விற்க மனமில்லாமல் இலவசமாகவே அளித்துவிட்டார்

விற்க மனமில்லாமல்  இலவசமாகவே அளித்துவிட்டார்

போர்டியூவின் பால்காரப்பெண்மணி (The Milkmaid of Bordeau)

ஃப்ரான்ஸிஸ்கோ கோயா (Francisco Goya) என்னும் 19-20ஆம் நூற்றாண்டின் ஸ்பானிஷ் தேசத்து மிகச்சிறந்த ஓவியரின் இந்தப்படத்தை நான் ஏன் இந்த வண்ணங்களும் எண்ணங்களும் பகுதியில் எழுத தேர்வு செய்தேன் என்பதை கடைசி வரிகளில் சொல்கிறேனே!

கோயா ஸ்பெயினில் 1746ஆம் ஆண்டு பிறந்து 82 வயது வரை வாழ்ந்த மென்மையும் நவீனத்துவமும் கொண்ட அபார ஓவியங்களை வரைந்தவர். அந்தக்கால ஸ்பெயினின் அரசவையில் முதன்மை ஓவியராக அமர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். அவருடைய ஓவியங்கள் உலகெங்கும் ஓவியக்கலை கற்பிக்கப்படுபவர்களால் மிகவும் ஆராதிக்கப்பட்டு வருகின்றன. கோயா தன் அரசியல் சமூக தாக்கங்களை அருமையான ஓவியங்களின் மூலம் வெளிப்படுத்தினார்.

நெப்போலியன் ஸ்பெயின் மீது படையெடுத்து தாக்கிய போரின் அவலங்களை நேரில் கண்ட கோயா அதன் மூலம் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை மே மாதம் இரண்டாம் தேதி, 1808, மே மாதம் மூன்றாம் தேதி, 1808 என்ற தலைப்பில் ஓவியங்களாக தீட்டினார். இவை பின்னாளில் போரின் அவலங்கள் (Disasters of War) என்று தொகுக்கப்பட்டு பாராட்டுப்பெற்றன. சமூகத்தாக்கங்களை ஓவியங்களின் மூலம் வெளிப்படுத்திய முன்னோடிகளில் கோயாவும் ஒருவர்.

இப்போது அவர் பின்னாளில் எழுதிய போர்டியூவின் பால்காரப்பெண்மணி ஓவியத்திற்கு வருவோம்.

இந்த ஓவியத்தின் உருவம் லியோகாடியா வெயிஸ்(Leocadia Weiss) என்னும் பெண்மணியுடையதாக கருதப்படுகிறது. ஆனால் கோயா இந்த ஓவியத்திற்கு கொடுத்த விளக்கம் தன் மனைவி ஜோசெஃபு பெயாவின் (Josefa Bayeu) நினைவில் வரைந்தேன் என்பதே! மேற்சொன்ன லியோகாடியாவின் முக அமைப்பும் கோயாவின் முன்னாள் மனைவியின் முக சாயலை ஒத்திருந்தது என்கிறார்கள் சில குறும்புக்கார விமரிசகர்கள்!  எனவேதான் மிக அருமையான வண்ணக்கலவையினால் தீட்டப்பட்டிருந்தாலும் இந்த ஓவியத்தின் பின்னணிதான் இதற்கு மேலும் ஒரு உணர்வுபூர்வ மதிப்பைக் கொடுப்பதாக விற்பன்னர்கள் கருதுகிறார்கள்.

“அது என்னங்க உணர்வுபூர்வ….!”

சொல்கிறேன்.

கோயாவின் மனைவி இறந்தபின்னர் அவரைக் கவனித்துக் கொள்வதற்காக வருகிறார் இந்த லியோகாடியா. கோயாவை விட 35 வயது இளையவரான இவர் முன்பே மணமாகி விவாகரத்து பெற்றவர். கோயாவின் மகனுடைய மாமனார் குடும்பத்து உறவினரான இவர் கோயா தனிமையில் வாடுவது கண்டு அவரைக்கவனித்துக்கொள்ள அனுப்பப்பட்டவராம். இவருக்கு ஒரு மகளும் இருந்தாள். அவள் கூட முகச்சாயலில் கோயாவைப்போலவே…….

இருங்கள் இருங்கள்!

ஆம் லியோகார்டியோ கோயாவை ”எல்லா” விதத்திலும் கவனித்துக்கொண்டார் என்பதும் அதே குறும்புக்கார விமரிசகர்களின் பேச்சுதான்! இவரது முன்னாள் கணவர் ஒரு நகை வியாபாரி. அவர் மூலம் இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. மூன்றாவதாக பெண்ணைப்பெற்றபோது கணவருக்கு இவர் நடத்தைமீது சந்தேகம் ஏற்பட்டு விவாகரத்து வரை போய்விட்டது. அதான் முதலிலேயே சொன்னேனே, மகளுக்கு கோயாவின் சாயல்…..

ஆனால் கோயாவின் மீது அக்கறை கொண்டு அவரைப் பார்த்துக்கொண்ட லியோகாடியாவின் அன்பு மிக மிக உண்மையானது என்பதை மறுக்க முடியாது. கோயா ஏப்ரல் மாதம் 1828இல் இறந்தார். அவர் மிகப்பெரும் பணக்காரராக இருந்தும் தன் உயிலில் லியோகாடியாவுக்கு எதுவுமே தருவதாக எழுதவில்லை. அப்படிச் செய்தால் தன் பெயருக்கு களங்கம் உண்டாகுமே என்று கோயா கருதியிருக்கலாம். கோயாவின் மறைவுக்குப்பிறகு வறுமையில் வாடிய லியோகாடியா கோயாவின் நண்பர்களுக்கு கடிதங்கள் எழுதி உதவி வேண்டினார். ஆனால் கோயாவின் நண்பர்களில் பலர் அவருக்கு முன்பே இறந்து விட்டார்கள். இருந்த சிலரும் மிக வயதாகி இருந்தனர். ஏனோ அவர்களில் யாரும் லியோகாடியாவுக்கு பதில் கூட எழுதவில்லை.

படத்தைப்பாருங்கள். அந்தக்கால மதிப்பீட்டில் பெண்மணி அழகின் சிகரமாய் இருப்பதாக சொல்கிறார்கள். உள்ளும் உணர்வும் நிறைந்திருந்த பெண்ணை வரையும்போது அந்த அபார அழகு ஓவியத்தில் வெளிப்பட்டிருப்பதாக கருத்து நிலவுகிறது. தலை முடியின் நேர்த்தியும் அவள் உட்கார்ந்திருக்கும் ராயசமும் சங்குக்கழுத்தில் தெரியும் மென்மையும் கோயாவின் அபார ரசிப்புத்தன்மையைக்காட்டுகிறதே! இந்த ஓவியத்துப்பெண்மணியின் அழகின் வெளிப்பாடு கோயா தன் மனைவியை அதிகம் நேசித்தாரா அல்லது லியோகாடியவின் அன்பில் கிறங்கினாரா என்பதன் உண்மை நமக்குத்தெரியாமலேயே போய்விட்டது.

நான் ஏன் இந்த ஓவியத்தைப்பற்றி எழுத தேர்வு செய்தேன் என்பதை கடைசி வரிகளில் சொல்வதாக வாக்களித்திருந்தேனே!

வாடகை வீட்டில் வறுமையில் வாடினாலும் கோயா தனக்கு சொத்துக்களில் சல்லிக்காசு வைத்துவிட்டுப்போகாவிட்டாலும் லியோகாடியா தன்னிடம் இருந்த கோயாவின் படங்களை (விமரிசகர்கள் அவற்றிற்கு Caprichos என்று பெயரிட்டிருந்தனர்)விற்க மனமில்லாமல் கடைசி காலத்தில் அவற்றை இலவசமாகவே அளித்துவிட்டார்.

காதலுக்கும் அக்கறைக்கும் இடம் பொருள் காலமும் தேவையில்லைதானே!

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com