அநேகமாக உலகின் எல்லா நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளையும் நம் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் காண முடிகிறது. இதற்கு முக்கிய காரணம், கரித்துண்டுதான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆஃப்டர் ஆல் சிறு கரித்துண்டு! ஆனால் அதுவே இன்று சூரத் – வைரத்தின் சொர்க்கபுரி!
ஆமாம், நிலத்துக்கு அடியிலிருந்து எடுக்கப்படும் கரி, சூரத்தில் ஒளிர்கிறது. பட்டைத் தீட்டப்பட்ட அந்தக் கரித்துண்டு, வைரம் என்று அழைக்கப்படுகிறது!
குடிசைத் தொழிலாகவே ஆரம்பிக்கப்பட்ட இந்த பட்டை தீட்டும் பணி, இப்போது மிக பிரமாண்டமான கட்டட வளாகத்துடன் கூடிய அகில உலக கேந்திரத்தில் நவீன உபகரணங்களுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1960களில் எந்த தீர்க்கதரிசியின் தொலைநோக்கோ தெரியவில்லை, சூரத் நகரின் பிரதான தொழிலாக வைரம் பட்டை தீட்டுதல் வெகு பரவலாக வியாபிக்க ஆரம்பித்தது. அதை நுணுக்கம் மிகுந்த ஒரு கலையாகவே வளர்த்தார்கள். பயிற்சி வகுப்புகள் நடத்தி ஒளி பிரதிபலிப்பின் வண்ணத் தொகுதிகளைக் கூட்டினார்கள்.
(இந்தத் திறமையில் உருவானதுதானே கோஹினூர் வைரம்! நீள்வட்டத்தில் 66 பட்டைகளுடனும், 21 கிராம், அதாவது 105 காரட் எடையுடனும் மின்னும் ஒளிமலை இது. நம் நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டு, பலர் கைகளுக்கு மாறி, இப்போது இங்கிலாந்து நாட்டில் ராணி அணிந்திருந்த கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது)
வைரத்தின் மதிப்பே அதன் வெட்டுகளிலும், அவை தீட்டப்படும் துல்லியத்திலும்தான் இருக்கிறது. இதைப் புரிந்து கொண்ட வெளிநாட்டவர்கள் நம்மிடமிருந்து வைரங்களை இறக்குமதி செய்துகொண்டு வியாபாரத்தில் கொழிக்கிறார்கள். சிலர் புதுமை வடிவங்களை அறிமுகப்படுத்த விரும்பி சூரத் நகருக்கே வந்து அதேபோன்ற வைரக் கற்களைத் தயாரித்துத் தருமாறு கேட்கிறார்கள்.
வர்த்தக ரீதியாகவும், ஆராய்ச்சி பூர்வமாகவும், சூரத் வைரத்தை அணுகும் பிற நாட்டு வியாபாரிகள் மற்றும் ஆர்வலர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கவே, பிரமாண்டமானதொரு வளாகத்தை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் வைர ஆராய்ச்சி மற்றும் வணிக வளாகம். அமெரிக்காவின் பென்டகனையும் விஞ்சும் இந்த பிரமாண்டம், கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.
ஆமாம், சூரத் நகரின் புறநகர் பகுதியான கஜோட் என்ற இடத்தில் 36 ஏக்கர் நிலத்தில் இது அமைந்திருக்கிறது. சென்ற வருடம் (17.12. 2023) திறந்து வைக்கப்பட்ட இந்த வளாகம், மொத்தம் 6,66,000 சதுர மீட்டர் பரப்பு கொண்டது! ஒவ்வொன்றும் 15 தளங்களைக் கொண்ட, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஒன்பது கோபுரங்கள் எழிலுடன் நிமிர்ந்து நிற்கின்றன. 4200 அலுவலகங்களுக்கு இங்கே இடம் உண்டு. வளாகத்திற்குக் கீழே, நிலத்தடியில் 4500 கார்கள் மற்றும் 10000 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இரண்டு நிலை பார்க்கிங் தளங்கள் உள்ளன. பல்நோக்கு அரங்குகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மகா மண்டபங்கள், உணவகங்கள், வங்கிகள், சில்லறை விற்பனை கடைகள் என்று இந்த வளாகம் தனி உலகமாகத் திகழ்கிறது.
இங்கே வைர ஆராய்ச்சி நிறுவனம் (National Diamond Research Institute), சர்வதேச கல்விக் கூடங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் என்றும் களை கட்டுகிறது. உலகிலேயே மிகப் பெரிய கார்ப்பரேட் கட்டடம் என்ற பெருமை கொண்டிருக்கிறது.
இப்போது உலகின் ஒளிக் கண்களை ஈர்த்திருக்கும் சூரத் நகரம், மூக்குத்தி வைரம் அளவுக்கே உலக வரைபடத்தில் இடம் பெற்றிருந்தாலும், புகழில் மிகப் பெரிய வைர அட்டிகையாகவே ஜொலிக்கிறது.