பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு சவாலான பணியாக மாறியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களை இயற்றி, பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை. இந்த சூழ்நிலையில், உத்தரபிரதேச பள்ளி மாணவர்கள் இருவர் பெண்களின் பாதுகாப்பிற்காக ஒரு அசாதாரணமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
மகராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் திவாரி மற்றும் கோமல் ஜெய்ஸ்வால் என்ற இரு மாணவர்கள் இணைந்து, பெண்களின் பாதுகாப்பிற்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செருப்பை வடிவமைத்துள்ளனர். பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த செருப்பு, ஆபத்தான சூழ்நிலையில் பெண்களுக்கு உடனடி பாதுகாப்பை வழங்குகிறது. பார்ப்பதற்கு சாதாரண செருப்பு போலவே இருந்தாலும், இது பெண்களின் பாதுகாப்பிற்கான ஒரு தொழில்நுட்ப கவசம் என்பதை மறுக்க முடியாது.
இந்த செருப்பில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இதில் உள்ள SOS பொத்தான்தான். ஆபத்தான சூழலில் பெண்கள் தங்கள் கால்விரலால் இந்த பொத்தானை அழுத்தும் போது, உடனடியாக அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும். மேலும், இந்த செருப்பில் பொருத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம், சம்பவம் நடக்கும் இடத்தின் நேரடி ஆடியோ மற்றும் இருப்பிடத்தையும் சேர்த்து அனுப்புகிறது. இதனால், உதவி செய்பவர்களுக்கு சரியான தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கின்றன. அவசர காலத்தில் செல்போனை எடுக்க முடியாத சூழ்நிலையிலும் இந்த செருப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதுமட்டுமின்றி, இந்த செருப்பு தாக்குபவர்களுக்கு மின்சார அதிர்ச்சி கொடுக்கும் திறன் கொண்டது என்பது கூடுதல் சிறப்பு. பெண்களை பாதுகாக்க இது ஒரு கூடுதல் அரணாக இருக்கும் எனலாம். வெறும் ரூ.2,500 விலையில் கிடைக்கும் இந்த செருப்பு, சாதாரண பெண்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் மலிவு விலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எதிர்காலத்தில் கேமரா போன்ற கூடுதல் அம்சங்களை சேர்க்கும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் இந்த மாணவர்களின் கண்டுபிடிப்பை பாராட்டியுள்ளது. அரசு ஆதரவுடன் இந்த செருப்பு விரைவில் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொழில்நுட்பம் எந்த அளவுக்கு உதவ முடியும் என்பதற்கு இந்த மாணவர்களின் கண்டுபிடிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
குறைந்த செலவில் அதிக பாதுகாப்பு என்பதே இந்த கண்டுபிடிப்பின் நோக்கம். இதுபோன்ற புதுமையான முயற்சிகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இளம் தலைமுறையினருக்கு தொழில்நுட்பத்தின் மீதுள்ள ஆர்வத்தையும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.