கழுதையும் கல்வெட்டும்

கழுதையும் கல்வெட்டும்
Published on

கடைசிப் பக்கம்

சுஜாதா தேசிகன்

(இது கல்வெட்டு வட்டெழத்துக்களில்  கடைசிப்பக்கம் என்று எழுதப்பட்டிருக்கிறது)

'கழுதை கெட்டால் குட்டிச் சுவர்' என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். பயப்பட வேண்டாம், இந்தப் பழமொழியைப் பற்றி எழுதப் போவதில்லை. 'கழுதைக்கும் கல்வெட்டுக்கும்' என்ன சம்பந்தம் என்று தோன்றலாம். இருக்கிறது. புறநானூறு, அகநானூறு போன்ற பழைய இலக்கியங்களில் முதல் கோயில்களில் இருக்கும் குட்டிச் சுவரில் உள்ள கல்வெட்டு வரை கழுதைகள் இடம்பெற்றிருக்கிறது!

எனக்குக் கல்வெட்டுகள் படிக்க தெரியாத காரணத்தால் கற்பாறைகள், தூண்கள், கோயிற் சுவர்களில்  காணப்படும் கல்வெட்டுக்களை லிப்டில் வரும் எதிர்வீட்டு மாமா போலக் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடுவோன். ஆனால்,  அதிர்ஷ்ட வசமாக எனக்குக் கல்வெட்டு படிக்க தெரிந்த நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள்.

உதாரணமாக ஒரு முறை சீர்காழி அருகில் இருக்கும் திருவாலி திருநகரிக்கு சென்ற போது அக்கோயிலில் கிணற்றுப்பக்கம் சில கல்வெட்டுக்களைப் பார்த்துப் புரியாமல் அதைப் பற்றி வரலாற்றாசிரியர் சித்ரா மாதவன் அவர்களிடம் கேட்டேன்.

கிருஷ்ணதேவராயர் வெற்றி பெற்ற தகவல் மற்றும் ஆலயங்களுக்குக் கொடுத்த வரிகள் (1517AD), வேதம் ஓதிய பிராமணர்களுக்கு நிலம் நன்கொடையாக வழங்கியது மற்றும் அந்த ஊர் பெருமாளுக்கு (வயலாலி மணவாளனுக்கு) நிலம், மாடு, பாத்திரம் கொடுத்தது என்று அந்தக் கல்வெட்டை 'டிகோட்' செய்து கொடுத்தார்.

நாமும் கல்வெட்டு படிக்கலாம் என்ற ஆசையில் என் நண்பனிடம் கேட்டதற்கு ஒரு பெரிய அட்டவணையை எனக்கு அனுப்பினார். அதில் குரங்கிலிருந்து மனிதனாக உருவானது வரை 'அ, ஆ, இ, ஈ' 'தமிழ்-பிராமி' எழுத்துத் தமிழ் எழுத்தாகவும் வட்டெழுத்தாகவும் வளர்ச்சி பெற்ற விதம் அதில் இருந்தது. இதை நினைவு வைத்துக்கொள்வதற்குப் பதினாறாம் வாய்ப்பாடே தேவலாம் என்று முடிவுக்கு வந்து எதற்கும் கூகிள் ஆண்டவரிடம் பிரார்தனைச் செய்யலாம் என்று கணினி முன் தவம் கிடந்தேன். கூகிள் ஆண்டவர் தோன்றி "என்ன வரம் வேண்டும்?"  என்று கேட்டார் "கல்வெட்டு படிக்க உதவி புரிய வேண்டும்!" என்றேன்.

"உமக்குத் தமிழே பதம் பிரித்து இருந்தால் தான் கொஞ்சம் படிக்க வருகிறது, இந்த அழகில்  கல்வெட்டு எல்லாம் டூமச்" என்று சொல்லிவிட்டு  "பிழைத்துப் போ!" என்று வரம் கொடுத்தார்.

எனக்குக் கிடைத்த வரம் குறித்து, என் கல்வெட்டு நண்பனிடம் கூறினேன். "அப்படியா ?" என்று நம்பாமல், திருச்சிலேந்து 15 கிமீ உள்ள கோபுரப்பட்டி அவனீஸ்வரர் கோயில் கல்வெட்டு ஒன்றைப் படம் பிடித்து எனக்கு அனுப்பி, "இதில் கிட்டத்தட்ட நடுவில் 'உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர்'  என்று இருக்கிறது எங்கே கண்டுபிடி? என்று சோதித்தான். கூகிள் கொடுத்த வரத்தால் அதை உடனே சுட்டிக்காட்டினேன்.

ஜோக்ஸ் அப்பார்ட், இன்று கல்வெட்டு படிக்க செயலி இருக்கிறது (இந்த இடத்துக்குச் சென்று கொஞ்சம் கல்வெட்டில் விளையாடிப் பாருங்கள். https://tamiljinavani.appspot.com/#/editor )

தலைப்பில் கழுதை இருப்பதால், கழுதைக் கதை ஒன்று:  ( இல்லை கழுதை கோபித்துக்கொள்ளும்)

ஓர் ஊரில் சங்கீத வித்துவான் இருந்தான். இனிமையாக பாடுகிறோம் என்ற நினைப்பு. உள்ளூரில் அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று அடுத்த தேசத்து அரசனிடம் சென்று பாடிப் பரிசு பெற வேண்டும் என்று ஆசை. சென்றான். அரசனைப் பார்ப்பதற்கு முன் ஒரு விடுதியில் தங்கி சாதகம் செய்தான். விடுதிக்குப் பக்கம் இருந்த வீட்டில் வண்ணான் ஒருவன் 'ஓ' என்று அழுதான். பாட்டை நிறுத்தினான். அழுகை நின்றது. மறுநாளும் அதேபோல இவன் பாட ஆரம்பிக்க மீண்டும் அழுகை. இது ஒரு வாரம் தொடர்ந்தது. வித்துவான் நேராக வண்ணான் வீட்டுக் கதவைத் தட்டி "நான் பாடும் போது ஏன் அழுகிறாய்?" என்று கேட்க, அதற்கு அந்த வண்ணான்   "ஐயா… உங்கள் குரலைக்  கேட்கும்போது போன மாசம் செத்துப்போன என் பிரியமான கழுதையின் நினைப்பு வருகிறது.  அதனால் அழுகின்றேன்" என்றான்.

வண்ணான்  என்பதற்கு அழகான தமிழ்ச் சொல் 'ஈரங்கொல்லி' ( அல்லது ஈரங்கொள்ளி, பிற்காலத்தில் ஈரங் கொல்லியார் என்றனர்).

பூச்சிகளைப் போகச் செய்யும் பூச்சிக்கொல்லி போன்று ஈரம் போகுமாறு துணிகளை உலர்த்தி நமக்குத் சுத்தமாக கொடுப்பதால் இந்த காரணப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.  'ஈரங்கொல்லி' என்ற சொல் கல்வெட்டில் இருக்கிறது சந்தேகம் இருந்தால் தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி (சாந்தி சாதனா வெளியீடு) பக்கம் 82ல் பார்த்துக்கொள்ளலாம்.

இந்த ஈரங்கொல்லியைத்தான் ஆங்கிலத்தில் 'Dry Clean' என்கிறோம் !

பிகு: ஸ்ரீரங்கம் உற்சவப் பெருமாளுக்கு  'நம்பெருமாள்' என்று பெயரைச் சூட்டியதே  ஒரு 'ஸ்ரீவைஷ்ணவ ஈரங்கொல்லியார்' தான் !

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com