

விண்வெளிப் பயணத்துக்கு ராக்கெட்டைத் தானே பயன்படுத்துகிறார்கள்; அதற்கு ஏன் விமானங்களை பயன்படுத்துவது இல்லை என்ற கேள்வி அடிக்கடி உங்க மனதில் எழும் தானே! வாங்க.. அதற்கான காரணத்தைப் பார்ப்போம்.
தீபாவளிக்கு ராக்கெட் விடுவோம். அதில் சிறிய குழாய் மூலம் நெருப்பு பின்புறமாக பீறிடும்போது ராக்கெட் வானம் நோக்கி முன்னேறுகிறது. அதாவது மேல் நோக்கி பாய்கிறது.
விண்வெளியில் செயற்கை கோள்களை செலுத்தவும் மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லவும் பயன்படுத்தப்படுகின்ற ராக்கெட்டுகளும் இந்த அடிப்படையில் தான் செயல்படுகின்றன.
விண்வெளிப் பயணத்துக்கு ராக்கெட்டை தான் பயன்படுத்தியாக வேண்டும் என்பதற்கு முக்கியமான காரணம் உள்ளது. விமானங்கள் இதற்கு ஏற்றவை அல்ல. விமான எஞ்சின்களில் உள்ள எரிபொருள் எரிவதற்கு காற்று தேவை. அதாவது காற்றில் உள்ள ஆக்சிஜன் தேவை. தவிர விமானங்கள் உயரே உயரே எழும்புவதற்கு (இறக்கைகளின் அடிப்புறத்தில் வெற்றிடம் உண்டாவதால் )காற்று தேவை.
ராக்கெட்டுக்கு இந்த பிரச்சனைகள் எதுவும் இல்லை. ஆனால் ராக்கெட்டுகள் உயரே கிளம்பி காற்றே இல்லாத விண்வெளி பிரதேசத்தில் இயங்கியாக வேண்டும். ஆகவே, ராக்கெட்டுகளில் எரிபொருளுடன் ஆக்ஸிஜனையும் அளிக்கின்ற பொருள் பயன்படுத்தப்படுகின்றது.
சில ராக்கெட்டுகளில் திட வடிவிலான எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. திரவ எரிபொருளும் பயன்படுத்தப்படுவது உண்டு. அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டிய திறன் மிக்க ராக்கெட்களில் ஆக்சிஜன் வாயுவையும், ஹைட்ரஜன் வாயுவையும் திரவ வடிவில் தயாரித்து பயன்படுத்துகிறார்கள். பல அடுக்கு ராக்கெட்களில் வெவ்வேறு அடுக்கில் வெவ்வேறு எரிபொருள் பயன்படுத்தப்படலாம் என்பது அதில் உள்ள வசதி.
இன்னும் எளிமையாக கூற வேண்டுமானால், கடலில் மீன் வகைகள் உள்ளன. அது தண்ணீரைக் குடித்துவிட்டு பின்புறம் உள்ள உறுப்புகள் வழியே பீச்சியடிக்கும். இப்படி பீச்சும் போது, மீன் நீந்தத் தேவையின்றி முன்னோக்கிச் செல்கிறது. இப்படி எந்த வகையான ராக்கெட்டாக இருந்தாலும் சரி, ராக்கெட்டின் தத்துவமே இது தான். இது மீனின் தத்துவத்தைப் போன்றது தான். இதனால் தான் விண்வெளிக்குச் செல்ல விமானத்தை பயன்படுத்தாமல், ராக்கெட்டை பயன்படுத்துகிறார்கள்.