“மறுமலர்ச்சி காலக்கட்டத்தின் உண்மையான ஆன்மாவை வெளிப்படுத்தும் ஓவியம்”

“மறுமலர்ச்சி காலக்கட்டத்தின் உண்மையான ஆன்மாவை வெளிப்படுத்தும் ஓவியம்”

ஏதென்ஸின் கல்விக்கூடம் (The School of Athens)

ரோம் நகரத்தின் வாட்டிகன் ம்யூசியத்தில் “ரஃபேல் அறை” என்ற ஒன்று இருக்கிறது. அந்த அறையில் இத்தாலிய ஓவியர், இல்லை.. இல்லை, அப்படி மட்டுமே சொல்லக்கூடாது, மறுமலர்ச்சி ஓவியர் ரஃபேல் (Italian Renaissance artist Raphael.) வரைந்த அபார பெயிண்டிங்குகளுக்கு நடுவில் இருக்கும் ஓவியம்தான் ஏதென்ஸின் கல்விக்கூடம் என்னும் ரஃபேலின் தலைசிறந்த படைப்பு.

இத்தாலிய ஓவியர் ரஃபேல் 1483 – 1520) முப்பத்தேழு வயது வரை மட்டுமே வாழ்ந்த மறுமலர்ச்சி ஓவியர்களில் சிறந்த மூவரில் ஒருவர். மற்ற இருவர் மைக்கேலாஞ்சலோ மற்றும் லியோனார்டோ டாவின்ஸி! ரஃபேல் ஒரு கட்டிட வடிவமைப்பாளரும் கூட!

ரஃபேலின் ஓவியங்களின் தனிச்சிறப்பு அவற்றின் எளிமையும் மனித உடலின் நேர்த்தியையும் அபார வண்ணக்குழைவுகளும் என்கிறார்கள்.

இப்போது ஏதென்ஸின் கல்விக்கூடம் ஓவியத்தைக் கொஞ்சம் கவனிப்போம்.

இதன் முதல் சிறப்பே ஓவியத்தில் நாம் காணும், முழு உளக்காட்சி என்றால் அடிக்க வராதீர்கள், பர்ஸ்பெச்டிவ் என்று எளிதாகச்சொல்லலாம். அதாவது ஓவியத்தில் காணும் மனிதர்கள் மற்றும் இடங்களின் வேற்றுமையைத் துல்லியமாகக்காட்டும் நேர்த்தி! இதில் அவர் வரைந் திருக்கும் பெரும் அறிஞர்களைப்பாருங்கள் – சாக்ரடிஸ், அரிஸ்டாட்டில், ப்ளாட்டோ, பிதாகொரஸ், ஆர்க்கிமெடிஸ் மற்றும் ஹெரலிடஸ். அனைவரும் கிரேக்க அறிஞர்கள், தத்துவ மேதைகள்.

வாட்டிகன் ம்யூசியத்தில் ஸ்டான்ஸா (Stanza) என்னும் அறையில் இருக்கும் நான்கு ஓவியங்களில் ஒன்றுதான் இந்த ஏதென்ஸின் கல்விக்கூடம். அறிவிலும் உண்மையை யும் அதன் வேரையும் தேடு என்னும் மூத்தோர் சொல் தான் இந்த ஓவியங்களின் கருத்தாம்.

இந்த ஓவியத்தில் நாம் கிரேக்க தத்துவ ஞானிகளைக் காண்கிறோமே அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பது பற்றிய ஸ்திரமான ஆதாரம் கிடையாது. அதுவும் ரஃபேல் இந்த ஓவியத்தை வரைந்த காலத்தில் அவர்களின் உருவம் எப்படி இருந்தது என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இப்போதுபோல ஐ ஃபோன் 11 கிடையாதே!

எனவே, ரஃபேலே தெரிந்தவரை தாமே ஒரு உருவத்தை மனதில் கொண்டு வரைந்திருக்கிறார். ஏனென்றால் அப்போது பார்க்கக்கூடிய உருவப்படங்கள் இருந்திருக்கவில்லை. அதனால் சில மேதைகளை ஓவியத்தில் அடையாளம் காணும்போது ஓரளவுக்கு ஊகத்தைப்பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ப்ளேடோ மற்றும் அரிஸ்டாட்டில் தான் நடு நாயகமாக இருப்பதாக சொல்கிறார்கள். சாக்ரடிஸ் உருவத்தை எளிதாகக்கண்டு கொள்ளலாம், ஏனென்றால் அவருடைய மார்பளவு சிலைகளை நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். ஓவியத்தின் அரை வட்டம் பிதாகரஸின் மோனாட் (monad) என்னும் மையச்சக்தியின் அடையாளத்தை ரஃபேல் காட்ட முயற்சித்திருக்கிறார் என்பது ஓவியக்கலை விமரிசகர் களின் பார்வை.

ஓவியத்தை உற்றுக்கவனித்தால் ப்ளெட்டோவின் கைகளில் அவர் எழுதியதாகச்சொல்லப்படும் புத்தகத்தை வைத்திருக்கிறார். அதேபோல அரிஸ்டாட்டிலும் அவர் எழுதிய எதிக்ஸை கையில் வைத்துக்கொண்டிருக்கிறார். ரஃபேலுக்கு அந்தப் புத்தகங்களின் உள்ளடக்கம் தெரிந்து தான் காரணத்தோடு அவற்றை வரைந்திருக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை இந்த ஓவியங்களை வரையச் சொன்ன புரவலர்கள் அவருக்கு இந்த இந்த மாதிரி வரையுங்கள் எனவும் சொல்லியிருக்கலாம் என்பது ஒரு கருத்து.

எது எப்படி ஆனாலும் ரஃபேலின் இந்த ஏதென்ஸின் கல்விக்கூடம் ஓவியமானது அவரது தலை சிறந்த படைப்பு என்பதோடு “மறுமலர்ச்சி காலக்கட்டத்தின் உண்மையான ஆன்மாவை வெளிப்படுத்தும் ஓவியம்” என்கிறார்கள் விற்பன்னர்கள்.

ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com