
நம் அனைவருமே அனுபவிக்கும் ஒரு பொதுவான உணர்வுதான் கொட்டாவி விடுவது. தூக்கம் வரும்போது, சோர்வாக இருக்கும் போது அல்லது வேறு ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்க்கும்போது நமக்கு கொட்டாவி வந்துவிடும். இது ஏன் இப்படி வருகிறது? என நாம் பலமுறை யோசித்திருப்போம். இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் என்ன என்பதை விவரிப்பதே இந்தப் பதிவு.
கொட்டாவி என்பது தன்னிச்சையாக நிகழும் ஒரு உடல் செயல். வாயை பெரிய அளவில் திறந்து, மூச்சை உள்ளெழுத்து வெளியே விடுவதே கொட்டாவி. இதனுடன் கண்கள் விரிந்து, தோள்பட்டை உயர்ந்து மூச்சு விடுவது வேகமாகும். ஒருவருக்கு கொட்டாவி ஏற்படுகிறது என்பதற்கான துல்லியமான காரணங்கள் முழுமையாக அறியப்படவில்லை என்றாலும், விஞ்ஞானிகள் பல கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
கொட்டாவி ஏற்படுவதற்கான காரணங்கள்: மூளை வெப்பநிலையைக் குறைக்க கொட்டாவி விடப்படுவதாக சொல்லப்படுகிறது. மூளை அதிகமாக செயல்படும்போது அதன் வெப்பநிலை உயரும். கொட்டாவி விடுவதன் மூலம் குளிர்ந்த காற்று மூளைக்கு சென்று வெப்பநிலையைக் குறைக்கிறது. மேலும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும்போது கொட்டாவி ஏற்படும் எனவும் சொல்லப்படுகிறது. கொட்டாவி விடுவதன் மூலம் நுரையீரலுக்கு அதிக அளவு காற்று சென்று ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது.
கொட்டாவி விடுவது விழிப்புணர்வை அதிகரிக்க உதவும் என்று நம்பப்படுகிறது. தூக்கம் வரும்போது அல்லது சோர்வாக இருக்கும்போது கொட்டாவி விடுவதன் மூலம் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைத்து விழிப்புணர்வு அதிகரிக்கிறது.
ஒருவர் கொட்டாவி விடுவதை பார்க்கும் போது நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது?
இது மிகவும் பொதுவாக நிகழும் ஒரு நிகழ்வு. ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்க்கும்போது நமக்கு கொட்டாவி வருவதற்கு முக்கிய காரணம் Mirror Neurons. இந்த நரம்பு அணுக்கள் நம் மூளையில் உள்ளன. இவை மற்றொரு நபரின் செயல்பாட்டை பார்க்கும்போது அதே செயலை செய்யும் திறன் கொண்டவை. ஒருவர் கொட்டாவி விடுவதை பார்க்கும்போது மூளையில் உள்ள Mirror Neurons செயல்பட்டு நமக்கும் கொட்டாவி விடத் தூண்டுகிறது. இது ஒரு வகையான Empathetic Response ஆகும்.
கொட்டாவி விடுவதால் பல நன்மைகள் கிடைக்கிறது. இதனால், மூளைக்கு புத்துணர்ச்சி கிடைத்து விழிப்புணர்வு அதிகரிக்கும். கொட்டாவி விடுவது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடலில் ஒவ்வொரு பகுதிக்கும் போதுமான ஆக்சிஜன் கிடைக்க உதவுகிறது. கொட்டாவி விடுவதால் தசைகள் தளர்ந்து மன அழுத்தம் குறைகிறது.
கொட்டாவி விடுவது என்பது முழுமையாக விளக்க முடியாத ஒரு சிக்கலான உடல் செயல்பாடு. இதற்கான காரணங்கள் பல இருந்தாலும், இது ஒரு நேர்மறையான செயலாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அதிகமாக கொட்டாவி விடுவது ஏதோ ஒரு உடல்நிலை பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, உங்களுக்கு தொடர்ச்சியாக கொட்டாவி வந்தால் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.