உக்கிரமான தெய்வங்களை சாந்தமும், அருளும் நிறைந்தவையாக மாற்றி அமைத்தார்.

அத்தியாயம் – 14
உக்கிரமான தெய்வங்களை    சாந்தமும், அருளும் நிறைந்தவையாக மாற்றி அமைத்தார்.

ங்கரருடைய காஷ்மீர் விஜயத்தோடு தொடர்புள்ள சில கர்ணபரம்பரைக் கதைகள் உண்டு... 

சக்தி வணக்கம் செய்யும் அபிநவகுப்தர் என்பவருடன் சங்கரர் வாதம் செய்தது காஷ்மீரத்தில் தான். அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் தோற்றுப் போனார்கள்.அந்தக் கூட்டத்தின் தலைவர் சங்கரருக்கு உடலில் மிகவும் கொடிய நோய் ஒன்றை பரவும்படி ஏவல் செய்தார்.(ஏவல்,பில்லி,சூனியம் என்பவன் மந்திரவாதிகள் செய்யும் தீய செயல்கள்) 

இந்த கொடிய நோயை சங்கரரின் சீடர்கள் தங்களது பக்தியாலும், குருவிற்கு அவர்கள் செய்த சிகிச்சைகளாலும் முடக்கிவிட்டனர் என்பது ஒன்று. 

அடுத்து, ஒரு அந்தணப் பெண்மணியின் மருமகளுடன் சாக்தம் பற்றி வாதாடி வென்ற சங்கரர், அவருக்குத் தலையில் அணியும் "தரங்கம்"  எனும்  அணியை அருளினார். சாக்த சமயத்தில் அவருக்கு இருந்த புலமையை மெச்சி இதைச் செய்தார். இன்றும் காஷ்மீரப் பெண்கள் அந்த வகைத் தரங்கணியையே அணிகின்றனர். 

சங்கரர் "ஒப்பிலா அழகின் அலை" என்று பொருள்படும் "ஸௌந்தர்ய லஹரி" என்ற நூலை காஷ்மீரத்தில்தான் இயற்றினார். சங்கரர் படைத்துள்ள நூல்களில் இது மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. நூறு செய்யுள்கள் கொண்டதும், சந்த லயத்தோடு திகழ்வதுமான இந்த நூல் "ஸ்ரீ சக்ரம்" பற்றிய நுட்பமான ரகசிய தத்துவங்களையும், உள்ளத்தை உருக்கி லயிக்க வைக்கும் வகையில் பராசக்தியின் வடிவத்தையும் உணர வைக்கும். அத்துடன் ஆதாரபூர்வமான விளக்கமும் கிடைக்கும்படியும் உள்ளது. 

சக்தி வழிபாட்டில் வேத நெறிக்கு முரண்படாத முறை சமயாசாரம் எனப்படும். சங்கரர் இதை விவரித்துக் காட்டி இந்த வழிபாட்டில் உயர்ந்த முடிவு அத்வைத அனுபவமே என்று தேவி பக்தர்களுக்கு உபதேசம் செய்கிறார். 

சங்கரர் காஷ்மீரத்துக்கு விஜயம் செய்ததும். அங்கே ஆன்மீகத் துறையில் பெற்ற  வெற்றியையும் போற்றும் வகையில் ஆங்கோர் மலையின் மீது கோயில் ஒன்று அமைந்துள்ளது. மலையின் பெயர் சங்கராச்சாரியார் மலை. கோயிலின் பெயரும் சங்கராச்சாரியார் கோயில். அந்த மலைக்கு தகத்-இ-சுலைமான் என்ற பெயரும் வழங்குகிறது. இந்தக் கோயில் ஸ்ரீநகரைப் பார்த்துக் கொண்டு விளங்கும் ஆயிரம் அடி உயரமுள்ள மலைச் சிகரத்தின் மேல் இருக்கிறது. இந்தக் கோயில் கட்டப்பட்ட காலம் அநேகமாக கி.பி. 700 என்று சொல்லப்படுகிறது. 

காஷ்மீர் தேசத்தில் மிகுந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர்கள் இங்குள்ள அந்தணர்களே ஆவர். “சம்பிரதாயம்” என்ற  பழைய மரபின் தளையிலிருந்து அவர்கள் முழு விடுதலையும் இன்னும் பெற்று விடவில்லையே தவிர, கடவுளை உண்மையாக வழிபடுபவர்கள் அவர்கள். அவர்கள் பிற சமயத்தினரை இகழ்ந்துரைப்பதில்லை. யாரையும்... எதையும் கேட்டு நச்சரிப்பதில்லை. 

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக பல இடையூறு களுக்கிடையே சிக்கிக் கஷ்டப்பட்ட நிலையில் காஷ்மீரமும் இந்தியாவின் மற்றப் பகுதிகளைப் போலவே தன் பண்பாட்டை காத்துக்கொள்ள முடிகிறது என்றால் அதற்குக் காரணம், சங்கரர் தன் வாழ்வில் சாதித்த அந்தப் பெரிய செயல்தான். 

அதாவது, அவர் அத்வைதம் எனும் அசைக்க முடியா அடிப்படையின் மேல் இந்து சமயத்தைத் தொகுத்து நிறுவிய அந்த அருஞ்செயல்தான்.

••• ••• •••

ங்கரர், பதரிகாசிரத்திலிருந்தும், கேதாரத்திலிருந்தும் ராமேஸ்வரம் - கன்னியாகுமரி வரை யாத்திரை செய்தார். இடைக்காலத்தில் இந்து மதத்தின் மீது மண்டிவிட்ட மாசுகளை நீக்கி, அதன் உள்ளார்ந்த தத்துவச் சிறப்புகளை மீண்டும் வெளிக்கொணர்ந்து, பண்டைய இந்து தர்மம் மீண்டும் மேலோங்கச் செய்தார். 

சங்கர, முதன் முதலில் செய்ய வேண்டிய பெரிய காரியம் ஒன்றிருந்தது. இந்துக்களிடையே இருந்த பல வேறுபாடுகளையும் நீக்கி, அவர்களுக்குள் சமய சம்பந்தமான ஒருமைப்பாட்டை ஏற்படுத்தியது அது. ‘அத்வைதம்’ என்ற அடிப்படையில் ஒற்றுமைப்படுத்த முயன்றார். இந்து சமயத்தில் பல்வேறு கோட்பாடுகள் இருக்கலாம். ஆனால், கோட்பாடுகளுக்கிடையே தகராறுகள் இருக்கக் கூடாது. இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்ற சச்சரவுகள் இருக்கக் கூடாது. 

“சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணாபத்யம், கௌமாரம்” என்ற இந்து பிரிவுகள் ஆறையும் அவர் தூய்மைப்படுத்தி ஒன்றாக்கி ஒருவகை ஒருமைப்பாட்டை நிறுவ விரும்பினார். அதனாலேயே அவர் ஷண்மதஸ்தாபகாசார்யார்-அதாவது ஆறுவகை சமய நம்பிக்கைகளையும், வழிபாடுகளையும் நிலைநாட்டிய ஆசார்யார் என போற்றப்பட்டார். இத்தகைய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த அவர் கையாண்டு பரவச் செய்த உறுதியான கண்கூடான உபாயம்தான் "பஞ்சாயன"பூஜை வழிபாட்டு முறை. 

இந்த முறையில் ஐந்து தெய்வங்களின் பிரதிநிதி உருவங்களை வழிபடுவது வழக்கத்திற்கு வந்தது. சூரியன், அம்பிகை, விஷ்ணு, கணபதி, பரமேசுவரன் என்பவர்கள் அந்த தெய்வங்கள். 

பூஜை செய்பவர்கள் அவற்றுள் ஒன்றைத் தனது இஷ்டதெய்வமாகக் கொண்டு அதற்குப் பூஜையில் முதலிடம் தந்தனர். சங்கரர் தனது அத்வைதக் கொள்கையை பின்பற்றி, சீடர்கள் அனைவரும் பஞ்சாயதன பூஜை செய்தல் வேண்டுமென பணித்ததாக மார்க்கண்டேய ஸம்ஹிதை என்ற நூல் கூறுகிறது. 

இந்துக்களின் சமய வாழ்க்கையில் புண்ணியத்தலங்களும், திருக்கோயில்களும் மிக முக்கியமாக இடம் வகிக்கின்றன. இத்தகைய தலங்கள்,கோயில்கள் ஆகியவற்றில் பெரும்பாலான இடங்களுக்குச் சங்கரர்  யாத்திரை செய்தார். தவறான முறையில் வழிபாடு நடந்து கொண்டிருந்த இடங்களில் உரிய திருத்தங்களைச் செய்தார். 

உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தை அடியோடு அகற்றினார். மிகவும் உக்கிரமான தெய்வங்கள் எனப்படும் அனைத்தையும் சாந்தமும், அருளும் நிறைந்தவையாக மாற்றி அமைத்தார். நாட்டில் இமயம் முதல் குமரிவரை, காஷ்மீரத்திலிருந்து நேபாளம், அஸ்ஸாம் வரையிலும், துவாரகையிலிருந்து பூரீ வரையும் உள்ள பல்வேறு கோயில்களிலும் சங்கரர் மேற்கூறியபடி தெய்வங்களை அருள்வழிப்படுத்திய வரலாறு அந்தந்த இடங்களில் இன்றும் வழங்கி வருகிறது. 

சங்கரர் திருக்கயிலையில் இருந்து ஐந்து ஸ்படிக லிங்கங்களைக் கொண்டு வந்ததாகவும், அவற்றை ஐந்து இடங்களில் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறும் பழைய மரபும் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் கோயில் மோட்ச லிங்கமும், கேதார க்ஷேத்திரத்தில் முக்தி லிங்கமும், நேபாள நீலகண்ட க்ஷேத்திரத்தில் வர லிங்கமும், காஞ்சி காமகோடி பீடத்தில் யோக லிங்கமும், சிருங்கேரி சாரதா பீடத்தில் போக லிங்கமும் விளங்குகின்றன. 

சங்கரர் வைணவம், சைவம், சாக்தம்  போன்ற பல வகையான மரபுகள் சார்ந்த கோயில்களுக்கும் சென்று வழிபட்டார். காலடியில் அவர் தாயாருக்காக சூர்ணாநதியைத் தங்கள் வீட்டிற்கு அருகில் ஓடச் செய்தார் என்பதை முன்னரே நாம் படித்தோம். அந்த நதியின் போக்கு மாறியதால்  அதன் கரையில் இருந்த ஸ்ரீகிருஷ்ணன் கோயில் ஒன்று பழுதுபட்டதாம். உடனே சங்கரர் அந்தக் கோயிலை மீண்டும் உறுதியாகக் கட்டச் செய்து ஸ்ரீகிருஷ்ண விக்கிரகத்தை பிரதிஷ்டையும் செய்தார். இப்படியாக சங்கரர் காலடியை விட்டு நீங்குவதற்கு முன்னே ஒரு வழிபாட்டுக் கோயிலை நிர்ணயம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த கோயிலில் இன்றும் விஷ்ணுவை சிவன் வழியில் வழிபட்டு வருகிறார்கள். 

சங்கரர் தன் திக்விஜய யாத்திரையின்போது அனந்தசயனம் (திருவனந்தபுரம்) போன்ற புகழ்பெற்ற விஷ்ணு தலங்களுக்குச் சென்று வழிபட்டதுண்டு. 

இமயம் முதல் குமரி வரை நம் நாட்டில் ஆங்காங்கே புகழ் பெற்ற விஷ்ணு தலங்கள் உண்டு. 

புண்ணியத் தலமான பதரிகாசிரமத்தில்தான் சங்கரர் வியாசரை நேரில் கண்டு, தாம் எழுத இருக்கும் பிரம்ம சூத்ர பாஷ்யத்திற்கு அவரின் ஆசியை முன்கூட்டியே பெற்றார். அதே இடத்தில்தான் தனது குருவான கௌடபாதரையும் தரிசித்தார். 

பத்ரிகாசிரமம் பற்றியும் ஒரு கதை உண்டு. பகவான் நாராயணன் சங்கரர் கனவில் தோன்றி, அலக்நந்தா நதியின் மணலுக்குள் புதைந்து கிடக்கும் தன் திவ்ய விக்ரகத்தைத் தேடி எடுத்துப் பிரதிஷ்டை செய்யுமாறு பணித்ததாக இக்கதை கூறுகிறது. 

அக்கோயிலில் இன்றும் நம்பூதிரிகளே குருக்கள்மாராய் உள்ளனர். 

சங்கரர் திருப்பதி சென்று திருவேங்கடநாதனை வழிபட்டு,அந்த சந்நிதியில், தன-ஆகர்ஷன யந்திரம் ஒன்றை-அதாவது பணத்தை பல இடங்களில் இருந்தும் ஈர்த்து குவிக்கும் சக்கரம் வரையப்பட்ட தகடு ஒன்றையும் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுவது உண்டு. 

அதேபோல, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலில், ஜன-ஆகர்ஷண யந்திரம் ஒன்றை - அதாவது பல இடங்களில் இருந்தும் மக்களை ஈர்த்துவிடும் தகடு ஒன்றை பிரதிஷ்டை செய்தாராம்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com