சமீபத்தில் தமிழில் வெளியான ‘ப்ளாக்’ திரைப்படம், ஆங்கில திரைப்படங்களான ஸ்டார் ட்ரெக், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்சில் (MCU) தார் ரக்னராக், ஸ்பைடர் மேன், அவெஞ்ஜர்ஸ் எனப் பல திரைப்படங்கள், டெஜா வூ, இண்டர்ஸ்டெல்லார்.....
இது போன்று வர்ம்ஹோலை குறிப்பிடும் இன்னும் பல திரைப்படங்களுக்கு நன்றி.
பள்ளிகாலத்தில் அறிவியல் வகுப்புகளில் தூங்கியவர்களும், அறிவியல் என்ற பெயரைக் கேட்டால் அலர்ஜியாகி தும்முபவர்களும் கூட இப்போது புழுத்துளை அதாவது வர்ம்ஹோல் என்றால் என்ன? என அறிந்து கொள்ள ஆர்வப்படுகின்றனர்.
புழுத்துளை (worm hole) என்றால் என்ன?
புழுத்துளைகள் உண்மையில் உள்ளனவா? அவற்றின் மூலம் பிரபஞ்சத்தின் வேறொரு ஸ்பேஸ்டைம் என்னும் காலவெளிக்கு பயணிக்க இயலுமா? இதற்கான விடைகளை கடந்த நூறு ஆண்டுகளாக விஞ்ஞானிகள் தேடிக்கொண்டே இருக்கின்றனர்.
இயற்பியலில் இரண்டு முக்கிய கோட்பாடுகள் உள்ளன - க்வாண்ட்டம் மெக்கானிக்ஸ் மற்றும் ஜெனரல் ரிலேட்டிவிட்டி
நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் அனைத்துமே அணுக்களால் ஆனவை. இந்த பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களை விட ஒரு மனிதனின் உடலில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை அதிகம். நம் விரல் நகத்தில் ஆயிரம் லட்சம் அணுக்கள் உள்ளன. ஒரு அணுவின் மத்தியில் உள்ள ந்யூக்லியஸ் அந்த அணுவைவிட பத்தாயிரம் மடங்கு சிறியதாக இருக்கும். இந்தப் பொருட்களை அணு அணுவாக ரசித்து படிப்பது க்வாண்ட்டம் மெக்கானிக்ஸ்.
மொத்த பிரபஞ்சத்தில் வெறும் ஐந்து சதவீதம்தான் நாம் இதுவரை கண்டுள்ள பிரபஞ்சம். அதிலும் அடக்கமாக இருக்கும் ஒரு சிறிய புள்ளிதான் நம் சூரிய குடும்பம். இந்த பிரமாண்டத்தை வாய்பிளந்து படிப்பது ஜெனரல் ரிலேட்டிவிட்டி.
இந்த இரண்டு எதிர்வீட்டு குடும்பங்களும் அவரவர் வீட்டிற்குள் ஒற்றுமையாக இருந்தாலும், இரு குடும்பங்களுக்குள் அன்னந்தண்ணி புழங்க மாட்டார்கள். இந்த இரண்டு குடும்பங்களையும் சேர்த்து வைக்க ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்பட பல விஞ்ஞான நாட்டாமைகள் முயன்றும் சிறிதும் பலனில்லை.
இவர்களுக்கிடையில் ஒரு சிறிய பாலமாவது கட்டும் முயற்சியில் ஐன்ஸ்டீனும், நேதன் ரோசன் என்னும் விஞ்ஞானியும் இணைந்து ஐன்ஸ்டீன் – ரோசன் பாலம் (ஈ.ஆர்.பாலம்) என்னும் வர்ம்ஹோல் மாதிரியை 1935ல் உருவாக்கினர். முதன்முதலில் வர்ம்ஹோலைப் பற்றி அறிவியல் உலகம் கண்ட கூற்றும் இதுவே.
இதன்படி ஸ்பேஸ்டைம் என்னும் காலஅளவை முப்பரிமாணத்தில் (3டியில்) ஒரு சமமான, சீரான தரையாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன்மீது ஒரு பெரிய இரும்புக் கல்லை கொண்டு அழுத்தினால், தரையில் பெரிய குழி உண்டாகும். இந்த குழியுள்ள இடத்தில் மேலும் தோண்டிக் கொண்டே சென்றால் தரைக்கு வால் முளைத்ததைப் போல் தெரியும். விண்வெளியில் இந்த இரும்புக்கல் என்பது ‘ப்ளாக் ஹோல்’ எனப்படும் கருந்துளை.
கருந்துளைகள் விண்வெளியில் ஏராளமாக உள்ளன.
இந்த வால்முளைத்த தரை போன்ற இரு உருவங்கள் விண்வெளியில் இருந்தால், இரண்டு வால்களையும் வளைத்து ஒரு சுரங்கப்பாதையின் மூலம் இணைக்க இயலும். இதனால் விண்வெளியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குறுக்குவழியில் விரைவாக பயணிக்க இயலும். இந்த குறுக்குவழிதான் வர்ம்ஹோல்.
இப்படிப்பட்ட புழுத்துளைகள் விண்வெளியில் இருந்தால் அவற்றின் மூலம் தகவல் பரிமாற்றம் செய்ய இயலும். 2022ல் கலிபோர்னியா ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானிகள் குழு ஒன்று க்வாண்ட்டம் கணிப்பொறிகள் வழியாக புழுந்துளையாகவே செயல்படும் ஒரு மாதிரியை நிகழ்த்தினர். இது அறிவியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது.
வருங்காலத்தில் பாய்ண்ட்டு பாய்ண்ட் விமானங்கள் போல விண்வெளிப் புழு ட்ராவல்ஸ் பறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.