கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி சந்திரயான் 3 விண்கலம் சாதனை படைத்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கியதும் அதன் உள்ளே இருந்த பிரக்யான் ரோவர் வெளிவந்து, நிலவில் பல்வேறு கட்ட ஆய்வுகள் செய்தது. இதன் மூலமாக நிலவின் வெப்பநிலை, ஆக்ஸிஜன், சல்பர் இருப்பு, தனிமங்கள் போன்றவற்றை முற்றிலுமாக ஆய்வு செய்து இந்த விண்கலம் தரவுகளை இஸ்ரோ கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்பியது. இதனால் இந்த விண்கலத்தில் இருந்த ஏழு பேலேடு கருவிகளும் அவற்றிற்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக செய்ததாக இஸ்ரோ தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து நிலவில் இரவு தொடங்கியதால் செப்டம்பர் 4 ஆம் தேதி லேண்டர் மற்றும் ரோவர் உறக்க நிலைக்கு சென்றது. அதன் பின்னர் செப்டம்பர் 22ஆம் தேதி மீண்டும் நிலவில் சூரிய உதயம் ஏற்பட்டபோது விஞ்ஞானிகள் அதை மீண்டும் எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால் தற்போது வரை அவற்றிலிருந்து எவ்விதமான சிக்னலும் கிடைக்கவில்லை.
நிலவில் கடுமையான குளிர் இருக்கும் என்பதால் அதில் உள்ள சாதனங்கள் பழுதடைந்திருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் என்ற கடும் குளிரை சந்திரயான் 3ல் உள்ள கருவிகள் தாக்குப் பிடிக்கும் படி வடிவமைக்கப்படவில்லை.
மேலும் இது குறித்து பேசிய சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் "நிலவின் தென் துருவத்தை நோக்கி அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டன் மற்றும் ரோவர் சிறப்பாக செயல்பட்டுள்ளன. அவை அனுப்பப்பட்ட அதற்கான பணியை சிறப்பாக முடித்துள்ளது. விண்கலனில் பொருத்தப்பட்ட எல்லா கருவிகளும் பாதிப்பில்லாமல் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதை ஒரு நிலவு நாள் மட்டுமே தாங்கும் வகையிலேயே வடிவமைத்திருந்தோம். அதைத் தாண்டி இயங்கும்படியான அணு பேட்டரி அம்சம் நம்மிடம் இல்லாத காரணத்தால், இரண்டாவது நிலவு நாளில் லேண்டரையும், ரோவரையும் எழுப்ப முடியவில்லை" என அவர் கூறினார்.
தொடர்ந்து லேண்டெர் தரை இயங்கிய இடத்தில் சூரிய வெளிச்சம் மெல்ல மறையத் தொடங்கியுள்ளது. வரும் அக்டோபர் 6ம் தேதி மீண்டும் அங்கே இரவு தொடங்க இருப்பதால், அதற்குள்ளாக விண்கலத்திலிருந்து சிக்னல் கிடைக்குமா என இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.