கூகுளைப் பின்னுக்குத் தள்ளுமா Perplexity AI?

Perplexity AI
Perplexity AI

வேகமாக வளர்ந்து வரும் கணினி உலகில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தேடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் அதற்கு ஈடாக வளர்ந்து கொண்டேதான் வருகிறது.  கூகுள் நிறுவனம் முன்னணி தொழிற்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்த கூகுள் நிறுவனத்தின் AI மற்றும் இணைய தேடல் திறன்களின் ஆற்றலையும் கூட பின்னுக்கு தள்ளும் அளவிற்கு  ஒரு சிறிய தேடல் தொழிற்நுட்ப ஸ்டார்ட்டப் நிறுவனம் களமிறங்கியுள்ளது. ‘Perplexity AI’ உரையாடல் மற்றும் இணைய தேடல் திறன்களின் பயன்பாட்டிற்கான ஒரு வலுவான ஆற்றல் மிகுந்த சக்தியாக உருவாகி வருகிறது.

Perplexity AI என்றால் என்ன?

Perplexity AI என்பது ‘சான் பிரான்சிஸ்கோவை’ தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமாகும். இதனுடைய தேடல் கருவிகள் பயனாளர்களுக்கு தேவையான ஆதாரங்கள், மேற்கோள்கள் மற்றும் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களையும் உடனடியாக வழங்குகிறது. ‘ஓபன்ஏஐ’ மற்றும் மெட்டாவின் ஓப்பன் சோர்ஸ் மாடல் ‘லாமா’ உள்ளிட்ட பல்வேறு பிரபல  தேடல் தொழிற்நுட்பத்தின் மாடல்களை அடிப்படையாகக் கொண்டுதான் செயல்பட்டு வருகிறது . மேலும் இதுபோன்ற  மாதிரிகள் தகவல்களைச் சுருக்கித் திறம்பட அதனை பயனாளர்களுக்கு வழங்கும்  திறன் கொண்டவை.

Perplexity AI எவ்வாறு பயனாளர்களுக்கு உதவுகிறது?

இது பயனாளர்களுக்கு மிகவும் துல்லியமான பதில்களை வழங்குகிறது. அதாவது சாதாரணமாக ஒரு நண்பருடன் உரையாடுவது போலவே இந்த  தேடுபொறியுடன் உரையாடும் வசதி இதில் அமைந்துள்ளது. ஆம்! துல்லியமான பதில்கள் மட்டுமல்ல, மிகவும் குறிப்பிட்ட பதில்களும் இதில் நமக்கு கிடைக்கும். பல நேரங்களில் தொழிற்நுட்பம் பெருக்கெடுத்தாலும்கூட நம்முடைய கேள்விக்கேற்ற பதிலிற்காக இணையத்தையே சல்லடை போட்டு அலசி ஆராய வேண்டிய சூழலில் தான் இருக்கிறோம். இனி இது போன்ற சூழலில் இருந்து நாம் விடைபெறலாம். ஏனெனில் இதற்கான தீர்வாகவே இந்த Perplexity AI உரையாடல் மூலமாகவே தகவல்களை வழங்கும் வசதியோடு இயங்கிவருகிறது.

குறிப்பிடத்தக்க  சிறப்பம்சங்கள்:

Perplexity AI என்பது OpenAI இன் GPT-3.5 மூலம் இயங்குகிறது. அதோடு இதனுடைய தேடலானது ‘சாட்போட்’ இடைமுகத் தேடலைப் பயன்படுத்துகிறது. பயனாளர்களின் இயற்கை மொழி புரிதல்களின் அடிப்படையில் பதில்கள் வழங்கப்படுகின்றன. விளம்பரமில்லாத இதன் வடிவமைப்பு பயனாளர்களின் கவனத்தை ஈர்க்கச் செய்கிறது.

மற்றவையோடு ஒப்பிடுகையில் Perplexity AI மிகவும் தனித்துவமானது. இது தகவல்களை வழங்கும் அணுகுமுறையை கொண்டே நம்மால் சில வேறுபாடுகளை அறியமுடியும். Perplexity AI பயனாளர்களுக்கு வழங்கும் ஒவ்வொரு பதிலும் கவனமாக வடிவமைக்கப்பட்டு, மேற்கோள்களால் ஆதரிக்கப்படுகிறது. பின்னர் நன்கு ஆய்வு செய்யப்பட்ட கட்டுரையாக வழங்கப்படுகிறது. பரந்த டிஜிட்டல் உலகின் அறிவிற்கான தேடலில் தகவல்கள் குறித்த ஆழம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதியளிக்கும் வகையில் தான் இதன் அணுகுமுறையானது அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்த 3 Apps இருந்தா போதும், போனிலேயே சூப்பரா எடிட் பண்ணலாம்!
Perplexity AI

ஒரு தனிநபரின் புரட்சி:

அரவிந்த் ஸ்ரீனிவாஸ், இவர் தான் Perplexity AI-யின் இணை நிறுவனர். இவர் முன்னதாக கூகுள் மற்றும் ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த  அனுபவங்களைக் கொண்டு தான் இந்த  Perplexity AI என்ற புதிய தொழில்நுட்ப அத்தியாயத்தை உருவாக்கி வருகிறார். இவருடைய இந்த முயற்சியானது, ஆன்லைனில் வெறும் தகவல்களை மட்டுமே வழங்குவது போன்று இல்லாமல்  பயனாளர்களுக்கான நம்பகத்தன்மை மற்றும் அணுகுமுறையிலான புதுவித மாற்றத்தின் மூலமாக இந்த  டிஜிட்டல் தேடலில் ஒரு  புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில் “Perplexity AI ஆனது தற்போது இந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தியா சார்ந்த LLMகளை உருவாக்கும்  ஸ்டார்ட்அப்களுடன் இணைந்து செயல்பட Perplexity AI திட்டமிட்டுள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com