

குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்திய அரசு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குகிறது. பெட்ரோலிய சுத்திகரிப்பின் மூலம் நிறமற்ற எளிதில் தீப்பற்றக்கூடிய ஹைட்ரோ கார்பன் எரிபொருளான மண்ணெண்ணெய் மக்களுக்கு விநியோகிக்கும் போது நீல நிறத்தில் உள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து இப்பதிவில் அறிந்து கொள்வோம்.
பெட்ரோலை விட குறைந்த ஆவியாகும் தன்மை கொண்ட மண்ணெண்ணெய் பொதுவாக அடர் நீல நிறத்தில் இருப்பதற்கு சாயமிடுதல் என்ற செயல்முறை காரணமாக இருக்கிறது .சட்ட விரோதமாக மண்ணெண்ணெய் விற்பனை செய்வதை தடுப்பதற்காகவே பெட்ரோல் மற்றும் டீசல் உடன் நீல நிற சாயம் சேர்க்கப்படுகிறது.
எண்ணெயில் கரையக்கூடிய சால்வென்ட் ப்ளூ 35 (Solvent Blue 35) அல்லது ஆயில் ப்ளூ 35 (Oil Blue 35) என்ற சாயத்தை மண்ணெண்ணையில் கலக்கின்றனர். இது எளிதில் மண்ணெண்ணெயுடன் கலந்து நீல நிறத்தை கொடுப்பதாக தி ஹிந்து மற்றும் எகனாமிக்ஸ் டைம்ஸ் (2025-2026) அறிக்கை கூறுகிறது.
நீல நிறக் காரணம்
பெட்ரோல் டீசல் உடன் நீல நிறம் கலந்த மண்ணெண்ணையை கலக்கும்போது எளிதாக இதனை கண்டுபிடிக்கலாம். மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதால் சட்டவிரோதமாக மற்ற எரிபொருட்களுடன் கலக்கப்படுவதை தடுக்க இந்த நீல நிறம் உதவுகிறது. சட்டவிரோத வியாபாரிகள் மானிய விலை மண்ணெண்ணெயை பெட்ரோல் நிலையங்களில் விற்க நினைத்தால் நீல நிறத்தை வைத்து எளிதில் அடையாளம் காணமுடியும்.
சில சிறப்பு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட அளவில் இந்த நீல நிறச் சாயத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமும் எண்ணெய் சந்தைப்டுத்துதல் நிறுவனங்களும் சேர்க்கின்றன. மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணையில் மிகச் சிறிய அளவே நீல நிற சாயம் சேர்க்கப்படுகிறது. ஆனாலும் பெட்ரோலிய சுத்திகரிப்பின் மூலம் கிடைக்கும் மண்ணெண்ணையை குடிப்பதோ சாப்பிடுவதோ ஆபத்தானது என்பதை மறக்கக்கூடாது.
1950 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மானிய முறையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. அப்போதிருந்தே நீல நிறச்சாயம் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளிலும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. காலங்கள் மாறிய இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் நேரடிப் பணப் பரிமாற்றம் (Direct Benefit Transfer) மூலம் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.
முறைகேடுகளை தவிர்க்கவும் மண்ணெண்ணையை அடையாளம் காணவும் இன்றளவும் நீல நிறம் பயன்படுத்தப்படுகிறது.
சமையல் அடுப்புகள், விளக்குகள், ஜெட்என்ஜின் எரிபொருளாக இருக்கும் மண்ணெண்ணெய் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 150 டிகிரி செல்சியஸ் முதல் 275 டிகிரி செல்சியஸ் கொதிநிலை கொண்ட சிறந்த திரவ எரிபொருளாக மண்ணெண்ணெய் உள்ளது.
எல். பி. ஜி பற்றாக்குறை நிலவும் இந்நேரத்தில் நெருக்கடியை தீர்க்க மண்ணெண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ளது.