
கிட்கேட் வெர்ஷன் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் இனி வாட்ஸ் அப் வசதியை பெற முடியாது.
உலகின் மிக முக்கிய தொலைதொடர்பு சாதனமாக மாறி இருக்கும் வாட்ஸ் அப் நிறுவனம் தன்னுடைய பாதுகாப்பு வசதியை மேம்படுத்தவும், பயனாளர்கள் மத்தியில் தனக்கான நம்பிக்கையை அதிகரிக்கும் பொருட்டும் பல்வேறு அப்டேட்டுகளை தொடர்ச்சியாக கொடுத்து வருகிறது. மேலும் தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டு இருக்க கூடிய போட்டிகளை சமாளிக்கும் விதமாக அப்டேட்டுகளை விரைவாக கொடுக்க தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், ஆண்ட்ராய்டு போன்களின் குறிப்பிட்ட மாடல்களில் இனி வாட்ஸ் அப் சேவையை நிறுத்துவதாக தெரிவித்து இருக்கிறது. இவ்வாறு ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் வெர்ஷன் மாடல்களில் இனி வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பு காரணத்திற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் மிக சொற்பமான பயனாளர்கள் மட்டும் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆண்ட்ராய்டு கிட்கேட் வெர்சனை 0.5 சதவீதம் முதல் 0.7 சதவீதம் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். மிக குறைந்த அளவிலான மாடல்களில் மட்டுமே தற்போது இந்த பழைய வெர்ஷன் பயன்படுத்தப்படுகிறது. நெக்சஸ் 7, சாம்சங் கேலக்ஸி 2, சோனி எக்ஸ்பீரியா இஸட் உள்ளிட்ட பல்வேறு வகையான கிட்கேட் வெர்ஷன் ஃபோன்களில் இருந்து வாட்ஸ் அப் செயலி முழுமையாக தற்போது நீக்கப்பட்டு இருக்கிறது. இனி இவர்கள் மாற்று போன்களை பயன்படுத்தி மட்டுமே வாட்ஸ் அப் சேவையை பெற முடியும்.
இனி வாட்ஸ் அப் சேவையை பெற ஆண்ட்ராய்டு 5.0 வெர்ஷனான லாலிபாப் வெர்ஷன் மற்றும் அதற்குப் பிறகு வந்த வெர்ஷன்கள் இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.