AI free in India!
இன்று நாம் எங்கு திரும்பினாலும் AI என்ற வார்த்தையைத் தான் கேட்கிறோம். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நூற்றுக்கணக்கான டாலர்கள் கொடுத்து வாங்க வேண்டிய பல AI சேவைகள், இந்தியாவில் மட்டும் முற்றிலும் இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ கிடைக்கிறது. இலவசமாக ஒரு பொருள் கிடைக்கிறது என்றால், அங்கே நீங்கள் தான் விற்கப்படுகிறீர்கள் என்ற பழமொழி Artificial intelligence விஷயத்தில் எப்படி உண்மையாகிறது என்பதைப் பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.
சில வருடங்களுக்கு முன்பு ஜியோ எப்படி டேட்டாவை இலவசமாக கொடுத்து, நம்மை இணையத்திற்கு அடிமையாக்கி, பின்னர் கட்டணத்தை உயர்த்தியதோ, அதே Strategy தான் இப்போது AI உலகிலும் நடக்கிறது. கூகுள் (Gemini), மைக்ரோசாப்ட் (Copilot), சாட்ஜிபிடி (ChatGPT) என எல்லா ஜாம்பவான்களும் போட்டி போட்டுக்கொண்டு இந்தியர்களுக்கு இலவச சேவையை வழங்குகிறார்கள்.
காரணம், இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தை. இங்குள்ள மக்கள் தொகை அதிகம், இணைய பயன்பாட்டாளர்கள் அதிகம். நம்மை இப்போது இந்த தொழில்நுட்பத்திற்குப் பழக்கப்படுத்திவிட்டால், எதிர்காலத்தில் நாம் இது இல்லாமல் இயங்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம். அப்போது அவர்கள் நிர்ணயிப்பதுதான் விலை.
நாம் தான் பரிசோதனை எலிகள்!
இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன, பலவிதமான கலாச்சாரங்கள் உள்ளன. நாம் கேட்கும் கேள்விகள், நாம் பயன்படுத்தும் 'தங்கிலீஷ்' வார்த்தைகள் எல்லாமே அந்த AI மாடல்களுக்குத் தீனி. சுருக்கமாகச் சொன்னால், நாம் அதை இலவசமாகப் பயன்படுத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் நம்மை வைத்துத் தான் அவர்கள் தங்கள் AI-யை புத்திசாலியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் கொடுக்கும் Inputs தான் அவர்களின் மூலதனம்.
எச்சரிக்கை!
வீட்டுப்பாடம் முதல் அலுவலக மின்னஞ்சல் வரை எல்லாவற்றிற்கும் AI-யை நம்பியிருந்தால், மனித மூளையின் சிந்திக்கும் திறன் மழுங்கிவிடும். கால்குலேட்டர் வந்த பிறகு நாம் எப்படி மனக்கணக்கு போடுவதை நிறுத்தினோமோ, கூகுள் வந்த பிறகு எப்படி நினைவாற்றலை இழந்தோமோ, அதேபோல் AI வந்த பிறகு சொந்தமாக முடிவெடுக்கும் திறனை நாம் இழக்க நேரிடலாம்.
AI என்பது ஒரு கருவி மட்டுமே. அதை உங்களுக்கு அடிமையாக வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் அதற்கு அடிமையாகி விடாதீர்கள்.
உங்கள் பான் கார்டு, ஆதார் எண், வங்கி விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் AI-யிடம் பகிராதீர்கள்.
AI கொடுக்கும் பதில்களை அப்படியே நம்பாமல், ஒருமுறை சரிபாருங்கள்.
முக்கியமான முடிவுகளை நீங்களே எடுங்கள், AI-யிடம் கேட்காதீர்கள்.
இலவசமாக கிடைக்கிறது என்பதால் AI-யிடம் நம் முழு வாழ்க்கையையும் ஒப்படைக்க முடியாது. AI மனிதர்களை அழிக்காது. ஆனால் AI-யை பயன்படுத்தத் தெரிந்த மனிதன், அதை பயன்படுத்தத் தெரியாத மனிதனை வென்று விடுவான் என்பது தான் நிதர்சனம். தொழில்நுட்பம் வளர்வது நல்லது தான், ஆனால், அது நம் மூளையின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கக்கூடாது.