
ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடும் கார்!
அரை நூற்றாண்டுக்குமுன்னால் இது வெறும் கற்பனை, அல்லது, சுவையான அறிவியல் புனைகதை. ஆனால் இன்றைக்கு, தொழில்நுட்பம் இந்த நிஜத்தை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் ஓட்டுநர் இல்லாத காரை உருவாக்க முனைந்துகொண்டிருக்கின்றன, அதில் பெரிய அளவு முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. விரைவில் நம் தெருக்களிலும் கார்கள் தானாக விரைந்தோடும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
கார் எப்படித் தானாக ஓடும் என்கிற கேள்வியைச் சற்று மறந்துவிடுங்கள். இப்போது நாம் பேசப்போகும் கேள்வி சற்று வேறுவிதமானது: அப்படிக் கார் தானாக ஓடத் தொடங்கினால், இதுவரை கார் ஓட்டுநர்களாக இருந்தவர்களுடைய நிலைமை என்ன ஆகும்? அவர்கள் வேலையை இழந்து வீட்டுக்குப் போகவேண்டியதுதானா?
இந்தக் கேள்வி கார்களுக்குமட்டுமானது இல்லை. ஒருகாலத்தில் தொழிற்சாலைகளில் மனிதர்கள் செய்துகொண்டிருந்த பல வேலைகளை இப்போது ரோபோக்கள் (இயந்திர மனிதர்கள்) செய்யத் தொடங்கிவிட்டன. முன்பெல்லாம் தொலைபேசியில் ஒரு நிறுவனத்தை அழைத்தால் யாராவது ஒரு மனிதர்தான் எடுத்துப் பேசுவார். ஆனால், இப்போது நிறுவனங்கள் அந்த வேலையை மென்பொருள்களிடம் ஒப்படைத்துவிட்டன. இதுபோன்ற மாற்றங்களை ஒவ்வொரு துறையிலும் பார்க்கமுடிகிறது.
இதை நிறுவனங்களின் கோணத்தில் பார்த்தால், மனிதர்களுடன் ஒப்பிடும்போது இயந்திரமோ மென்பொருளோ இருபத்து நான்கு மணிநேரமும் உழைக்கும், சொன்ன வேலையைக் கேட்கும், வம்பு, அரசியல் செய்யாது, பதவி உயர்வு கேட்காது, பக்கத்து நிறுவனத்தில் அதிகச் சம்பளம் தருகிறார்கள் என்று தாவிக் குதிக்காது... முக்கியமாக, மனிதர்களைவிடப் பலமடங்கு விரைவாகவும் துல்லியமாகவும் வலிமையுடனும் இவற்றால் செயல்படமுடியும். அதனால், குறைந்த முதலீட்டில் அதிக உழைப்பைப் பெற்று நிறுவனத்தின் வருவாயைப் பெருக்கலாம் என்று நிறுவனர்கள் நினைக்கிறார்கள்.