
ஓர் உணவகத்துக்குள் சில வாடிக்கையாளர்கள் வந்து அமர்கிறார்கள். இட்லி, தோசை, சப்பாத்தி, பிரியாணி என ஆளுக்கு ஓர் உணவுவகையைக் கேட்கிறார்கள். அங்கிருக்கும் ஒருவர் அதையெல்லாம் குறித்துக்கொண்டு உள்ளே செல்கிறார், சிறிது நேரத்தில், அவர்கள் கேட்ட உணவுகளைக் கொண்டுவந்து பரிமாறுகிறார்.
'பிரியாணி ரொம்ப ருசியா இருக்கு' என்கிறார் ஒரு வாடிக்கையாளர், 'இதை எப்படிச் செஞ்சீங்கன்னு கொஞ்சம் சொல்லமுடியுமா?'
பரிமாறியவர் சிரிக்கிறார், 'அதெல்லாம் எனக்கு எப்படி சார் தெரியும்?' என்கிறார்.
'அப்ப இந்தப் பிரியாணியை நீங்க சமைக்கலையா?'
'ம்ஹூம், இல்லை' என்கிறார் அவர், 'என் வேலை வர்றவங்களுக்கு என்ன வேணும்ன்னு தெரிஞ்சுகிட்டு அதைப் பரிமாறுறதுமட்டும்தான். சமைக்கிறதுக்குப் பின்னாடி வேற ஆளுங்க இருக்காங்க.'
அதாவது, உணவகத்தின் முன்பகுதியில், வருகிறவர்களை வரவேற்று, விருந்தோம்புவது ஒரு திறமை, அதே உணவகத்தின் பின்பகுதியில் விதவிதமான உணவுப் பொருட்களைத் தரமாகவும் சுவையாகவும் சமைப்பது வேறு திறமை. அதனால், இந்த இரண்டையும் வெவ்வேறு ஆட்கள் செய்கிறார்கள்.
உணவகங்களில் நாம் காண்கிற இந்த ஏற்பாடு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் உண்டு. அதாவது, மென்பொருட்கள், இணையத் தளங்களின் முன்பகுதியை (Frontend) (திரை, அதில் உள்ள பொத்தான்கள், பெட்டிகள், படங்கள், எழுத்துகள் போன்றவை) எழுதுபவர் வேறு, அவற்றின் பின்பகுதியை (Backend) (இணையத்துடன் பேசுதல், தரவுத்தளத்திலிருந்து தகவல்களை எடுத்தல், வெவ்வேறு இடங்களிலிருந்து சேர்த்த தகவல்களை ஒருங்கிணைத்தல், பாதுகாத்தல் போன்றவை) எழுதுபவர் வேறு. ஏனெனில், இந்த இரண்டு வேலைகளுக்கும் வெவ்வேறு திறமைகள் தேவைப்படுகின்றன.