உங்கள் வீட்டில் மின்விளக்கு இருக்கிறதா?
இருக்கிறது. ஒன்று, இரண்டு இல்லை. பல வடிவங்களில் விதவிதமாக நான்கைந்து மின்விளக்குகள் இருக்கின்றன.
சரி. இவை அனைத்தையும் இயக்குவதற்கான மின்சாரத்தையும் நீங்களே தயாரிக்கிறீர்களா?
இல்லை. அதை அரசாங்கம் தயாரிக்கிறது. நாம், நமக்கு வேண்டிய அளவில் மட்டும் அதை வாங்கிப் பயன்படுத்திக்கொள்கிறோம்.
ஆக, மின்விளக்கை நீங்கள் சொந்தமாக வாங்கிவைத்துள்ளீர்கள். ஏனெனில் அது வீட்டுக்குள்தான் இருக்கவேண்டும், உங்களுக்கு மட்டும்தான் பயன்படவேண்டும். அப்போதுதான் அதன் பலன் (ஒளி) உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும்.
ஆனால், மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை நீங்கள் சொந்தமாக வாங்கவில்லை. ஏனெனில், அதை வாங்குவதற்கு ஏகப்பட்ட செலவாகும். அவ்வளவு பணமோ இடமோ உங்களிடம் இல்லை. அத்துடன், அதை வாங்கினாலும் அவ்வளவு மின்சாரத்தை உங்களால் பயன்படுத்தமுடியாது. அதனால், அது பொதுவான ஓர் இடத்தில் தயாராகிறது. நீங்கள் உங்களுக்கு வேண்டிய அளவில் மட்டும் அங்கிருந்து வாங்கிக்கொள்கிறீர்கள்.
இப்போது, இந்தக் கதையைக் கணினிகளுக்குப் பொருத்திப் பார்ப்போம்.
முன்பெல்லாம் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில், அலுவலகத்தில் ஓரிரு கணினிகளை வாங்கி வைத்துக் கொண்டு எல்லாத் தகவல்கள், கணக்குகள், மென்பொருட்கள், கோப்புகளையும் அதில் சேமித்துவைத்திருந்தார்கள். அங்கு ஏதாவது ஒரு பிரச்னை வந்தால் மொத்தமும் போச்சு.
ஆனால் இன்று, வீடுகளில், அலுவலகங்களில் உள்ள கணினிகளில் மிகச் சில தகவல்கள்தான் சேமிக்கப்படுகின்றன. மீதமுள்ள அனைத்தும் பொதுவான ஓர் இடத்தில் இருக்கும் மேகக் கணினிகளிலிருந்து (Cloud Computers) வருகின்றன. அதாவது, நாம் தொட்டுப் பயன்படுத்தும் கணினி ஒரு சாளரம்தான். அது இணையத்தில் இருக்கும் இன்னும் பல கணினிகளுடன் பேசித்தான் நமக்குத் தேவையான தகவல்களைக் கொண்டுவருகிறது.
எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனம் தன்னுடைய பணியாளர்கள் அனைவருக்கும் சம்பளம் கணக்கிடுகிறது என்றால், அந்தப் பணியாளர்களின் பெயர்கள், அவர்களுடைய வருகை விவரங்கள், சம்பளத் தகவல்கள் என அனைத்தும் அந்த நிறுவனத்தின் மேகக் கணினிகளில் இருக்கின்றன. அங்கு எல்லாம் கணக்கிடப்பட்டுச் சேமிக்கப்படுகிறது. பின்னர் அந்தத் தகவல் வங்கிக்கு அனுப்பப்பட்டு ஒவ்வொருவருக்கும் சம்பளம் சென்று சேர்கிறது. அதன்பிறகு, அவரவருடைய வரித்தொகை அரசாங்கத்துக்கு அனுப்பப்படுகிறது. இவை அனைத்தும் மேகக் கணினிகளில் நடக்கின்றன.
இது ஏதோ பெரிய நிறுவனங்களுக்குமட்டும் சொந்தம் என்று நினைக்கவேண்டாம். நம்மைப்போன்ற பொதுமக்களுடைய மின்னஞ்சல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், ரயில், பேருந்துச் சீட்டுகள், வங்கி விவரங்கள், காப்பீடு என்று எல்லாம் இப்போது மேகக் கணினிகளின்மூலம்தான் வருகின்றன. அதுதான் வசதி, அதுதான் எளிமை, அதுதான் சிக்கனம், அதுதான் பாதுகாப்பு, அதுதான் எதிர்காலம்.
மேகக் கணினி என்பது அடிப்படையில் இணையத்தில் இருக்கிற கணினிச் சேவைகளின் தொகுப்புதான். அவற்றை எந்தக் கணினியிலிருந்தும் தொடர்புகொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம், நாம் அரசாங்கத்தின் மின்சாரத் தயாரிப்பு அமைப்பிலிருந்து நமக்கு வேண்டிய மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதுபோல.
கடந்த பல ஆண்டுகளாக உலகின் பெரும்பான்மைக் கணக்கிடல் அமைப்புகள் மிக விரைவாக மேகக் கணினிகளுக்கு நகர்ந்துகொண்டிருக்கின்றன, மீதமுள்ளவையும் விரைவில் நகர்ந்துவிடும்.
இதனால், முன்பெல்லாம் சில பெரிய நிறுவனங்களுக்குமட்டும் கிடைத்துக்கொண்டிருந்த அபாரமான தொழில்நுட்ப வளங்கள் இப்போது எல்லாருக்கும் கிடைக்கின்றன. அவ்விதத்தில் பல புதுமையான யோசனைகளுடன் புதிய நிறுவனங்கள் உருவாவதற்கும் வளர்வதற்கும் மேகக் கணினிகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.
அனைத்தையும் மேகக் கணினிகளுக்குக் கொண்டு செல்வது அத்தனை எளிதில்லை. குறிப்பாக, பழைய அமைப்புகளில் உள்ள தகவல்களையெல்லாம் புதிய வடிவத்துக்கு மாற்றிச் சிக்கலில்லாமல் தொடர்ந்து பயன்படுத்துவது மிகப் பெரிய பணி. அதைத்தான் தொழில்நுட்ப உலகம் இப்போது மும்முரமாகச் செய்து கொண்டிருக்கிறது.
இனி உருவாகும் புதிய மென்பொருள்கள், சேவைகள் அனைத்தும் மேகக் கணினியைத்தான் தங்களுடைய தொடக்கக் களமாகக் கொண்டு செயல்படும். அதனால், எல்லாரும் அந்தக் கோணத்தில் சிந்திக்கத் தொடங்குவது தொலைநோக்கில் நல்லது.