
மிக உயரமான அலுவலகக் கட்டடங்களின் வெளிப்பகுதிகள் பெரும்பாலும் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதன்மூலம் அந்தக் கட்டடங்களின் தோற்றம் அழகாவது உண்மைதான். ஆனால், அந்தக் கண்ணாடிகளைத் தூய்மைப்படுத்துவது எத்தனைப் பெரிய வேலை என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?
உயர்ந்த கட்டடங்களின் கண்ணாடிகளைத் தேய்த்துக் கழுவித் தூய்மைப்படுத்துவதற்கென்று சிறப்புப் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கட்டடத்தின் உச்சியில் கட்டித் தொங்கவிடப்பட்ட கயிறுகளில் தொங்கியபடி மிகுந்த திறமையுடனும் துணிச்சலுடனும் தூய்மைப் பணியில் ஈடுபடுவார்கள். அதைக் கீழிருந்து பார்க்கும்போது, ஒருவேளை அவர்களுடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்று நம் மனம் பதறும்.
வருங்காலத்தில், தொழிலாளர்கள் இப்படி உயிரைப் பணயம் வைத்துக் கண்ணாடிகளைத் தூய்மைப்படுத்தவேண்டியிருக்காது. ஒரு பொத்தானை அழுத்தினால் சில சிறப்புக் கருவிகள் சர்ரென்று பறந்து சென்று ஒவ்வொரு கண்ணாடியாகத் தூய்மைப்படுத்திவிட்டு வந்துவிடும்.
Unmanned Aerial Vehicles (ஆளில்லா வான் வண்டிகள்) எனப்படும் இந்தக் கருவிகளை டுரோன்கள் (Drones) என்று செல்லமாகவும் அழைக்கிறார்கள். தொடக்கத்தில் ராணுவப் பயன்பாட்டுக்கென உருவாக்கப்பட்ட டுரோன்கள் இப்போது பொதுமக்களுடைய, நிறுவனங்களுடைய பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. புகைப்படம், வீடியோ எடுத்தல், கண்காணித்தல், பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டுசெல்லுதல், வயல்களுக்கு உரம் போடுதல், மனிதர்கள் எளிதில் செல்ல இயலாத இடங்களுக்குச் சென்று பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுதல் என்று பல்வேறு வகைகளில் பயன்படுகின்றன.