
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி அங்கேயே நீண்ட நாட்கள் தங்க வைக்கும் முயற்சியில் நாசா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. எனவே மனிதர்கள் விண்வெளியில் தங்குவதற்கு தேவையான ஆக்ஸிஜன், தண்ணீர், உணவுகள், வீடு, எரிபொருள் என எல்லா தேவைகளையும் உருவாக்க அவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.
ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் அவை அனைத்தையும் விண்வெளி சூழலுக்கு ஏற்றார் போல நாம் உருவாக்க வேண்டும். எனவே அதற்கான முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தாய்லாந்து விஞ்ஞானிகள் விண்வெளி வீரர்களுக்கான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கான ஆதாரமாக விளங்கும் பூமியில் உள்ள 'வாட்டர் மீல்' என்ற தாவரத்தின் தன்மையை ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த வகை சிறிய தாவரம் வாத்துப்பூச்சியை விட மிகச் சிறியதாகும். குறிப்பாக தாய்லாந்து மற்றும் பிற ஆசிய நாட்டு நீர் நிலைகளில் காணப்படும் தண்டுகள் இல்லாத தாவரமாக இவை இருக்கின்றன. இவற்றின் எளிமையான தன்மை மற்றும் விரைவாக வளரும் வளர்ச்சி விகிதம், ஆய்வாளர்கள் இதை ஆராய்ச்சி செய்வதற்கான தேர்வாக மாற்றியது.
இந்தத் தாவரத்தில் தண்டுகள், வேர்கள், இலைகள் என எதுவும் இல்லை என்பதால், நீர் இருந்தாலே அதில் வளரும் தன்மை இதற்கு உண்டு. ஒளிச்சேர்க்கை மூலமாக அதிக அளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து, புரோட்டீனின் சிறந்த மூலமாகவும் இது திகழ்கிறது. இந்த தாவரத்தை ஒருவர் 100% அப்படியே உட்கொள்ளலாம். இதில் மனித உடலுக்குத் தேவையான எல்லா விதமான சத்துக்களும் அடங்கியுள்ளது. மேலும் இது வேகமாக வளரும் என்பதால் விண்வெளி விவசாயத்திற்கு தகுந்த தாவரமாக இதைப் பார்க்கலாம்.
இந்தத் தாவரத்தை பல கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்த பிறகு, இதற்கான சரியான முடிவை எடுப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இதனால் விண்வெளியில் ஒரு நிலையான விவசாயத்திற்கு வழிவகை செய்ய முடியும். இந்த சோதனை வெற்றியடைந்தால் விண்வெளி வீரர்கள் விண்வெளியிலேயே இந்த வாட்டர்மீலை விவசாயம் செய்து உணவாக எடுத்துக் கொள்ளலாம்.