நாம் அன்றாடம் பார்க்கும் காலெண்டரை வைத்து நம்மால் புது வருடம் பிறந்து விட்டது என்பதை நாட்களின் அளவில் கணிக்க முடிகிறது. குறிப்பாக நம் பூமியில் ஜனவரி 1 ல் தொடங்கி 365 நாட்களை கடந்து சென்றால் அதை 1 வருடம் என்கிறோம். அதேபோல் மற்ற கிரகங்களும் ஒரு வருடம் முடிந்துவிட்டது என்பதை எதன் அடிப்படையில் கணிக்கிறார்கள். இந்த கணிப்புகளில் பிற்காலத்தில் மாற்றம் ஏற்படுமா? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
இதுவும் ஒரு சாதாரண நாள் தானே
புத்தாண்டு தினம் ஒரு சாதாரண நாளாக தோன்றினாலும், சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் சுற்றுப்பாதையின் ஒரு சுழற்சியின் நிறைவின் அடையாளமாக ஓர் அறிவியல் பூர்வமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இந்த நாள் கடந்த ஆண்டைப் பற்றி சிந்திக்கவும் எதிர்காலத்திற்கான நோக்கங்களை இலக்கு அமைத்து நம்மை தேற்றி கொள்ளவும் வழிவகை செய்கிறது. இதுவே மனதில் ஒரு புதுவிதமான கொண்டாட்டங்களோடு ஒரு நம்பிக்கை கலந்த மகிழ்ச்சியை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள உலகிலுள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து, நம்மை மத, இன வேறுபாடின்றி புதிய வாய்ப்புகளின் ஆரம்பமாக ஒரு கலாச்சார நிகழ்வாக கொண்டாட வைக்கிறது.
காலெண்டரை தாண்டி எப்படி நம்மால் கணிக்க முடிகிறது
புத்தாண்டைக் குறிப்பது சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் சுற்றுப்பாதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு முழுமையான சுற்றுப்பாதை முடிவதற்கு தோராயமாக 365.25 நாட்கள் ஆகும். இது தான் ஒரு சூரிய ஆண்டாகும். இந்த காலகட்டத்தை மேலும் உறுதிப்படுத்தும் சில கூடுதல் அறிவியல் காரணங்கள் உள்ளன. பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதை (elliptical orbit), அதன் அச்சின் சாய்வுடன் (tilted axis) இணைந்து சுற்றுவதால் தான், மாறிவரும் பருவங்கள், பகல் மற்றும் இரவுகளின் நீளம் மாறுபடுகிறது. இதோடு சூரியன் மற்றும் பிற பெரிய விண்வெளி பொருள்களின் ஈர்ப்பு விசைகளுடன் (Gravitational forces) பொருந்தும் பூமியின் சுழற்சி வேகமும் அதன் சுற்றுப்பாதையை 365 நாட்களில் முடிப்பதில் முக்கியமானவையாக இருக்கின்றன. லீப் வருடம் (Leap year) எனப்படும் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு எடுத்துக்காட்டாக (2024-2027) இப்படி புள்ளியில் வரும் நாட்கள் கணக்கு (365.25) ஒரு கூடுதல் நாளாக சேர்த்து (29th பிப்ரவரி, 2028) கணக்கிடப்பட்டு 366 நாட்களை கொண்டதாக அந்த வருடம் பார்க்கப்படுகிறது.
மற்ற கிரகங்களின் புது வருட பிறப்பை எப்படி கணக்கிடுகிறார்கள்
விஞ்ஞானிகள் சூரியனைச் சுற்றி வரும் மற்ற கிரகங்களின் சுற்றுப்பாதை காலங்களைக் கவனிப்பதன் மூலம் அவற்றின் வருடத்தின் நீளத்தை தீர்மானித்துள்ளனர். தொலைநோக்கிகள் (telescopes) மற்றும் பிற கண்காணிப்புக் கருவிகள், ஒரு கிரகம் ஒரு முழு சுற்றுப்பாதையை முடிக்க எடுக்கும் நேரத்தை அளவிடுகின்றன. உதாரணமாக, செவ்வாய் (Mars) சூரியனைச் சுற்றி வருவதற்கு தோராயமாக 687 பூமி நாட்களை எடுத்துக் கொள்கிறது. அதனால் அதன் ஆண்டு நமது ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமானது. விண்வெளி ஆய்வுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் போன்ற தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களால் இதை கணிக்க சாத்தியமாகிறது மற்றும் கிரக இயக்கங்கள் பற்றிய துல்லியமான தரவையும் பெறமுடிகிறது.
இப்போதுள்ள இந்த நாட்களின் வேகம் பிற்காலத்தில் மாறுமா?
ஒரு கிரகத்தின் சுழற்சி மற்றும் சுற்றுப்பாதையின் அதிர்வெண் (Rotating Frequency) ஆண்டுக்கு ஆண்டு வேறுபடுவதில்லை. இருப்பினும், விண்வெளியில் இருக்கும் மற்ற பெரிய பொருட்களால் ஏற்படும் ஈர்ப்பு விசை ( gravitational interactions ) மற்றும் இன்னொரு கிரகத்தின் சுழற்சி இயக்கங்களில் (rotational dynamics) ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சிறிய மாறுபாடுகள் ஒரு கிரகத்தின் சுழற்சியில் ஏற்படும். இதன் தாக்கம் பல பல ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிடத்தக்க மாற்றமாக சில கிரகங்களின் நாட்களின் அளவில் சில துளி வினாடிகள் அதிகரித்திருப்பதாக உணரப்படும். அதனால், இந்த மாற்றத்தை, நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும் நம்மால் உணர இயலாது. எப்போதும் போல சாதாரணமான நாட்களாக தான் கடந்து செல்வோம்.
ஆக, புத்தாண்டை கொண்டாடுவது என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாரம்பரிய நிகழ்வாகும். இது வருடா வருடம் அரங்கேற மேலே, குறிப்பிட்டதை போல் பல காரணங்கள் இருந்தாலும், நம்மை பொறுத்தவரை அன்றைய நாள் நமது இனிய நாளாகவே இருக்கும்; மற்றும் புதிய இலக்கை அமைப்பதற்கான ஒரு வித புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.