வின்ஸ்லோ ஹோமர் வரைந்த “வீடு, இனிய வீடு” மற்றும் “வீடு திரும்பும் தந்தை”

வின்ஸ்லோ ஹோமர் வரைந்த “வீடு, இனிய வீடு” மற்றும் “வீடு திரும்பும் தந்தை”
Published on

கார் எங்கள் தெரு திரும்பும்போதே, படபடப்பும், சந்தோஷமும் உடலெங்கும் பரவுகிறது. இன்னும் நாலு வாரம் அப்பா, அம்மாவின் அருகாமையும், பள்ளிக்கல்லூரிக்கால நண்பர்களின் கலகலப்பும் நான் பிறந்து வளர்ந்த வீட்டின் சுவாசமும் அம்மாவின் கை மணக்கும் உணவும்.

மனசு முழுக்க எதிர்பார்ப்புக்களும் அவை தரும் உன்னத சந்தோஷங்களின் எதிர்பார்ப்பின் சிலிர்ப்பும்....

இதோ இரண்டு வருடங்களுக்கு முன்புதான் வேலை காரணமாக நான் சந்திகர் வந்து, தினமும் டெலிஃபோன் பேசி, லெட்டர் எழுதி, இந்த டிரெய்னில் இந்த நேரத்துக்கு வருகிறேன், போன்ற பிரயாண விவரங்கள் ஸ்திரமாக்கப்பட்ட திட்டங்களுடன் வரும் எனக்கே இத்தனை ஆவல், படபடப்பு, அட்ரினாலின் ஏற்றம் இருக்குமானால்……

படத்தில் இருக்கும் ஓவியத்தைக்கூர்ந்து பாருங்கள்.

இதோ திரும்பி வருவேனா என்னும் உயிர்ப்பய சந்தேகத்துடனும் எப்போது என்பது தெரியாத ஒரு அவஸ்தையிலும், போய்த்தானே ஆகவேண்டும் என்னும் கட்டாயத்திலும் வெளியேறி, எத்தனையோ சங்கடங்களில் மூழ்கி வெளி வந்து, அதோ அங்கே கரையும், காத்திருக்கும் குடும்பமும் கண்ணில் பட, அந்தக்கண நேர மனசின் பூர்ணத்துவம்....

அத்தனையும் வெளிப்படும் உன்னதம்!

அந்தப் பையனைப் பாருங்கள்! அப்பா ஊருக்குக் கிளம்பும்போது தூங்கிக்கொண்டு இருந்திருப்பானோ? எழுந்தவுடன் அப்பா எங்கே என்று கேட்டு அவரில்லாத வெறுமையை பல நாட்கள் அனுபவித்து இன்று அதோ கண்ணுக்கு எட்டும் தூரத்தில். அப்பா! இனி வரும் நாட்களை அவருடன் பேசி விளையாடி மடியில் படுத்து கொஞ்சி என்று ஆனந்தமாக் கழிக்கப் போகும் இன்பத்தைக் கண்ணில் தேக்கி படகின் நுனியின் அஜாக்கிரதையைப் பொருட் படுத்தாமல் காத்திருக்கிறான்.

அந்தக் கைக்குழந்தை அப்பா கிளம்பும்போது மிகச்சிறிய ஒன்றுமறியாத குழந்தையாக இருந்திருக்கக்கூடும். இப்போது ஓரளவுக்கு விஷயம் புரிந்து அம்மாவும் அண்ணனும் அடிக்கடி சொல்லும் ‘‘அப்பா என்னும் ஆசாமி இவரா? இவரை எப்படி எடை போடுவது“ என்ற லேசான பயம் கலந்த ஆர்வத்தில் இருப்பாளோ?

எதையும் வெளிக்காட்டாமல் இரு குழந்தைகளைத் தன் கண்காணிப்பில் விட்டுவிட்டு, பிழைக்க எங்கோ சென்று திரும்பும் கணவனை வரவேற்க காத்திருக்கும் இளம் தாய்!

இந்தக் குடும்பம் தலைவனில்லாமல் இவ்வளவு நாள் எப்படிச் சமாளித்திருக்கும், தலைவன் எங்கோ போய் என்னவெல்லாம் கஷ்டப்பட்டிருப்பான், இதோ மறுபடி கூடிக்களிக்கப்போகும் இந்தக் குடும்பத்திற்காக நாமும் அத்தனை மகிழ்கிறோம்!

இதுதான் இந்த ஓவியத்தின் வெற்றி!

வரைந்த ஆசாமி வின்ஸ்லோ ஹோமர் (Winslow Homer), அமெரிக்காவின் ஸ்டூடியோ பெயிண்டிங் எனப்படும் ஓவியங்களில் விற்பன்னர். பாஸ்டனில் 1836ஆம் அண்டு பிறந்த இவர் முதலில் அப்படி ஒன்றும் ஆயில் பெயிண்டிங்கில் முன்னுக்கு வரவில்லை. தானாகவே படம் வரையக் கற்றுக் கொண்ட வின்ஸ்லோ முதலில் கதைகளுக்கு படம் போடும் ஓவியராகவே தொழிலை ஆரம்பித்தார். பின்னர் ஆயில் பெயிண்டிங்கில் ஈடுபட்டு உன்னதமான திறமை பெற்றார். அவரின் ஓவியங்களில் ஆழமும் அடர்த்தியும் ஓவியக் கலையின் ரசிகர்களிடையே இவருக்கு பெரும் மதிப்பை சம்பாதித்துக்கொடுத்தது. அமெரிக்கன் ரியலிஸம் என்னும் ஓவியப்பிரிவில் இவரது ஓவியங்கள் தனி முக்கியத்துவம் வாய்ந்தவையாக ஓவிய வல்லுனர்களால் கருதப்படுகிறது. நாளாக நாளாக இவர் கடல் சம்மந்தப்பட்ட ஓவியங்கள் வரைவதில் தனிச்சிறப்பு பெற்றார்.

நான் சிக்காகோ ஆர்ட் காலரியில் பார்த்து வியந்து பசி மறந்த இந்த Winslow Homerஇன் Home, Sweet Home என்னும் ஓவியத்தில்

மீண்டும் ரசித்துப்பாருங்கள்....

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com