானங்கள் வானத்தைக் கிழித்து செல்லும்போது அதன் எஞ்சினில் இருந்து வெளியே வரும் நீராவிகள் உருவாக்கிய மேகங்கள்தான்.
மேகங்கள் பூமியில் மட்டுமல்ல, வேறு கிரகத்திலும் உள்ளன. அறிவியல் படி வளிமண்டல வாயுக்கள் திட வடிவில் குளிர்ந்து நீர்த்துளிகளாக நிறைந்து இருக்கும். நமது சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களுக்கும் மற்றும் அதற்கு அப்பாலும் பொருந்தும். இருப்பினும் வேற்று கிரக மேகங்கள் வேறு வேதியல் பண்புகளை கொண்டிருக்கலாம். வீனஸ் கிரகத்தின் அடர்த்தியான மேகங்கள் கந்தக அமிலத்தால் ஆனவை; அதே சமயம் வாயு கிரக மேகங்கள் அம்மோனியா சேர்மங்களால் ஆனவை.
மேகத்தை போரில் பயன்படுத்துதல்:
வியட்நாம் போரின் போது, ஆபரேஷன் போபியே திட்டத்தில் அமெரிக்கர்கள் மேகத்தை ஆயுதமாக பயன்படுத்த தொடங்கினர். இதன் மூலம் மழையினை அதிகரித்து எதிரிகளை செயல்பட விடாமல் செய்ய முடியும். இதனால் கடுமையான இயற்கை பேரழிவுகள் ஏற்படும். இந்த ஆபரேஷன் போபியே திட்டத்தினால் செயற்கை மழை உருவாக்கப்பட்டு வியட்நாம் பாதிக்கப்பட்டது. வியட்நாம் போரின் முடிவுக்கு பின்னர் மேகங்களை ஆயுதமாக பயன்படுத்துவது சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டது.
அதிர்ஷ்டத்தின் அடையாளம் :
சீனாவில் மேகங்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றன. மேகங்களின் உருவங்களை வைத்து சில மேகங்கள் மங்களகரமான மேகங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது, சீன விளையாட்டு வீரர்களின் சீருடையில் அதிர்ஷ்ட மேகங்கள் உருவம் பதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது!