செயற்கையின் ஆதிக்கம் மேலோங்கியுள்ள இன்றைய நிலையில், இயற்கைக்கு சாதகமான சில திட்டங்களும் அவ்வப்போது வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது சிஎன்ஜி எரிவாயுவால் ஓடும் பேருந்துகள் அறிமுகமாகி இருக்கின்றன. டீசல் என்ஜினில் ஓடும் பேருந்துகளுக்கும், சிஎன்ஜி எரிவாயுவால் ஓடும் பேருந்துகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை இப்போது புரிந்து கொள்வோம்.
போக்குவரத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. இருப்பினும் வேறு வழியில்லாத நிலையில், இந்த இரண்டு எரிவாயுக்களை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், இதற்கு மாற்றாக மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. இருப்பினும் தானாக தீப்பிடித்து சில மின்சார வாகனங்கள் எரிந்ததன் விளைவாக இதன் விற்பனையில் சரிவு ஏற்பட்டது.
அதற்கடுத்து, இயற்கையை எவ்விதத்திலும் பாதிக்காத சிஎன்ஜி வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பிரபலமாகி வருகின்றன. சிஎன்ஜி ஆட்டோ, சிஎன்ஜி பைக் மற்றும் சிஎன்ஜி பேருந்து என்று இதன் பட்டியல் தற்போது நீண்டு கொண்டே போகிறது. சிஎன்ஜி வாகனங்களுக்கான எரிவாயுவையும் சில பெட்ரோல் பங்குகளிலேயே நிரப்பிக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
டீசல் பேருந்து:
தமிழ்நாட்டின் பல இடங்களிலும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட பேருந்துகள் தான் அதிகமாக உள்ளன. இப்பேருந்துகளை இயக்க டீசல் உள்ளிட்ட பொருள் செலவுகள் அதிகமாவதோடு, காற்று மாசுபாடும் உண்டாகிறது. டீசல் பேருந்துகள் இரவு பகல் பாராது எந்நேரத்திலும் நன்றாக இயங்கக் கூடியவை. டீசல் விலை தற்போது 100 ரூபாயை நெருங்கும் நிலையில், இதன் மைலேஜூம் குறைவாகத் தான் இருக்கிறது.
சிஎன்ஜி பேருந்து:
தற்போது தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சில இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சிஎன்ஜி பேருந்துகள், இயற்கையின் நலனோடு ஒத்துப் போகின்றன. டீசல் பேருந்துகளை ஒப்பிடும் போது, இதற்கான இயக்கச் செலவு 13% குறைவு என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சிஎன்ஜி பேருந்துகள் பகல் நேரத்தில் நன்றாக இயங்கக் கூடியவை. இருப்பினும் இரவில் இதன் செயல்பாடு சற்று குறைவு தான். மதுரை, சேலம் மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்களில் தலா 2 சிஎன்ஜி பேருந்துகள் வீதம் மொத்தமாக 6 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. டீசல் பேருந்துகளை விடவும் சிஎன்ஜி பேருந்துகள் அதிக மைலேஜைத் தருகின்றன.
சில டீசல் பேருந்துகள், சிஎன்ஜி பேருந்துகள் ஆக மாற்றப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு எனப்படும் சிஎன்ஜியின் பயன்பாடு இனிவரும் காலங்களில் அதிகரிக்கும் பட்சத்தில், அது சுற்றுச்சூழலைக் காக்கும் நல்ல திட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.