விக்ரம் லேண்டர் மீண்டும் இயங்குமா? இஸ்ரோவின் அடுத்த கட்ட பணிகள்!

CHANDRAYAN 3
CHANDRAYAN 3

சந்திரயான் - 3 திட்டத்தின் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் தனது பணிகளை வெற்றிகரமாக முடித்து தற்போது நிலவில் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில், செப்டம்பர் 22ஆம் தேதி நிலவில் சூரிய உதயம் வந்ததும் மீண்டும் அவை இயங்கத் தொடங்குமா என இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 

நிலவின் தென் துருவப் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் விக்ரம் லாண்டர் வெற்றிகரமாக சாஃப்ட் லேண்டிங் செய்தது. இதன் ஆயுட்காலம் மொத்தம் 14 நாட்கள் கொண்டவை. ஏனென்றால் சந்திரனின் ஒரு நாள் என்பது பூமியில் சுமார் 28 நாட்களுக்கு சமம். சந்திரனில் 14 நாட்கள் இரவாகவும் 14 நாட்கள் பகலாகவும் இருக்கும். எனவே 14 நாட்களுக்குப் பிறகு சூரிய ஒளி இல்லாமல் போவதால், பிரகியான் ரோவரும் விக்ரம் லேண்டரும் பனியால் உறைந்துபோய் பழுதாக வாய்ப்புள்ளது. 

அதுமட்டுமின்றி பிரக்யான் ரோவர் செயல்பட மின்சாரம் தேவை. இதற்காக சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும்வகையில் சோலார் பேனல்கள் அதில் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் 14 நாட்களுக்குப் பிறகு நிலவில் சூரிய ஒளி இல்லாமல் போவதால் அவற்றால் மின்சார உற்பத்தி செய்ய முடியாமல் இயக்கம் தடைபட்டுவிடும். நிலவில் பொதுவாகவே சூரிய வெளிச்சம் குறையும்போது மைனஸ் 130° செல்சியஸ்க்கு வெப்பம் சென்றுவிடும் என நாசா தெரிவித்துள்ளது. இது சில பகுதிகளில் மைனஸ் 250° செல்சியஸ் வரை செல்லுமாம்.  இத்தகைய குறைந்த வெப்பநிலையில் ரோவர், லேண்டர் இரண்டுமே உறைந்துவிடும். 

14 நாட்கள் கழித்து, செப்டம்பர் 22ஆம் தேதி விக்ரம் லேண்டர் உள்ள பகுதியில் மீண்டும் சூரியஒளி படரும். எனவே அவற்றை மீண்டும் செயல்பட வைப்பதற்கு விஞ்ஞானிகள் முயற்சி செய்வார்கள். ஆனால் அவை குறைந்த வெப்பத்தில் உறைந்துபோனதால், அதிலிருந்த மின்னணு சாதனங்கள் மற்றும் பேட்டரிகள் சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே நிலவில் மீண்டும் சூரியன் வந்ததும் அது செயல்படுமா செயல்படாதா என்பதைப் பார்க்க இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com