உங்களுடைய பள்ளி அல்லது கல்லூரி வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் இருந்தார்கள்?
ஐம்பது? நூறு? அதற்குமேல் மாணவர்கள் இருந்தால் ஆசிரியர்களால் அனைவருக்கும் முழுக் கவனத்தை வழங்கிப் பாடம் நடத்த இயலாது. அதனால், ஒரு வகுப்பறை என்பது இந்த அளவில்தான் இருக்கவேண்டும் என்கிற வரம்பு இருக்கிறது.
ஆனால், இதெல்லாம் பழைய கதை. இன்றைக்கு ஆயிரக்கணக்கானோர், லட்சக்கணக்கானோர் ஒரே வகுப்பில் அமர்ந்து படிக்கிற வகுப்பறைகள் வந்துவிட்டன. டிஜிட்டல் தொழில்நுட்பம் அதற்கு வழிசெய்துள்ளது. அதன் மூலம் உலகெங்கும் ஏராளமானோருக்குப் புதிய வாசல்கள் திறக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, நீங்கள் சந்தைப்படுத்துதலைக் (மார்க்கெட்டிங்) கற்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முன்பு நீங்கள் இதற்கென்று ஒரு கல்லூரியில் பணம் கட்டிச் சேரவேண்டியிருக்கும். அப்படி ஒரு கல்லூரி உங்கள் ஊரில் இருக்கவேண்டும். அதில் சேரத் தேவையான வயது, கல்வித் தகுதி, குறைந்தபட்ச மதிப்பெண் போன்றவை உங்களிடம் இருக்கவேண்டும். இல்லாவிட்டால், உங்களால் விரும்பியதைப் படிக்கமுடியாது.
இன்றைக்கு, இந்தக் கட்டுப்பாடுகள் எவையும் இல்லாமல் உலகின் மிகச் சிறந்த சந்தைப்படுத்தல் வல்லுனர்களிடம் நீங்கள் நேரடியாகப் படிக்கலாம், பல மணிநேர வகுப்புகளை உங்கள் கணினியில் அல்லது செல்ஃபோனில் கேட்கலாம், ஐயங்களைக் கேட்டுத் தெளிவுபெறலாம், கற்றுக்கொண்டதைச் செயல்படுத்திக் கூடுதல் பயிற்சி பெறலாம், தேர்வு எழுதி மதிப்பெண் வாங்கலாம். இவை அனைத்தும் அனைவருக்கும் இலவசம். இருந்த இடத்திலிருந்து எதையும் கற்றுக்கொள்கிற இந்த வசதியை MOOC (Massive Open Online Courses), அதாவது, மிகப் பெரிய, திறந்தநிலை இணையப் படிப்புகள் என்கிறார்கள்.
இந்த வகுப்புகள் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களாக, கட்டுரைகளாக, கேள்வி, பதில் அல்லது பயிற்சிகளாக வழங்கப்படுகின்றன. அத்துடன் Forum எனப்படும் உரையாடல் மன்றங்கள் இணைக்கப்பட்டிருப்பதால், மாணவர்கள், ஆசிரியர்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொள்ளலாம், கற்றவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம், கேள்வி கேட்கலாம், கூடுதல் விளக்கங்களைப் பெறலாம்.
இணையவழிக் கல்வியின் மிகப் பெரிய நன்மை, மாணவர்கள் தாங்கள் விரும்பும் வேகத்தில் படிக்கலாம் என்பதுதான். எடுத்துக்காட்டாக, பேருந்தில் கல்லூரிக்கு அல்லது வேலைக்குச் செல்கிற ஒருவர் நாள்தோறும் காலையில் 15 நிமிடம், மாலையில் 15 நிமிடம் என்று சில வாரங்களில் ஒரு படிப்பை முடித்துவிடலாம். இன்னொருவர் ஒரே நாளில் பத்து மணி நேரம் உட்கார்ந்து அந்தப் படிப்பை முடிக்கலாம். இப்படி ஒவ்வொருவரின் வசதிக்கேற்ப இந்தப் படிப்புகள் நீள்கின்றன, சுருங்குகின்றன.
கணக்கு, அறிவியல், வரலாறு, தத்துவம் என்று தொடங்கி நவீனத் தொழில்நுட்பங்கள், மென்கலைகள் என்று அநேகமாக எல்லாவற்றையும் இலவசமாகக் கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையை இன்றைய இணையம் வழங்குகிறது. அதனால் கல்வித் தரம் குறைவாக இருக்குமோ என்கிற தயக்கம் வேண்டாம். பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள் தங்களுடைய படிப்புகளையெல்லாம் சேவை மனப்பான்மையுடன் திறந்துவைத்திருக்கிறார்கள். ஆர்வமும் உழைப்பும் நேரமும் இருக்கிறவர்களுக்கு இவை தங்கச் சுரங்கம்தான்.
இன்னொருபக்கம், பணம் கொடுத்துப் படிக்கின்ற இணையப் படிப்புகளும் இருக்கின்றன. இவற்றைத் தனித்தனியாகத் தேர்ந்தெடுத்து வாங்கிப் படிக்கலாம். அல்லது, ஒரு குறிப்பிட்ட சந்தாத் தொகையைச் செலுத்திவிட்டால் விருப்பம்போல் எதை வேண்டுமானாலும் படிக்கலாம்.
ஒவ்வொரு நாளும் இணையத்தில் நாம் எவ்வளவு நேரத்தை வீணடிக்கிறோம் என்று யோசியுங்கள். அதை இப்படிக் கல்வியின்பக்கம் திருப்பமுடியுமானால், வாழ்நாள்முழுக்க மாணவர்களாக இருக்கலாம், புதியவற்றைக் கற்றுக்கொள்ளலாம். தங்களுடைய திறமைகளைத் தொடர்ந்து கூர்தீட்டிக்கொள்கிறவர்களுக்கு உலகில் எப்போதும் புதிய வாய்ப்புகள் ஏராளமாகக் கிடைக்கின்றன.