ரோபோக்கள் உலகை கைப்பற்றினால் என்ன ஆகும்? 

Robots
What if robots take over the world?

தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இன்றைய உலகில் ரோபோக்கள் நமது அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொழிற்சாலைகளில் உற்பத்தி முதல் வீட்டு வேலைகள் வரை பல்வேறு துறைகளிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் “ரோபோக்கள் ஒருநாள் உலகை கைப்பற்றி விடுமோ?” என்ற அச்சம் பலரது மனதிலும் எழுகிறது. இந்த கற்பனையான கேள்விக்கான பதிலைத்தான் இப்பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். 

ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் ஏற்கனவே உற்பத்தி, சுகாதாரம் மற்றும் வாடிக்கையாளர் சேவை என பல்வேறு தொழில்களில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. அவற்றால் மனிதர்களை விட அதிக துல்லியம் மற்றும் செயல்திறனுடன் பணிகளை தொடர்ச்சியாக செய்ய முடியும். இதைத் தொடர்ந்து ஒருவேளை இந்த உலகத்தை ரோபோக்கள் கைப்பற்றினால், அதன் விளைவுகள் எல்லா விதங்களிலும் இருக்கும். 

உங்களைச் சுற்றிப் பாருங்கள், சில ரோபோக்கள் செஸ் விளையாடுகின்றன, ஹோட்டல்களை கவனித்துக் கொள்கின்றன, அறுவை சிகிச்சை அறைகளில் மருத்துவர்களுக்கு உதவுகின்றன, ஆட்டோமேட்டிக் ஸ்வீப்பர்கள் தரையை சுத்தம் செய்கின்றன, சில ரோபோக்கள் விலங்குகளின் கழிவுகளை நீக்குகின்றன, மேலும் பல வேலைகளை அவை செய்கின்றன. ஒரு நாள் எல்லா கருவிகளும் மனிதர்கள் சொல்வதை கேட்காமல் தானாக முடிவெடுத்தால் என்ன ஆகும்? 

என்ன டெர்மினேட்டர் திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறதா? ஆனால் கவலைப்படாதீர்கள், இத்தகைய ரோபோக்களிடமிருந்து எளிதாக தப்பிப் பிழைக்கலாம். அவை அனைத்தையும் வெளியே தள்ளி வீட்டு கதவை மூடினால் போதும். என்னதான் கணக்கு போடுவதில் அவை துல்லியமாகவும், வல்லுனராகவும் இருந்தாலும் மூடிய கதவை எப்படி திறப்பது என்பது அவற்றிற்கு தெரியாது. அவை அனைத்துமே ப்ரோக்ராம் செய்யப்பட்ட விஷயங்களை மட்டுமே செய்யக்கூடியவை.

நீங்கள் இணையத்தில் பார்த்திருக்கலாம், நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரோபோவின் எதிரே ஒரு தடையை வைத்தால், அது போய் நேராக முட்டிக் கொண்டிருக்கும். ஆனால் சில செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள், தானாக சிந்தித்து முடிவுகளை எடுக்கக்கூடியவை. இவற்றிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். 

இத்தகைய ரோபோக்கள் மூர்க்கத்தனமாக இருந்தால் மனிதர்களை அடிமைப் படுத்துவது அல்லது அழிப்பது போன்ற செயல்களில் இறங்கலாம். இது மனித குலத்தின் முடிவுக்கு வழிவகுக்கும், அல்லது மனிதர்கள் ரோபோக்களுக்கு அடிபணிந்த இனமாக மாறுவார்கள். மனிதர்களை முழுமையாக கட்டுப்படுத்தி அவர்களின் சுதந்திரம் பறிக்கப்படலாம். 

ஒருவேளை ரோபோக்கள் நல்ல நோக்கத்துடன் இருந்தால் மனிதர்களுடன் சேர்ந்து வாழ பழகிக்கொள்ளும். ரோபோக்களின் மேம்பட்ட திறன்கள் மனித சிக்கல்களைத் தீர்க்கவும் மனித வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தவும் பயன்படும். ரோபோக்கள் மனிதர்களுடன் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினராக மாறி மகிழ்ச்சியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. 

இதையும் படியுங்கள்:
Optimus Robot: டெஸ்லாவின் அட்டகாசமான ரோபோ… 2025-ல் விற்பனைக்கு வருகிறதா? 
Robots

ரோபோக்கள் உலகை கைப்பற்ற முடியுமா? 

என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வந்தாலும் ரோபோக்கள் மனிதர்களை விட பலவீனமானவை. அவற்றால் சுயமாக சிந்தித்து செயல்படும் ஆற்றல் மிக மிகக் குறைவு. ஏற்கனவே இருக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே அவை செயல்படும். மனிதர்களைப் போல உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு செயல்பட அவற்றால் முடியாது. ரோபோக்களை உருவாக்குவது பராமரிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது மனிதர்களையே சார்ந்தது என்பதால், ரோபோக்கள் மனிதர்களை மீறி இந்த உலகைக் கைப்பற்றுவது சாத்தியமில்லாதது. 

ரோபோக்கள் உலகை கைப்பற்றுவது கற்பனையானது என்றாலும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யாரும் உறுதியாக சொல்ல முடியாது. எனவே தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவதும், மனிதர்களின் கட்டுப்பாட்டில் ரோபோக்கள் இருப்பதை உறுதி செய்வதும் முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com