
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் மிகவும் சாதாரணமாக மாறியுள்ளன. பணத்தை அனுப்பவும் பெறவும் மிகவும் எளிதாகவும் வேகமாகவும் இருக்கிறது. காசோலை எழுதுதல், வங்கியில் வரிசையில் நின்று பணம் செலுத்துதல் போன்ற பழைய முறைகளை இன்று பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. சிறிய கடைகளில் இருந்தும் பெரிய வணிக மையங்களிலும், நண்பர்களிடையேயும் கூட பணப் பரிமாற்றம் செய்ய இந்த யுபிஐ பண பரிவர்த்தனை அனைவராலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வசதிகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் யாரென்று பார்க்கும்போது, அதில் இளைய தலைமுறையினரே முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் நாள்தோறும் சுமார் 5 முதல் 10 தடவைகள் வரை யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் செய்து வருகிறார்கள். ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் பயன்படுத்தினால், சில ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இதை பற்றிய முக்கியமான விழிப்புணர்வு குறிப்புகளை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மோசடி அழைப்புகள்:
யுபிஐ கட்டணம் நிறுத்தப்பட்டுள்ளது அல்லது இந்த லிங்கை கிளிக் செய்து KYC புதுப்பிக்கவும் போன்ற போலி மெசேஜ்கள் அதிகளவில் பரவி வருகின்றன. இது போன்ற லிங்குகள் மூலம் ஹேக்கர்கள் மற்றும் சைபர் குற்றவாளிகள் உங்கள் வங்கிக் கணக்கை ஹேக் செய்யலாம். எனவே, இது போன்ற அழைப்புகள் மூலம் வரும் லிங்குகளை கிளிக் செய்யக்கூடாது. வங்கியின் அதிகாரப்பூர்வ செயலியை மட்டும் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
பின் (Pin) பகிர்வது ஏன் தவறு?
சில நேரங்களில், நண்பர்கள் அல்லது அறிமுகம் இல்லாதவர்கள் “உங்களிடம் யுபிஐ பின் (Pin) சொல்லுங்கள்” என்று கேட்டால் சொல்லிவிடும் நிலை ஏற்படலாம்.
அவ்வாறு பின்களை பகிர்வது மிகவும் ஆபத்தானது. பின்கள் என்றும் ரகசியமானதாக இருக்க வேண்டும். அதை யாரிடமும் பகிரக்கூடாது.
பணத்தை அனுப்பும் முன் சரிபார்த்தல்:
பொதுவாக யுபிஐ ஐடியை சரியாக பார்க்காமல் பணம் அனுப்பும்போது, அது தவறான நபரிடம் சென்றுவிடலாம். இந்நிலையில், பணம் அனுப்பும் முன், பெயர், ஐடி அனைத்தும் சரியாக உள்ளதா என இருமுறை சரிபார்ப்பது சிறந்தது.
பண செலவுகளை கட்டுப்படுத்துங்கள்:
யுபிஐ-ன் வசதியால் பலர் எந்த செலவுகளையும் யோசிக்காமல் செலவழிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படி இல்லாமல், தினசரி செலவுகளை பதிவு செய்து கணக்குடன் பணம் செலவழிக்க பழகுங்கள்.
பாதுகாப்பான இணையம் அவசியம்:
பொதுமக்கள் பொதுவில் உள்ள Wi-Fi மூலம் பரிவர்த்தனை செய்வது பாதுகாப்பற்றதாக இருக்கலாம். எனவே, பாதுகாப்பான நெட்வொர்க்கில் மட்டுமே பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
பண பரிமாற்றம் வரலாற்றை கண்காணியுங்கள்:
உங்கள் யுபிஐ மூலம் தவறான பரிவர்த்தனைகள் நடந்திருக்கிறதா என்று அடிக்கடி பார்வையிட வேண்டும். சந்தேகத்துக்கிடமான எந்த ஒரு பண பரிமாற்றத்தையும் கவனித்தால் உடனடியாக வங்கியை தொடர்பு கொள்ளவும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நம்மை வேகமாகவும் வசதியாகவும் நகர்த்தும் ஒரு நவீன கருவியாக இருந்தாலும் கூட, அதன் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றாவிட்டால், நம் சொத்துகள் ஆபத்தில் சிக்கலாம். குறிப்பாக இளம் தலைமுறை, தொழில்நுட்பத்தில் தெளிவு கொண்டவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் கவனக்குறைவு மூலமாக மோசடிக்கு இரையாகின்றனர். எனவே, யுபிஐ-யை நம்பிக்கையுடன் பயன்படுத்துங்கள். விழிப்புணர்வும் பாதுகாப்பும் சேரும் போது மட்டுமே டிஜிட்டல் வாழ்க்கை நமக்கான வெற்றியின் பாதையாகும்.