நாளை இரவு வானில் ஒரு விசேஷம் நடக்க உள்ளது. ஆம் 2024 ஆம் ஆண்டின் முதல் முழு நிலவை நீங்கள் காணப் போகிறீர்கள். இதற்கு ஓநாய் நிலவு (Wolf Moon) எனப் பெயரிடப்பட்டுள்ளது. பொதுவாகவே பௌர்ணமியின் போது நடக்கும் விசித்திரமான நிகழ்வுகளைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். நாய்கள் இரவு முழுவதும் தூங்காமல் கத்திக்கொண்டே இருப்பது, சிலருக்கு மனநிலையில் மாற்றம் போன்ற வினோதமான நடத்தைகள் முழு நிலவின்போது நடப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் நாளை வரவில்லை முழு நிலவு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அது என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Wolf Moon என்றால்?
Wolf Moon தினமானது பல்வேறு கலாச்சாரங்களில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. பூர்விகா அமெரிக்க பழங்குடியினர் மாறிவரும் பருவங்களை குறிக்கவும், இயற்கை அன்னையை மதிக்கவும் ஒவ்வொரு முழு நிலவுக்கும் பெயரிட்டனர். அப்படி ஜனவரி மாதத்தில் வரும் முழு நிலவுக்கு Wolf Moon எனப் பெயரிட்டனர். ஏனெனில் ஜனவரி மாதம் குளிர்காலம் என்பதால் ஓநாய்கள் பசியுடன் அதிக சத்தத்தில் ஊளையிடுமாம். இதன் காரணமாகவே ஜனவரி மாத முழு நிலவுக்கு ஓநாய் நிலவு என பெயரிடப்பட்டது.
முழு நிலவின் அறிவியல்:
பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே நேரடியாக நிலை நிறுத்தப்படும்போது முழு நிலவு ஏற்படுகிறது. அச்சமயத்தில் சூரியனின் கதிர்கள் சந்திரனின் மேற்பரப்பை முழுமையாக ஒளிரச் செய்யும். இதன் காரணமாகவே பௌர்ணமி தினத்தன்று சந்திரன் அற்புதமான காட்சியை வெளிப்படுத்துகிறது.
ஓநாய் நிலவின் தனித்துவம்:
ஓநாய் நிலவு, ஆண்டு முழுவதும் வரும் முழு நிலவு போலல்லாமல் ஒரு தனித்துவமான அழகைக் கொண்டுள்ளது. இந்த நேரத்தில் நிலவு பூமிக்கு அருகில் இருப்பதால் வழக்கத்தை விட பெரிதாகவும் பிரகாசமாகவும் தோன்றும். இதை சூப்பர் மூன் என்றும் அழைப்பார்கள்.
பல கலாச்சாரங்கள் ஓநாய் நிலவு தினத்தை சந்திரனின் அடையாளத்தையும் இயற்கையின் அற்புதத்தையும் மதிக்கும் வகையில் சடங்குகள் மற்றும் விழாக்கள் செய்து கொண்டாடுகின்றனர். பெரும்பாலும் இந்த நாட்களில் இசை, நடனம், கதை சொல்லல் போன்றவை நடத்தப்படுகிறது.
அத்துடன் இந்த வான் நிகழ்வின் பெயருக்குக் காரணமாக இருந்த ஓநாய்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக சில நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இன்னும் சிலர் இந்த நாளில் தியானம் செய்வது, புதிய செயல்களில் ஈடுபடுவது போன்ற நல்ல காரியங்களை செய்கின்றனர்.
இந்தியாவில் இந்த நாளை யாரும் பெரிதாகக் கொண்டாடுவதில்லை என்றாலும், நாளை வரவுள்ள முழு நிலவின் சிறப்புகளை நாம் அறிந்து கொள்வதில் தவறில்லை. எனவே நாளை பிரகாசமான சந்திரனை அனைவரும் கண்டு ரசியுங்கள்.