கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் VR மற்றும் AR!

VR and AR
VR and AR

- மரிய சாரா

இன்றைய வளர்ந்துவரும் கணினி யுகத்தில், மெய்நிகர் உணர்வு (VR) மற்றும் விரிவாக்கப்பட்ட உணர்வு (AR), ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களும் கல்வித் துறையில் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தி, கற்றலை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், ஈடுபாடுமிக்கதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதில் பெரும்பங்கு ஆற்றுகின்றன.

மெய்நிகர் உணர்வு (Virtual Reality):

மெய்நிகர் உணர்வு (VR) என்பது முழுமையாகக் கணினியால் உருவாக்கப்பட்ட சூழலுக்குள் மாணவர்களைக் கொண்டுசென்று கற்பிக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். VR உபகரணங்களை அணிவதன் மூலம், மாணவர்கள் ஒரே நேரத்தில் பலவிதமான இடங்களைத் தாங்கள் அந்த இடத்தில் நேரில் இருப்பதைப்போல உணர்ந்து, ஆராய்ந்து கற்க முடியும். உதாரணமாக, வரலாற்று பாடங்களை கற்பதற்கு, அவர்கள் பண்டைய கால நாகரிகங்களை நேரடியாக உணர்ந்து பார்க்கும் அனுபவத்தைப் பெற VR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இதன்மூலம், அவர்கள் அந்தக் காலக்கட்டத்தை நேரடியாக உணரமுடியும். இதனால் கற்றல் மிகவும் எளிமையானதாகவும், ஆர்வமூட்டுவதாகவும் அமையும்.

விரிவாக்கப்பட்ட உணர்வு (Augmented Reality):

விரிவாக்கப்பட்ட உணர்வு (AR) என்பது நிஜ உலகின் சூழலில் மெய்நிகர் தகவல்களைத் திரையிட்டு காட்டுவது ஆகும். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை மெய்நிகர் முறைமைவுடனும் ஒன்றிணைத்தும் காணலாம். உதாரணமாக, அறிவியல் பாடங்களில், மிலின் அமைப்புகள், மூலக்கூறு அமைப்புகள் போன்றவற்றை AR மூலம் 3D வடிவில் காணலாம். இதனால், மாணவர்கள் பொருட்களின் செயல்பாட்டை மிக ஆழமாகவும், தெளிவாகவும் புரிந்துகொள்ள முடியும்.

கல்வியில் பயன்பாடுகள் என்ன?

விளக்கக்காட்சிகள் மூலம் கற்றல்:

VR மற்றும் AR மூலம் வரலாற்று நிகழ்வுகள், அறிவியல் பரிசோதனைகள், மற்றும் பூகோளம் போன்ற பாடங்களை மாணவர்கள் நேரடியாக விளக்க காட்சிகள் மூலம் கற்கமுடியும். இதனால், அவர்கள் வெறும் பார்வையாளராக இல்லாமல், ஆராய்ந்து அனுபவித்து தெளிவு பெறுகின்றனர்.

தொடர்புபடுத்தி கற்றல்:

VR மற்றும் AR இந்த இரண்டு தொழில்நுட்பங்களும், மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த கற்றல் அனுபவத்தை வழங்குகின்றன. இந்த முறை கற்றலில் மாணவர்கள் நேரடியாக ஈடுபடுவதால், அவர்களது நினைவாற்றலும், புரிதலும் மேம்படும்.

தொழிற்துறை பயிற்சி:

தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பக் கற்றலில், VR மற்றும் AR மிகப் பெரிய பங்காற்றுகின்றன. மாணவர்கள் தொழில்நுட்ப செய்முறை வேலைப்பாடுகளை நேரடியாக கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, மெய்நிகர் சூழலில் பயிற்சி பெறும்போது, அவர்களுக்கான பயிற்சி என்பது மிகச் சுலபமானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமைகிறது.

இதையும் படியுங்கள்:
Digital Arrest Scam: மக்களை அச்சுறுத்தும் மற்றொரு மோசடி!
VR and AR

சவால்கள் என்ன?

செலவு:

VR மற்றும் AR தொழில்நுட்பங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இதனால் இந்தத் தொழில்நுட்பத்தை அனைத்து பள்ளிகளிலும் பயன்படுத்துவது என்பது இயலாத ஒன்றாகிறது.

கட்டுப்பாடு:

VR ஹெட்செட்டுகளை அதிக நேரம் பயன்படுத்தினால் கண்களுக்குச் சோர்வினை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மாணவர்களுக்கு கண்கள் சார்ந்த பாதிப்புகளுக்கு வாய்ப்புகள் அதிகம்.

கல்வித்துறையின் வருங்காலம் என்பது மெய்நிகர் உணர்வு மற்றும் விரிவாக்கப்பட்ட உணர்வு தொழில்நுட்பங்களை அதிகம் கொண்டதாகவே அமையும் என்பதால், கல்வியில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், மாணவர்கள் முழுமையான புரிதலுடன், படிப்பில் ஆர்வமுள்ளவர்களாகவும் வளரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com