வானில் விரியும் மாயாஜாலம்: டிரோன் ஒளிக்காட்சியின் பின்னணியில் உள்ள அறிவியல்!

இப்போதெல்லாம், நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளில் டிரோன் ஒளிக்காட்சி ஒரு புத்துணர்ச்சியூட்டும் போக்காக விளங்குகிறது.
Drone Show
Drone ShowAI Image
Updated on

திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் இப்போது வாணவேடிக்கைகளுக்கு பதிலாக வானில் நூற்றுக் கணக்கான டிரோன்கள் இணைந்து வண்ணமயமான உருவங்களை உருவாக்குவதை காண்கிறோம். பார்ப்பதற்கு மாயாஜாலம் போல தெரிந்தாலும், இதன் பின்னணியில் உள்ள வியக்கத்தக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்வோம்.

வானில் டிரோன் ஒளிக்காட்சி (Drone Light Show) என்பது நூற்றுக்கணக்கான டிரோன்கள் ஒருங்கிணைந்து, இரவு வானில் வண்ணமயமான விளக்குகளுடன் பிரமிக்க வைக்கும் பல்வேறு வடிவங்களை உருவாக்கும் மற்றும் வண்ணங்களை உருவாக்கும் ஒரு கண்கவர் கலை, பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்ப நிகழ்ச்சியாகும்.

இதற்கு பிரத்யேக மென்பொருள், மையக் கணினி மற்றும் ஜி.பி.எஸ் (GPS) வழிகாட்டுதல் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. முதலில், கணினியில் பிரத்யேக அனிமேஷன் மென்பொருளைப் பயன்படுத்தி, வானில் காட்ட வேண்டிய உருவங்கள் மற்றும் வண்ணங்கள் வடிவமைக்கப் படுகின்றன.

இதையும் படியுங்கள்:
மேகாலயாவில் டிரோன் மூலம் மருந்து விநியோகம்!
Drone Show

அதாவது வானில் பறக்கும் டிரோன்கள் ஒளியின் சிறிய புள்ளிகளாகச் செயல்பட்டு, பல்வேறு உருவங்கள் (எ.கா: பறவைகள், விலங்குகள், லோகோக்கள், கலாச்சார சின்னங்கள்) அல்லது எழுத்துக்களைத் திரையில் வரைவது போல் உருவாக்குகின்றன. இந்த காட்சிகள் பெரும்பாலும் பின்னணி இசையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்கப் படுகின்றன.

வடிவமைக்கப்பட்ட உருவங்களின் அடிப்படையில், ஒவ்வொரு டிரோனும் பறக்க வேண்டிய துல்லியமான பாதை, வேகம் மற்றும் நேரம் ஆகியவை கணினியால் கணக்கிடப்படுகின்றன. நிகழ்வின்போது, மையக் கட்டுப்பாட்டு கணினி அனைத்து டிரோன்களுக்கும் ஒரே நேரத்தில் சிக்னல்களை (TCP/IP மற்றும் WiFi மூலம்) அனுப்பி இயக்கும்.

வானில் நூற்றுக்கணக்கான டிரோன்கள் பறந்தாலும், அவை அனைத்தையும் தரைப்பகுதியில் இயங்கும் தனித்துவமான கணினி மென்பொருள் ஒரு தலைவனை போல ஒருசேர கட்டுப்படுத்துகிறது.

ஒவ்வொரு டிரோனிலும் ஒரு சக்திவாய்ந்த எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்டிருக்கும். கணினியில் முன்கூட்டியே திட்டமிட்டபடி எந்தெந்த டிரோன் எந்த வினாடியில் என்ன நிறத்தில் ஒளிரவேண்டும் என்ற கட்டளைகள் துல்லியமாக பின்பற்றப்படுகின்றன.

ஒவ்வொரு டிரோனும் மிகத்துல்லியமாக இயங்குவதை உறுதிசெய்ய, மேம்படுத்தப்பட்ட ஜி.பி.எஸ் மற்றும் அதிநவீன சென்சார்கள் மூலம் கட்டளைகள் கொடுக்கப்படுவதால் டிரோன்கள் ஒருபோதும் ஒன்றின்மேல் ஒன்று பொருந்தவோ அல்லது ஒன்றையொன்று மோதிக் கொள்ளாமல் துல்லியமாக இயங்கும். இவை வானில் நடனமாடும்போது ஒன்றோடொன்று மோதிக்கொள்ளலாமல் இருக்க ஜிபிஎஸ் தொழில்நுட்பம் உதவுகிறது.

ஒரு டிரோன் ஒளிக்காட்சியை உருவாக்குவது என்பது, ஆரம்ப வடிவமைப்பு முதல் ஏவும் தருணம் வரை ஒரு துல்லியமான செயல்முறையைக் கொண்டுள்ளது:

அனிமேட்டர்கள் கணினியில் 2D அல்லது 3D கிராபிக்ஸ்களை உருவாக்குகிறார்கள். பறக்கும் ஒவ்வொரு டிரோனுக்கும் தனித்தனி பாதை (GPS coordinates) நிர்ணயிக்கப்படும். அதாவது ஒவ்வொரு டிரோனுக்கும் அது நிற்க வேண்டிய இருக்கை எண்(பொசிஷன்) மிகச்சரியாக கொடுக்கப்பட்டிருக்கும்.

ஆயிரக்கணக்கான மின்மினி பூச்சிகள் ஒன்றாக சேர்ந்து ஒரு உருவத்தை உருவாக்கினால் எப்படி இருக்குமோ, அதே போல இந்த டிரோன்கள் அனைத்தும் கணினியின் கட்டளைக்கு ஏற்ப ஒருங்கிணைந்து செயல்பட்டு, வானத்தை ஒரு பெரிய ஒவியத்திரையாக மாற்றி விடுகின்றன. இந்த கண்கவர் காட்சி ஒரு பிரம்மாண்டமான "பறக்கும் திரையாக" செயல்படுகிறது; இதில் ஒவ்வொரு டிரோனும் ஒரு தனித்த பிக்சலாக (pixel) அமைகிறது.

இப்போதெல்லாம், நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளில் டிரோன் ஒளிக்காட்சி ஒரு புத்துணர்ச்சியூட்டும் போக்காக விளங்குகிறது.

பாரம்பரியமாக வானில் வெடிக்கப்படும் புகையும் சத்தமும் தந்து சுற்றுச்சுழலை மாசுபடுத்தும் பட்டாசுகளுக்கு பதிலான மாற்று வழியாகவும், பிரம்மாண்ட விளம்பரங்களாகவும் அறிவியலை பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த ஒளிக்காட்சிகள் தற்போது உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இது சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் புகை மற்றும் அதிக சத்தம் இன்றி மிகவும் அமைதியாக இயங்கக்கூடியது.

இதையும் படியுங்கள்:
நவீன விவசாயம் - பூச்சிக்கொல்லி தெளிக்க டிரோன்!
Drone Show

மேலும், பட்டாசுகளைப் போலல்லாமல் இதை நாம் விரும்பிய வடிவங்களில் மீண்டும் மீண்டும் நிரல்படுத்தி (Program) இயக்க முடியும். வருங்காலத்தில் வானமே நம்முடைய மிகப்பெரிய திரையாக மாறப்போகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

logo
Kalki Online
kalkionline.com