எங்கோ எகிருது பென்ஸ் கார் விலை!

எங்கோ எகிருது பென்ஸ் கார் விலை!
Published on

ஜி 63 என்ற மெர்சிடிஸ் பென்ஸ் காரின் விலை மிக அதிகமாக இந்தியாவில் உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வளவு விலை ஏறி இருக்கு என்பதைக் கேள்விப்பட்டால், பென்ஸ் கார் வாங்கும் ஆசையே போயிடும் போல. 

இந்திய மக்களை பொருத்த வரையில் மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் அதிக விலைமிக்க ரகத்தைச் சேர்ந்தது. அடிப்படை மாடல் காரை வாங்க வேண்டும் என்றாலும் ரூபாய் நாற்பது லட்சத்திற்கும் மேல் கடந்து விடும். ஜி-கிளாஸ் போன்ற உயர்ந்த ரக பென்ஸ் காரின் விலையை பற்றி சொல்லவே வேண்டாம். தொடக்க முதலே கோடிகளில்தான் அதன் விலை. அதைப்பற்றியெல்லாம் மிடில் கிளாஸ் மக்கள் நினைத்துப் பார்க்க கூட முடியாது. 

ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு இந்தியா மிக முக்கியமான சந்தையாகும். வால்வோ, ஆடி, BMW உள்ளிட்ட தலைசிறந்த பிராண்டுகளின் விற்பனையைப் பின்னுக்குத் தள்ளி, கடந்த சில வருடங்களாக பென்ஸ் நிறுவனம் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. 2022 ல் மட்டும் சுமார் 41% அதிகமான மெர்சிடெஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

முதலில், ஜி 63 ரக கார் விற்பனை அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து, பிப்ரவரி 20ஆம் தேதி வரை, ஏற்கனவே பென்ஸ் கார் வைத்திருப்பவர்கள் மட்டுமே இதை முன் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பிறகு யார் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. முழுக்க முழுக்க ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 லிட்டர் ட்வின் டர்போ V8 இன்ஜினுடன் வரும் ஒரு டாப் வேரியண்ட் வாகனம் இதுவாகும். 

இந்த நிலையில், இந்தியாவில் முன்பு வரை 2.55 கோடிக்கு விற்கப்பட்ட ஜி63 AMG காரின் விலை தற்போது 3.30 கோடியாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரே அடியாக சுமார் 75 லட்சங்கள் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதிலும் 3.30 கோடி என்பது Ex Showroom விலைதானாம். மாநிலத்திற்கு மாநிலம் விலையானது மாறிக்கொண்டே இருக்கும். இதர செலவுகள் அனைத்தையும் கணக்கீடு செய்து பார்த்தால், 4 கோடியைத் தாண்டி நிற்கும் என்று சொல்லப்படுகிறது. 

இது சார்ந்த பல துரித நடவடிக்கைகளையும் பென்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுவரை முன்பதிவு செய்தவர்களுக்கு 36 மாதங்களுக்கு பிறகு  (3வருடங்கள்!) ஜி 63 கார்கள் டெலிவரி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 12 முதல் 16 மாதங்களில் டெலிவரி எடுத்து விடலாம் என கூறப்படுகிறது. 

என்னதான் இதில் ஏகப்பட்ட அம்சங்கள் இருந்தாலும் ஒரேடியாக 75 லட்சம் விலை ஏற்றியது, பென்ஸ் விரும்பிகளை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது என்றாலும், இதையும் தாண்டி, சில நபர்கள் எவ்வளவு விலை ஏறினாலும் நாங்கள் வாங்குவோம் என்று தொடர்ந்து முன்பதிவு செய்துதான் வருகிறார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com