எலான் மஸ்கின் வெற்றி ரகசியம் இதுதான்.

எலான் மஸ்கின் வெற்றி ரகசியம் இதுதான்.
Published on

லான் மஸ்க் என்ற ஒற்றை நபரைப்பற்றி பேச வேண்டுமென்றால் பேசிக்கொண்டே போகலாம். டெஸ்லா, ட்விட்டர், ஸ்பேஸ் X போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் இவர்தான். இவர் பெயரைச் சொன்னாலே மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட், தானியங்கி வாகனம், உலகின் முதல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, மூளையில் பொருத்தும் சிப், செயற்கைக்கோள் இன்டர்நெட், செயற்கை நுண்ணறிவு என பல முன்னோடி தொழில்நுட்பங்களில் இவர் ஈடுபட்டு வருவதுதான் ஞாபகத்திற்கு வரும். 

சிறுவயது முதலே கணினி, அறிவியல், ராக்கெட் தொழில்நுட்பம் போன்றவற்றில் பேரார்வம் கொண்டவர் இவர். தனது ஒன்பதாவது வயதிலிருந்தே அறிவியல் புனைவு கொண்ட நாவல்களை விரும்பிப் படிப்பவராக இருந்துள்ளார். ஆறு மாதங்கள் படிக்க வேண்டிய கோர்சை மூன்றே நாட்களில் முழுமையாக முடிக்கும் அளவுக்கு திறமையானவர் என அவரது நண்பர்கள் இவரைப்பற்றி புகழ்ந்து கூறுகின்றனர். 

அறிவியல் துறையின் எதிர்காலத்தை கணிக்கும் இவரது தொலைநோக்குப் பார்வையும், அதுசார்ந்த புதுமையான கண்டுபிடிப்புகளும் நிச்சயம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அவ்வகையில் தொழில்நுட்ப உலகில் ஜாம்பவானாகவும், தற்போது உலக பணக்காரர்களில் முதல் இடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க் சில ஆண்டுகளுக்கு முன்பு Reddit தளத்தில், தான் எப்படி அனைத்தையும் வேகமாக கற்றுக் கொள்கிறேன் என்பது குறித்து பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். 

அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "பெரும்பாலானவர்கள் அவர்களுக்குள் சில வரைமுறைகளை வகுத்துக் கொண்டு, இவ்வளவு தான் தன்னால் கற்றுக்கொள்ள முடியும் எனத் தேவையில்லாமல் தங்களின் திறமைகளைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையிலேயே ஒருவரால் தான் நினைப்பதை விட அதிகமாக செய்ய முடியும். எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும். ஒரு மரத்தில் உள்ள கிளைகள், இலைகள் பற்றி புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவற்றிற்கு அடிப்படையாக இருக்கும் வேர்களைப்பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே எந்த ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்றாலும் அதன் அடிப்படைகளை முதலில் அறிய வேண்டும்" என எலான் மஸ்க் கூறியுள்ளார். 

எலான் மஸ்க் சொன்ன இந்த விஷயத்தைப் படிக்கும்போது உங்களுக்கு சாதாரண வரிகளாகத் தெரியலாம். ஆனால் இதைப் பற்றி கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் அவர் கூறிய அறிவுரை உங்களை வியக்க வைக்கும். உதாரணத்திற்கு ஒருவர் கார் எப்படி உருவாக்குவது என்று கற்றுக் கொண்டால், மீண்டும் அதேபோன்ற கார்களை மட்டுமே உருவாக்க முடியும். ஆனால் அந்த கார் இயங்குவதற்கான அடிப்படை அறிவியல், டிசைன், எலக்ட்ரானிக்ஸ், இன்ஜினியரிங் பற்றி அனைத்தையும் தெரிந்துகொண்டால், புதுப்புது மேம்படுத்தப்பட்ட கார்களை உருவாக்கலாம். 

எலான் மஸ்க் தொடங்கிய எந்தத் தொழிலாக இருந்தாலும், அது பற்றிய முழு அறிவையும் தெரிந்துகொண்டு தொடங்கிய காரணத்தினால்தான், அவரால் தற்போது இத்தகைய ஆகச்சிறந்த நிலையை அடைய முடிந்தது. இதுதான் அவருடைய வெற்றியின் ரகசியமாக அமைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com