வீழ்ச்சியை சந்திக்கும் Threads செயலி.

வீழ்ச்சியை சந்திக்கும் Threads செயலி.

ட்விட்டர் செயலிக்குப் போட்டியாக வெளியிடப்பட்ட Threads செயலி தொடங்கிய நாள் முதலே அதிகப்படியான பயனர்கள் அதில் இணையத் தொடங்கினர். தொடங்கிய மூன்று நாள்களிலேயே பத்து மில்லியன் டவுன் லோடுகளைப் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது அதன் பயனர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் பயனர்கள் அந்த செயலியில் இணைய ஆரம்பித்தனர். இதனால் எலான் மஸ்கின் சாபத்திற்கு உள்ளான Threads செயலி, தற்போது சரிவை சந்தித்து வருகிறது. பயனர்களும் திரெட் செயலி தொடர்பான பல கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, த்ரெட் செயலியின் தினசரி பயனர் எண்ணிக்கை வீழ்ச்சியைக் கண்டது தெரியவந்தது. மேலும் த்ரெட் செயலியை பயன்படுத்துவோர் அதில் செலவிடும் நேரம் கடுமையாகக் குறைந்துள்ளது. 

அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது, கடந்த ஜூலை 11,12 ஆம் தேதிகளில் த்ரெட் செயலியின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஜூலை 9ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது சுமார் 20% பயனர்கள் குறைந்துள்ளனர். தொடக்கத்தில் பயனர்கள் இதில் செலவழிக்கும் நேரம் 20 நிமிடங்களிலிருந்து தற்போது 10 நிமிடமாகக் குறைந்துள்ளது. 

இதுகுறித்து பேசிய மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், "திரெட் செயலி இன்னும் அதன் ஆரம்ப நாட்களில் தான் இருக்கிறது. தொடக்கத்தில் இந்த செயலிக்கு கிடைத்த வெற்றியைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக பயனர்கள் இதில் இணைந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. இதை நாங்கள் வெளியிட்டு முழுமையாக இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை. எங்கள் கவனம் முழுவதும் நிலையான செயல்திறனை உறுதி செய்வதிலும், புதிய அம்சங்களை வழங்குவதிலும், பல மேம்படுத்தல்களை செய்வதிலும் உள்ளது" என்று கூறினார். 

அவர் கூறுவது போலவே திரெட் செயலி அறிமுகமான ஐந்தே நாட்களில் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் அதில் இணைந்தனர். இருப்பினும் தற்போது இந்த செயலியின் போக்கைப் பார்த்தால், இதை பலரும் ஒரு ஆசைக்காக மட்டுமே பயன்படுத்தி உள்ளனர் என்பது தெரிகிறது. பயனர்களின் விருப்பத்தை Threads செயலி பூர்த்தி செய்யாதபோது, இது மேலும் வீழ்ச்சியை சந்திக்கும் என சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com