
ஒரு பெரிய நிறுவனத்தின் ஆண்டுவிழாவுக்குச் சென்றிருந்தேன். அந்த விழா ஓர் ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எல்லாருக்கும் ஒரு பெரிய சமையல் கலைஞருடைய கைவண்ணத்தில் சுவையான உணவு பரிமாறப்பட்டது.
ஆனால், அங்கு பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் அங்கு சமைக்கப்படவில்லை. பெரும்பாலான உணவுகளை அந்த விடுதியின் அதிநவீன, எல்லா வசதிகளையும் கொண்ட மையச் சமையலறையில் சமைத்துக் கொண்டுவந்திருந்தார்கள். தோசை, நான், ரொட்டி, ஜிலேபி போன்ற சில உணவுகளைமட்டும் அந்த இடத்திலேயே சமைத்துச் சுடச்சுடப் பரிமாறினார்கள்.
ஒருவேளை, ஏற்கெனவே சமைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் தீர்ந்துவிட்டால்?
அதைக் கவனிப்பதற்கென்று ஒருவர் அங்கு இருந்தார். அவர் எந்தெந்த உணவுகள் தீரப்போகின்றன என்பதைக் கவனித்து உடனுக்குடன் மையச் சமையலறைக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களில் பணியாளர்கள் அங்கிருந்து மேலும் உணவுகளைக் கொண்டுவந்து நிரப்பினார்கள்.
சில நாட்களுக்குப்பிறகு, நான் இன்னோர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அந்த அலுவலகத்தில் எனக்கு ஒரு சின்ன வேலை இருந்தது. ஆனால், அந்த வேலையைச் செய்துமுடிப்பதற்கு நான்கு மணிநேரம் ஆகிவிட்டது. ஏனெனில், அந்த அலுவலகத்தைச் சேர்ந்த கணினித் தொழில்நுட்பக் கலைஞர்கள் மேற்சொன்ன நட்சத்திர விடுதியின் விருந்தோம்பல் பிரிவினரைப்போல் அறிவோடு செயல்படவில்லை.