
இந்தப் படத்தில் இருக்கும் பூவை காலை நடைப்பயிற்சி போகும்போது அலைப்பேசியில் கவர்ந்தேன். இந்தப் பூ என்னை எப்போதும் வசீகரிக்கும். சினிமா வில்லனின் முண்டா பணியன் நடுவில் புசு புசு மார்பில் புலி நகச் சங்கிலி மாதிரி ஒரு படைப்பு இப் பூ! பூவின் பெயர் 'புலிநகக் கொன்றை!'
திரு பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் 'புலிநகக் கொன்றை' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று எழுதியிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அந்தப் புத்தகத்தை எடுத்து 'புலிநகக் கொன்றை பற்றி ஏதாவது சொல்லியிருக்கிறாரா' என்று மேலோட்டமாகத் தேடியபோது 'புலிநகக் கொன்றை – பெயரும் பின்னணியும்' என்ற தலைப்பில் இந்தப் பூவை குறித்து ஐங்குறுநூறு 142-ஆம் பாடலில் வருகிறது. அவர் எழுதியதிலிருந்து ஒரு பகுதி உங்கள் பார்வைக்கு தருகிறேன்.
ஐங்குறுநூறு 142-ஆவது பாடலில் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்துதான் எனக்கு இந்த நாவலுக்கான தலைப்பு கிடைத்தது. மொழி பெயர்த்தவர் சங்கப் பாடல்களை உலகம் முழுவதும் அறியச் செய்த A.K. ராமானுஜன் அவர்கள். பாடலும் அதன் பொருளும் ராமானுஜனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் கீழே தரப்பட்டிருக்கிறது.
எக்கர் ஞாழல் இறங்கிணார்ப் படுசினைப்
புள்ளிறை கூருந் துறைவனை
உள்ளேன் தோழி படீ இயரென் காண்ணே
[அம்மூவனார், ஐங்குறுநூறு 142]
தோழி கேள்,
மணல் மேட்டில் உள்ள நிழலின் தாழ்வான கிளைகளிலே ஒரு புலிநகக் கொன்றை மரம். அதன் தாழ்ந்த பூங்கொத்துக்களிடையே வந்து தங்கும் நம் தலைவனை இனி நான் நினைக்க மாட்டேன். எனது கண்களுக்குச் சிறிது தூக்கமாவது கிடைக்கும்.
The Tigerclaw Tree
What she said
Friend, listen
I'll not think any more
of that man on whose sandy shore
birds occupy the tigerclaw tree
and play havoc with the low flowering branches
and my eyes will get some sleep
[A.K.Ramanujan translation]
பி.ஏ.கிருஷ்ணன், ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தனக்குத் தலைப்புக் கிடைத்தது என்று எழுதியிருந்தார். அதேபோல எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் 'பல்லக்கு' என்ற சிறுகதை எப்படி உருவானது என்று அந்தச் சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தின் முன்னுரையில் எழுதியுள்ளார்.
"ஒரு காகிதத்தில் இங்க் தெளித்துக் கசக்கியபின், பிரித்துப் பார்த்து என்ன காட்சி தென்படுகிறதோ அதை வைத்துக் கதையைக் கற்பனை செய்ய வேண்டும் என்று எஸ்.ஏ.பி சொல்லித் தந்த உத்திகளில் ஒன்று. அதன்படி ஒரு நாள் செய்து பார்த்தபோது கோயில் பல்லக்கைச் சிலர் சுமந்து வருவது போன்ற காட்சி என் கண்ணுக்குத் தெரிந்தது. கும்பகோணத்தில் சப்த ஸ்தானப் பல்லக்கைச் சிறு வயதில் பார்த்திருந்த அனுபவமும் சேரவே 'பல்லக்கு' சிறுகதை உருவாயிற்று. அந்த வருடத்தில் வெளியான 'சிறந்த சிறுகதை' என்று தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பரிசளித்தார்கள்". 'பல்லக்கு' கதையைச் சுலபமாக கூகிளில் தேடிப் படிக்கலாம்.
நான் பெரிய எழுத்தாளன் இல்லை, ஆனால், கதைக்குப் பெயர் வைக்கும் அனுபவம் எனக்கும் ஒன்று உண்டு.
சுஜாதா என்னிடம் அடிக்கடி சொல்லும் விஷயம், சொல்லிக்கொடுத்த விஷயம் "details… details". அது இருந்தால் தான் கதைகளுக்கு நம்பகத்தன்மை வரும். ஒரு முஸ்லீம், பிராமணர் பற்றி கதையின் நாட் கிடைத்தது. அக் கதையை தேரழுந்தூரில் நடப்பதாக எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அந்த ஊருக்கு நான் போனதில்லை. முதல் முறை அங்கே சென்று பெருமாளைச் சேவித்துவிட்டு வந்தேன். அதற்குப் பிறகு இரண்டு முறை அந்த ஊருக்கு ரயில், பேருந்து என்று சென்று கதைக்காகச் சுற்றிப்பார்த்துக் குறிப்பு எடுக்க மூன்று வருடங்கள் ஆகிவிட்டது!
பிறகு கதை எழுத ஆரம்பித்து, முடிவும் தலைப்பும் தெரியாமல் பொருட்காட்சியில் தொலைந்த குழந்தை போல் முழித்துக்கொண்டு இருந்த சமயம். ஒரு நாள் வெறியுடன் கதையை முடித்துவிடலாம் என்று எழுத ஆரம்பித்தபோது என் மனைவி, "ஒரு வாரமா பெருங்காயம் தீர்ந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன்… கதை எழுதுவதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு பெருங்காயம் வாங்கிக்கொண்டு வாங்க" என்றாள்.
சட்டென்று எனக்கு முடிவும், தலைப்பும் கிடைத்தது. முடிவும் தலைப்பும் பெருங்காயம்!