
பத்தாண்டுகளுக்குமுன் யாரிடமாவது சென்று, 'நீங்க அதிகம் படிக்கிறது யாருடைய எழுத்தை?' என்று கேட்டால், கல்கி, சுஜாதா, பாலகுமாரன், ராஜேஷ்குமார், சுந்தர ராமசாமி, சிவசங்கரி என்று ஒவ்வொருவரும் வெவ்வேறு எழுத்தாளருடைய பெயரைச் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு யாரிடமாவது அதே கேள்வியைக் கேட்டால், எந்த எழுத்தாளருடைய பெயரும் பதிலாக வராது, அவருடைய நண்பர் அல்லது உறவினர் ஒருவருடைய பெயர்தான் வரும், 'ஃபேஸ்புக்ல அவர் எழுதற பதிவுகளையெல்லாம் நான் விரும்பிப் படிக்கறேன்' என்பார்கள்.
அதேபோல், 'நீங்க யார் எடுத்த படங்களை அதிகம் பார்க்கறீங்க?' என்று கேட்டால் யாரும் ஒரு திரைப்பட இயக்குநர் பெயரைச் சொல்லமாட்டார்கள், பொதுமக்களில் ஒருவர் பெயரைத்தான் சொல்வார்கள், 'அவர் வெளியிடற படங்களெல்லாம் எனக்கு உசிரு' என்பார்கள்.
இத்தனைக்கும் அவர்கள் சொல்லும் 'படம்' என்பது ஒரு செல்ஃபோனில் இயல்பான பின்னணியில் இரைச்சல் ஒலியுடன் பதிவுசெய்யப்பட்டதாகத்தான் இருக்கும். ஆனாலும், அப்படிப்பட்ட காட்சித் துணுக்குகளைத்தான் மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். நன்கு திட்டமிடப்பட்டு, சிறப்பாக எழுதப்பட்டு, பெரிய அரங்கத்தில் விலையுயர்ந்த கருவிகளைக் கொண்டு துல்லியமாகப் பதிவுசெய்யப்பட்ட காட்சிகள்தான் நல்ல பொழுதுபோக்கு என்ற எதிர்பார்ப்பு இன்றைக்கு இல்லை.
ஏனெனில், ஊடகங்களை நாம் எப்படி அணுகுகிறோம் என்கிற அடிப்படை இந்தப் பத்தாண்டுகளில் தலைகீழாக மாறிவிட்டது. முன்பு செய்தித்தாள்கள், வார, மாத இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றுக்கு இருந்த இடத்தை இப்போது சமூக ஊடகங்கள் எடுத்துக்கொண்டுவிட்டன. இது பயனர் உருவாக்கும் உள்ளடக்கங்களின் (User Generated Content) காலம்.