
இன்றைய தலைமுறையினர் தொலைக்காட்சி, மொபைல் போன், வீடியோ கால் மற்றும் OTT என்று அவரவர்களின் விருப்பத்தின் பெயரில் செயற்கைகோளின் (Satellites) உதவியோடு தங்களுக்குத் தேவையான வசதியைப் பயன்படுத்துகின்றனர். பல நாடுகளால் பல்வேறு செயற்கைகோள்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. பூமி முழுக்க கொஞ்சம்கூட இடைவெளி இல்லாமல் செயற்கைகோள்களால் சூழப்பட்டால் என்ன ஆகும்? வாருங்கள் தெரிந்துகொள்வோம்...
தற்போதைய செயற்கோள்களின் எண்ணிக்கை:
தற்போதைய நிலவரப்படி பூமியைச் சுற்றி சுமார் 11,833 செயற்கைக்கோள்கள் உள்ளன. செயற்கைக்கோள்களின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் (Advancements in satellite technology) மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவைகளுக்கான (Satellite-based services) வளர்ந்துவரும் தேவை காரணமாக இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும்.
செயற்கைக்கோள்கள், நவீனகாலத்திற்கு ஏற்றார்போல், தகவல் தொடர்பு (Communication), புவி கண்காணிப்பு (Earth observation), வழிசெலுத்தல் (Navigation) மற்றும் அறிவியல் ஆராய்ச்சி உட்பட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
செயற்கை கோள்கள் பூமியை முழுமையாக சூழ்ந்தால் என்ன ஆகும்?
360 டிகிரி பூமியின் சுற்றுப்பாதையில் இடைவெளியின்றி மொத்த செயற்கை கோள்களால் சூழப்பட்டால் அது குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதில் முதன்மையானது செயற்கைகோள்களின் மோதல்கள். இது பூமிக்கு வெளியே பல விண்வெளி குப்பைகள் (Space debris) உருவாக வழிவகுக்கும். இந்தக் குப்பைகள் அருகில் இருக்கும் மற்ற செயற்கைக்கோள்களையும் சேதப்படுத்தக்கூடும். இதைத்தான் கெஸ்லர் சிண்ட்ரோம் (Kessler Syndrome) என்பார்கள்.
கூடுதலாக, இந்த அதிகப்படியான செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையானது, மற்ற தொலைதூர விண்கலன்களை (Long distance space missions) இயக்க உதவும் வானொலி தகவல் தொடர்புகளை (Radio communications) தடுக்கக்கூடும்.
இதுபோக பல அறிவியல் ஆராய்ச்சிகள் (Scientific research) மற்றும் மக்களால் செய்யப்படும் அன்றாட நடவடிக்கைகள் என்று அனைத்தையும் பாதிக்கும்.
இதைக் கட்டுப்படுத்த தற்போது உள்ள வழிகள்:
அதிகரித்து வரும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை நிர்வகிப்பதற்கும், சில மோதல்களைத் தடுப்பதற்கும் விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஏஜென்சிகள் (Space agencies) அதிநவீன விண்வெளி போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளை (Space traffic management systems) உருவாக்கியுள்ளனர்.
இவை விண்வெளியில் செயற்கைக் கோள்களின் தற்போதைய நிலைகளை கண்காணிக்கவும், சாத்தியமான மோதல்களைக் கணிக்கவும் (Predict potential collisions) பல மேம்பட்ட வழிமுறைகள் மற்றும் நிகழ் நேர தரவைப் (Real-time data) பயன்படுத்துகின்றன.
அப்படி மோதல் ஏற்படக்கூடிய அபாயம் கண்டறியப்பட்டால், அந்தக் குறிப்பிட்ட செயற்கைக்கோளை அனுப்பிய ஆபரேட்டர்கள், விபத்துகளைத் தவிர்க்க, தங்கள் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதையை (Orbits) சரி செய்ய முடியும். இது ஒட்டுமொத்த விண்வெளி பாதுகாப்பு மற்றும் அதன் நிலைத்தன்மையைப் பராமரிக்க உதவுகிறது.
காலம் கடந்த செயற்கை கோள்கள் என்ன ஆகும்?
ஒரு செயற்கைக்கோள் அதன் ஒட்டுமொத்த செயல்பாடும் முடிவுக்கு வரும் தருவாயில் இருக்கும்போது அவை பொதுவாக இரண்டு வழிகளை பின்பற்றி செயலிழக்கப்படும்.
முதலாவதாக, குறைந்த புவி சுற்றுப்பாதையில் (Low Earth orbit) உள்ள செயற்கைக்கோள்கள் அதன் மீதமுள்ள எரிபொருளை பயன்படுத்தி அதன் உயரத்தை குறைப்பர். இதனால் அது பூமியின் புவியீர்ப்பால் (Gravity) மீண்டும் பூமிக்குள் வரும்போது முற்றிலும் எரிந்துவிடும்.
இந்தச் செயல்முறையால் விண்வெளி குப்பைகள் உருவாவதைத் தடுக்க முடிகிறது.
இரண்டாவதாக, அதிக உயர சுற்றுப்பாதையில் (Higher orbits) உள்ள செயற்கைகோள்கள் (Graveyard orbit) என்ற சுற்றுப்பாதைக்கு நகர்த்தப்படுகின்றன. இவ்வகையான நடவடிக்கைகளால் நன்றாக செயல்படுகின்ற செயற்கைக்கோள்கள் எந்த ஒரு இடையூறின்றி பூமியை சுற்றி வர முடியும்.
நவீன காலத்திற்கு ஏற்றார்போல் பல செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டாலும் பூமிக்கு வெளியே உள்ள செயற்கைகோள்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு என மேலே குறிப்பிட்டதுபோல் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.