மயக்க மருந்தைக் கண்டுபிடித்தது யார்? அடடா, சரியான போட்டி!

Anesthesia
Anesthesia
Published on

வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன் (William Thomas Green Morton) அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு பல் மருத்துவர். இவர் மாசசுசட்ஸ் சார்ல்டன் நகரில் 09 ஆகஸ்ட் 1819 அன்று பிறந்தார். பால்டிமோர் (Baltimore) பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பல் மருத்துவம் பயின்று தனது 23வது வயதில் பல் மருத்துவரானார். அக்காலத்தில் மயக்க மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் வலியோடு பற்களை அகற்ற வேண்டிய சூழ்நிலை நிலவியது.  

மார்ட்டன் வலியின்றி பல்லைப் பிடுங்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தார். ஒரு சமயம் டாக்டர் சார்லஸ் டி. ஜாக்சன் (Dr.Charles T Jackson) என்பவருடன் உரையாடிய போது அவரிடம் பற்களை அகற்றும் போது நோயாளிகள் வலியால் துடிப்பதை எடுத்துக் கூறினார் மார்ட்டன். ஜாக்சன் அவரிடம் ஈத்தரைப் பயன்படுத்திப் பார்க்கலாமே என்று ஒரு யோசனை தெரிவித்தார். இதற்கு முன்னால் எந்த மருத்துவரும் இதை அறுவை சிகிச்சை செய்ய உபயோகித்தது இல்லை.

தொடர்ந்து இதைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தார் மார்ட்டன்.  ஒருசமயம் ஈத்தரை வாங்கி அதை தன் நாயை அழைத்து அதை முகரச் செய்தார். நாய் மயங்கி கீழே விழுந்து சில நிமிடங்கள் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்தது. தொடர்ந்து ஈத்தரின் நம்பகத் தன்மையினை மேலும் சோதித்து உறுதி செய்ய தன்னையே சோதனைக்கு உட்படுத்திக் கொண்டார் மார்ட்டன். ஆம். ஈத்தரை எடுத்து தானே முகர்ந்து பார்த்தார். சில நிமிடங்கள் மயங்கிய பின்னர் விழித்தெழுந்தார். அவர் நினைத்தது போல ஈத்தர் மிகச்சிறந்த வலிநிவாரணி என்பதை புரிந்து கொண்டார்.

தன்னிடம் வரும் ஒரு நோயாளிக்கு இதைப் பயன்படுத்திப் பார்க்க விரும்பினார். கி.பி.1846 ஆம் ஆண்டில் மிகுந்த பல் வலியுடன் ஒரு நோயாளி மார்ட்டனிடம் வந்து சிகிச்சை செய்யுமாறு கூறினார். மார்ட்டர் அந்த நோயாளியை ஈத்தரை முகரச் செய்து பல்லைப் பிடுங்கி எடுத்தார். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த நோயாளி தான் எந்த வலியையும் உணரவில்லை என்று தெரிவித்தார். மயக்க மருந்து குறித்தான தன் சோதனை வெற்றி அடைந்தது குறித்து மார்ட்டன் மிகவும் மிகழ்ச்சி அடைந்தார்.     

ஈத்தரை பொது அறுவை சிகிச்சையில் பயன்படுத்த விரும்பிய மார்ட்டன், மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜான் கொலின்ஸ் வாரென் (Dr. John Collins Warren) என்பவரை அணுகினார். டாக்டர் வாரென் கி.பி.1846 ல் ஈத்தரை முகரச் செய்து ஒரு நோயாளிக்கு ஒரு கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றினார்.  நோயாளி வலி எதையும் உணரவில்லை. மயக்க மருந்து வெற்றிகரமாக வேலை செய்ததைக் கண்டு மருத்துவ உலகம் வியந்தது. இதன் பின்பு மார்ட்டனின் புகழ் எங்கும் பரவியது.

இதையும் படியுங்கள்:
Time Travel சாத்தியமா? 
Anesthesia

டாக்டர். வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன் தனது கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெற விண்ணப்பித்தார். மார்ட்டன் கண்டுபிடித்த மயக்க மருந்து தனது கண்டுபிடிப்பே என்று டாக்டர் சார்லஸ் டி.ஜாக்சன் உரிமை கொண்டாடினார்.  டாக்டர் க்ராபோர்டு வில்லியம்சன் லாங் (Dr.Crawford Williamson Long) என்ற மருத்துவர் கி.பி.1842 ல் அதாவது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தான் ஈத்தரை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையினை செய்து விட்டதாகக் கூறி இது தனது கண்டுபிடிப்பு என்று உரிமை கொண்டாடினார். டாக்டர் ஹோரேஸ் வெல்ஸ் (Dr. Horace Wells) என்பவரும் இந்த கண்டுபிடிப்பில் உரிமை கொண்டாடினார். இந்த வழக்கு சுமார் இருபது வருடங்களாக நடைபெற்றது.  இறுதியில் டாக்டர் மார்ட்டன் தனது 48 வது வயதில் 15 ஜீலை 1868 அன்று நியூயார்க்கில் காலமானார். 

தனது தொடர்ந்த ஆராய்ச்சிகளாலும் இடைவிடாத முயற்சிகளாலும் கி.பி.1846 ஆம் ஆண்டில் ஈத்தரை அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்தாகப் பயன்படுத்த முடியும் என்பதை முதல்முதலாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்த முதல் பல் மருத்துவர் டாக்டர். வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன் ஆவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com