0,00 INR

No products in the cart.

செல்சாரைத் தேடிய ரா.கி.ரா

சுஜாதா தேசிகன்                                                                                                                                         

கடைசிப்பக்கம்            

சென்ற வாரம் சமூகம் அண்ணாத்த ‘சிங்கிள்’ஸ், ‘மாநாடு’ டிரைலர் என்று  மும்முரமாக இருந்த சமயம் சரித்திர நாவலுக்கான இலக்கணத்தை முற்றிலும் உடைத்து  “நான், கிருஷ்ண தேவராயன்” என்று தேவராயனே தன்னுடைய கதையை நமக்குச் சொல்லுவது போல அருமையான ஒரு படைப்பைக் கொடுத்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்களின் பிறந்த தினம் வந்து சென்றது.

”நூறு புத்தகங்கள், ஆயிரக்கணக்கான பக்கங்களைப் படித்துப் பல அறிஞர்களுடன் பேசி, இடங்களுக்குச் சென்று பார்த்து ஆராய்ந்து எழுதப்பட்ட நாவலில் பண்டிதத்தனம் தலை தூக்காமல் இருப்பது ஆச்சரியமே”  என்று எழுத்தாளர் சுஜாதா இந்த நாவலுக்கான முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.

சுஜாதா காலமான சில வாரங்கள் கழித்து எனக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.

“தேசிகனா?”

“ஆமாம்… நீங்க?”

“ரங்கராஜன்…ரா.கி.ரங்கராஜன்… எழுதுவேன்”

ஒரு நிமிஷம் தூக்கி வாரி போட்டது. “சார்…. ’நான், கிருஷ்ணதேவராயன்’ … நல்லா தெரியுமே… சொல்லுங்கோ!” என்றேன்

“நீங்களும் நல்லா எழுதறீங்க…” என்றபோது மேலும் தூ.வா.போ.

அவர் தொடர்ந்தார்.

“சுஜாதா Henry Slesar (ஹென்றி செல்சார்) எழுதிய புத்தகத்தைப் படித்துவிட்டு என்னிடம் தருவதாக சொன்னார். அதற்குள் அவர் போய்விட்டார். புத்தகம் கிடைக்குமா?” என்றார்.

”வாங்கித் தருகிறேன்” என்று சொல்லிவிட்டு, வெளிநாட்டில் இருந்த என் நண்பன் மூலம் வாங்கி கொடுத்தேன்.

அந்த புத்தகம் பற்றி சுஜாதா என்னிடம் பேசியிருக்கிறார். ஹிட்ச்காக் தன்னுடைய டி.வி. நிகழ்ச்சிக்குக் காட்சிகளை எழுத ஹென்றி செல்சாரை வேலைக்கு அமர்த்தினார். செல்சார் அருமையான சிறுகதைகளையும் கொடுத்துள்ளார். அவற்றை ஹிட்ச்காக் குறும்படங்களாக எடுத்துள்ளார்.

இரண்டு ரங்கராஜன்களையும் கவர்ந்த செல்சர் கதைகளில்  ”The Right Kind of House” சிறுகதையைப் படித்துவிட்டு, அதனுடைய திரைவடிவத்தையும் தேடிப் பார்த்தபோது ’திரைக்கதை எப்படி இருக்க வேண்டும்’ போன்ற விஷயங்களைக் கவனிக்க முடிந்தது.

மீதம் உள்ள கடைசிப் பக்கத்தில் கதையை சிக்கனமாக தருகிறேன்.

”வீடு விற்பனைக்கு” என்ற பலகையை ஊருக்குள் நுழையும் வாட்டர் பெரி பார்க்கிறார். ஊர் இருக்கும் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் விசாரிக்கிறார்.

வீட்டின் உரிமையாளர் ஒரு வயதான பெண்மணி; ஐந்து வருஷம் முன்பு தன் பையனைப் பறிகொடுத்தவர்; வருடங்கள் கடந்தும் அந்த வீட்டை யாரும் வாங்க முன்வரவில்லை. அல்லது வந்தவர்கள் அதன் விலையைப் பார்த்துவிட்டு வாங்காமல் சென்றுவிட்டார்கள்; 10,000 டாலர் மதிப்புள்ள வீட்டை, ஐந்து மடங்கு அதிக விலை சொல்லுகிறார்… ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் தகவல் கொடுக்கிறார்கள்.

“அந்தப் பெண்மணியிடம் பேசிப் பார்க்கிறேன்” என்று பெரி கிளம்புகிறார்.

”பேரம் பேசுவதாக இருந்தால் நீங்கள் போகலாம்” என்று அந்தப் பெண்மணி கராராக தன் பேச்சை ஆரம்பிக்கிறார்.

“நீங்கள் சொல்லும் விலைக்கே அந்த வீட்டை வாங்கிக்கொள்ளுகிறேன்” என்கிறார் பெரி.

”நிஜமாகவா?” என்று கேட்டுவிட்டு அப்பெண்மணி பெரிக்கு லெமன் ஜூஸ் கொடுத்துவிட்டு, தன் குடும்பம் பற்றிய சில தகவல்களைச் சொல்லிவிட்டு,  ”என் பையன் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டான்” என்கிறாள்.

“எப்படி?” என்று பெரி கேட்க,

“ஒரு நாள் ராத்திரி என் மகன் வீட்டுக்கு வந்தான். வேலை போய்விட்டது, சில வாரங்கள் இங்கே தங்கப் போவதாகவும் சொன்னான்; கையில் ஒரு கருப்புப் பை வைத்திருந்தான். அதில் என்ன இருந்தது என்று சொல்லவில்லை. இரவு ஒரு நாள் அவன் அறையில் பேச்சுக் குரல், சண்டை, சாமான்கள் உருளும் சத்தம் கேட்டு அங்கே சென்றேன்.  அங்கே துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தான். சுட்டவன் ஜன்னல் வழியாகத் தப்பிவிட்டான். காவல்துறை அதிகாரிகள், வங்கிக் கொள்ளையில் தொடர்பு இருக்கிறது, பங்கு போடும் போது நிகழ்ந்த சண்டையில் சுடப்பட்டான்” என்றார்கள்.

”சுட்டுவிட்டு போனவனைக் கண்டுபிடித்தார்களா?” என்று பெரி கேட்க, ”இல்லை. அதனால் தான் இந்த வீட்டை ஏகப்பட்ட விலைக்கு விளம்பரம் செய்தேன். நிச்சயம் கொலை செய்தவன் என் மகன் இந்த வீட்டில் ஒளித்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு போக வருவான் என்ற நம்பிக்கையில் இவ்வளவு நாள் பொறுமையுடன் காத்துக்கொண்டு இருந்தேன்” என்றாள்.

பெரி லெமன் ஜூஸை கீழே வைத்த போது கண்கள் இருண்டது.

“லெமன் ஜூஸ் கொஞ்சம் கசக்கிறது.”

1 COMMENT

  1. மிகவும் அருமையான பதிவு . ரங்கராஜனே பேச ஈர்த்து விட்டதே சேசிகனின் எழுத்துக்கள்! ஒரு பக்க கதை போல் இருந்தது பெரி வீடு வாங்க போய் மாட்டிக் கொண்ட பதிவு. செல்சாரை இணையத்தில் தேடிப் பார்க்க விழைகிறது என் உள்ளம்! பாராட்டுக்கள்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

உங்கள் குரல்

1
தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்துள்ள  தமிழக அரசை பாராட்டி, ’அந்தப் பணியை செம்மையாக நிறைவேற்றிய செவிலியர்கள்/மருத்துவர்கள் கடவுளின் தூதர்களாகப் பார்க்கப்படுவார்கள். அவர்களை மனதார பாராட்டி நன்றி சொல்லி பெருமிதம் கொள்வோம்’  என்ற கல்கியின்...

விமானத்தின் வேகத்தில் ரயில் பயணம் !

0
இஸ்ரோ விஞ்ஞானி சசிக்குமார் சந்திப்பு:  ராசி பாஸ்கர் “சக்கரத்திற்கும் சாலைக்கும் உள்ள உராய்வும், காற்றினால் ஏற்படும் உராய்வும், நாம் வேகமாகச் செல்வதற்குத் தடையாக இருப்பதோடு அதிக ஆற்றல் செலவினத்தை உருவாக்குகிறது. இந்த இடையூறுகளிலிருந்து விடுபட்டு வேகமாகப்...

போராடி அலையும் யானைகளின் கதை

0
சரஸ்வதி காயத்திரி (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு) வலசை அச்சுக்கு வருவதற்கு முன்பே விருது பெற்றிருக்கும் சு.வேணுகோபாலின் இரண்டாவது நாவல் என்ற சிறப்பும் இதற்கு உண்டு ஒரு விவசாயியாக , இந்த நிஜ உலகைப்...

காதலுக்கு மரியாதை

0
ஹர்ஷா தன் காதலுக்காக நாட்டின்  மன்னராகும் வாய்ப்பை தியாகம் செய்து முடி துறந்து சரித்திரத்தில் இடம் பெற்ற இளவரசர்களை நாம் அறிவோம். கடந்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து அரச குடும்பத்தில் கூட நிகழ்ந்திருக்கிறது,  பிரிட்டனின்...

 பொலிடிகல் பிட்ஸா

0
 கௌதம் ராம் வீரிட்டு எழும் வருண் காந்தி ஆளும் பா.ஜ.க. தரப்பில் பொதுவாக காந்தியை உயர்த்திப் பிடித்தாலும், அவர்களுக்குள்ளே ஒரு கூட்டம் காந்தியை அவமதிப்பதும், கோட்சே துதி பாடுவதுமாக இருக்கிறார்கள். வழக்கம்போல, இந்த வருட காந்தி...