பிரமிப்படையச் செய்த காந்தாரா

பிரமிப்படையச் செய்த காந்தாரா

காந்தாரா திரைப்படத்தை நானும் பார்த்தேன் ( கன்னடத்தில்).

கன்னடம் தெரியுமா ? என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்பது தெரிகிறது. என் தெலுங்கு நண்பன் என்னைவிட நன்றாக தமிழ் பேசுவான். அவனிடம் ‘‘எங்கே தமிழ் கற்றுக்கொண்டாய்’’ என்று கேட்டேன். அதற்கு அவன் “பெங்களூரில் மூன்று வருடம் இருந்தேன்” என்றான். 

பெங்களூரில் பதினைந்து வருடத்துக்கும் மேல் வசிப்பதால் சொல்ப கன்னடம் கொத்து. 

காந்தாரா ஒரு சாதாரணக் கதை. ஆனால், அதை திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு என்று எல்லாம் அருமையாக தீட்டி நம்மை பிரமிப்படையச் செய்திருக்கிறார்கள். படத்தில் என்னை ஈர்த்தது ’பூத கோலா’ என்ற நாட்டுப்புற நடனம். 

’பூத கோலா’ கர்நாடகா மாநிலத்தின் மங்களூர் பகுதிகளில் இசை மற்றும் ஆராவாரத்துடன் கூடிய கிராமக் கடவுள்களுக்காக ஆடப்படும் நடனம். இதை அடிப்படையாக கொண்டு திரைக்கதையை அமைத்திருப்பது இந்தப் படத்திற்கு ஒரு வட்டார தன்மை கொடுக்கிறது. இதுவே படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். 

இந்த நடனத்தைப் பார்த்தபோது 2017ல் திருக்குறுங்குடிக்குச் சென்று நம்பாடுவான் கதையைக் கூறும் நாட்டிய நாடகத்தை இரவு முழுவதும் தூங்காமல் முழித்துக்கொண்டு பார்த்த அனுபவம் நினைவுக்கு வந்தது. காந்தாராவில் வராஹ அவதாரம் காட்டுவது போல நம்பாடுவான் சரித்திரத்திலும் வராஹ பெருமானுக்கு தொடர்பு உண்டு. 

வராஹ புராணத்தில் ஸ்ரீ வராஹ பெருமான் பூமி பிராட்டியாரிடம் நம்பாடுவான் பக்தியைச் சிலாகித்துச் சொன்ன கதை வருகிறது. அந்த கதையே நாட்டிய நாடகமாக அரங்கேற்றுகிறார்கள். 

கைசிக நாடகம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர ஆட்சியில் இருந்திருக்கிறது. ‘ஆமுக்த மால்யதா’ என்ற நூலில் ‘மால்கேசரி’ என்ற பெயரில் நம்பாடுவானைக் குறிப்பிட்டு திருக்குறுங்குடியில் நடந்ததாகவே அவ்வரலாற்றைக் கூறியுள்ளார். 1530-1554ல் கைசிக நாடகம் நடைபெறுவதற்கு நிலங்களைத் தானமாக அளித்துள்ளார் அச்சுதராயரின் இரண்டாவது மனைவி. 

ஜி.ஆர். வெல்போன் என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் கைசிக நாடகத்தின் நலிந்த நிலையைக் குறித்து 1969ல் குறிப்பிட்டுள்ளார்.

தொன்றுதொட்டு தேவதாசிகள் திருக்குறுங்குடியில் வடிவழகிய நம்பியின் முன் நிகழ்த்தப்பட்ட கைசிக நாடகத்தைத் தேவதாசிகள் ஒழிப்பு சட்டத்துக்குப் பிறகு இந்த நாடகம் நலிவுற்றது. அதற்குப் பிறகு இந்த நாடகம் அவல நிலை அடைந்து, பயிற்சி இல்லாதவர்களால் நிகழ்த்தப்பட்டு, அலங்கோலமாகியது. 90களில் நிகழ்த்தப்பட்ட நாடகம் பழைய நாடகம் மாதிரி இல்லை, வெறும் 45 நிமிடம் மட்டுமே நடத்தப்பட்டது. 

இந்த நாடகம் 1997ல் மீண்டும் உயிர்பெற்றது.

இந்த நாடகத்தை மீண்டும் மீட்க முதல் முயற்சியாக இந்த நாடக மரபில் வந்த இரண்டு தேவதாசிகள் மட்டுமே திருக்குறுங்குடியில் இருந்தார்கள். ஒருவருக்கு வயது 85, மற்றொருவருக்கு 70. அவர்களின் வாரிசுகள் திருநெல்வேலியிலும், நாகர்கோவிலிலும் குடியேறியிருந்தார்கள். இவர்களை மீண்டும் மேடை ஏற்றத் தயங்கினார்கள். காரணம், ‘தேவதாசிகள்’ என்ற சமூகக் கறை, ஊர் என்ன சொல்லும் என்ற பயமும். 

சே. இராமானுஜம் அவர்கள் தமிழ் பல்கலைக் கழகத்தில் நாடகத்துறைப் பேராசிரியராக இருந்தபோது 1992ல் கைசிக ஏகாதசிக்கு முதல் நாள் இந்த மாதிரி நாடகம் என்று தற்செயலாகக் கிடைத்த தகவல் அடிப்படையில் உடனே திருக்குறுங்குடிக்குச் சென்றுள்ளார். நாடகம் அவருக்குப் பெரும் ஏமாற்றத்தையே தந்தது. 

நாடகத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டார் பேராசிரியர் இராமானுஜம். 1997ல் பிரபல நாட்டியக் கலைஞர் திருமதி அனிதா ரத்தினத்துடன் எப்படியாவது நாடகத்தை மீட்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார்கள். 1999ல் திருக்குறுங்குடி ஜீயர் மடத்திலிருந்து தேடிக் கண்டுபிடித்த கைசிக புராண நாடகத்தின் ஓலைச் சுவடி ஏட்டுப்பிரதியை நகல் எடுத்துப் பார்த்தபோது பராசர பட்டர் (கி.பி. 1122) (கூரத்தாழ்வானின் திருக்குமாரர், ஸ்ரீராமானுஜரின் சீடர்) எழுதிய வியாக்கியானத்தின் அடிப்படையில் மணிப்பிரவாள நடையை ஒத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மரபு வழி வந்தவர்களைக் கொண்டு அபிநயம் பிடிக்கச் செய்து, ஓலைச்சுவடியில் உள்ள பாடல்கள், உரையாடல்களைக் கொண்டே மரபுரீதியான வடிவத்தில் மீண்டும் வடிவழகிய நம்பி முன் உயிர்பெறச் செய்திருக்கிறார்கள். 

அன்று இரவு 9.30 மணியிலிருந்து காலை மூன்று மணி வரை இந்த நாடகத்தைப் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். நடித்தவர்களின் எனர்ஜி லெவல் அபாரம். அதற்கு உதாரணம் - நாடகத்தின் நடுவே நாடக மேடை பின்புறம் சரிந்து, கூடவே கலைஞர்கள் விழுந்துவிட, சில நிமிடங்களில் நாடக மேடையைச் சரி செய்து, மீண்டும் நடிக்கத் தொடங்கினார்கள்! 

‘கல்கி’யில் ’கடைசிப் பக்கம்’ கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து எழுதியிருக்கிறேன்.  படித்த உங்களுக்கும், வாய்ப்பு கொடுத்த கல்கி குழுமத்திற்கு நன்றி.

 (நிறைந்தது)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com