தூக்கம் வரலையா?

நரம்பியல் தொடர்
தூக்கம் வரலையா?

சென்னை காவேரி மருத்துவமனையின் நரம்பியல் நிபுணரான (Consultant Neurology, Neurophysiology) டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன் அவர்கள், மங்கையர் மலர் வாசகிகளுக்காக,உடல் உறுப்புக்களில் ஏற்படும் நரம்பு மண்டலம் சம்பந்தமான பல பிரச்சினைகள் குறித்து நமக்கு விளக்கம் தருகிறார்.

புவனேஸ்வரி ராஜேந்திரன்
புவனேஸ்வரி ராஜேந்திரன்

அன்று டாக்டர் புவனா,  இரண்டு வெவ்வெறு கேஸ்களில் மும்முரமாக இருந்தார்.

சீனியர் சிட்டிசன் ஒருவர், நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர். முதியவருக்கு இரவில் தூக்கம் வருவதில்லை என்று பிரச்னை. அந்தப் பெண்மணிக்கு இரவில் அவர் கணவர் குறட்டை விடுவது பிரச்னை.

நமக்கும் பல சந்தேகங்கள் எழுந்தன.

தூக்கம் என்பது உண்மையில் என்ன டாக்டர்? அப்போது நம் உடலில் என்ன நிகழ்கிறது?

ம்மால் இயக்கப்படும் தசைகள், (voluntary muscles) அமைதியாக அசைவின்றி உணர்வற்றுப் போய், ஆனால் மீண்டும் உணர்வு பெறக்கூடிய ஒரு மாறுபாடுடைய நிலை (altered consciousness) தான் தூக்கம். இது, நீண்ட  உறக்க நிலை (hibernation) அல்லது கோமாவிலிருந்து மாறுபட்டது.

மூளையில் எந்தப் பகுதி தூக்கம் சம்பந்தப்பட்டது?

தூக்கத்தை கன்ட்ரோல் செய்யும் பகுதிகள்   நமது மூளையில் உள்ளன. ஹைப்போதாலமஸ் (Hypothalamus) மற்றும் பீனியல் சுரப்பி (Pineal gland) இவை இரண்டும் முக்கியமானவை.

இவை நம் உயிரியல் கடிகாரத்தைக் (Biological clock) கட்டுப்படுத்துபவை. நாம் தூங்க வேண்டிய நேரம், சரியான முறை இவற்றைத் தீர்மானிப்பவை.

மெலடோனின் (melatonin) மற்றும் ஹைப்போக்ரெடின் (hypocretin) என்ற இரு ஹார்மோன்களும், தூக்கத்துக்கும் உயிரியல் கடிகாரம் சரிவர இயங்கவும் உதவுபவை.

ஸ்லீப் சைக்கிள் என்பது என்ன டாக்டர்?

தூக்கம்,  REM மற்றும் NREM என்ற நிலைகளைக் கொண்டது.

REM என்பது Rapid Eye Movement. மூடிய விழிகளுக்குள் வேகமான அசைவுகள்.

NREM என்பது Non-Rapid Eye Movement. இதில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. முதல் கட்டம் லேசாக கண்ணயர்ந்த நிலை. எளிதில் எழுப்ப முடியும். அடுத்த கட்டம் கொஞ்சம் ஆழ்ந்த தூக்கம். மூன்றவது மிகவும் ஆழ்ந்த தூக்கம். முதல் நிலையிலிருந்து REM என்ற கட்டம் வரை சென்று பின்னர் மீண்டும் முதல் நிலைக்கு திரும்புதல். இதைத்தான் ஸ்லீப் சைக்கிள் என்கிறோம்.

கனவுகள் வருவது எந்த நிலையில்?

REM நிலைத் தூக்கம்தான் பொதுவாக சக்தி வாய்ந்த தூக்கம் (dynamic state of sleep)

மூச்சு விடுவதிலும் இதயத் துடிப்பிலும் பல ஏற்ற இறக்கங்கள் (fluctuations) உண்டாகின்றன. இந்த நிலையில் தான் அனேகமாக கனவுகள் வருகின்றன.

அப்போது நம் தசைகள், அனேகமாக செயலற்று இருப்பதால் நாம் கனவுகளுக்கு அசைந்தோ அல்லது எதிர்வினையோ ஆற்றுவதில்லை.

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

தூங்கும் நேரம் வயதைப் பொறுத்தது. பிறந்த குழந்தை 12 முதல் 18 மணி நேரம் வரை தூங்கும். குழந்தை வளர வளர, தூங்கும் நேரம் 11 மணி நேரமாகி பின்னர் 7 முதல் 8 மணி வரை இருக்கும். இளம் வயதினருக்கு குறைந்த பட்சம்  7 மணி நேரத் தூக்கம் அவசியம்.

தூக்கத்தின் அவசியம் என்ன டாக்டர்?

ம் நினைவாற்றலை  ஒருங்கிணைத்து, நினவுகளுக்கு வலுவூட்ட, தூக்கம் அவசியம். நாம் வேலை செய்யும் ஆற்றலையும் தூக்கம் அதிகரிக்க வைக்கிறது.

இந்த ஆற்றல், காரண காரியங்களை அலசி முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள உதவுகிறது.

உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்களின் உற்பத்திக்கு ஆழ்ந்த தூக்கம் (Slow-wave sleep), அவசியம் என்பதால், வளரும் வயதில் குழந்தைகளுக்கு ஆழ்ந்த தூக்கம் தேவைப்  படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தூக்கம் உதவுகிறது. காயங்கள் ஏற்பட்டால் விரைவில் குணமாக தூக்கம் அவசியமாகிறது.

தூங்கும் போது நம் உடலின் முக்கியமான உறுப்புக்கள், புத்துணர்ச்சியும் சக்தியும் பெறுவதால், தூக்கம் நமக்கு ஒரு நல்ல நிவாரணியாகும்.

சரியான தூக்கமில்லாவிட்டால் எத்தகைய பாதிப்புக்கள் வரும்?

ரவில் போதுமான அல்லது சரியான தூக்கமின்மை காரணமாக தலைவலி, சோர்வு, பகலில் அதிக களைப்பு இவை எல்லாம் ஏற்படும். நீண்ட நாட்கள் சரியான தூக்கம் இல்லாவிட்டால், உடல் உபாதைகளோடு, மனரீதியான பிரச்னைகள்  வர வாய்ப்பு உண்டு. எரிச்சல், நினை வாற்றல் குறைபாடு, உடல் எடை அதிகரிப்பு, இதய துடிப்பில் மாற்றம்,

இவற்றுக்கும் தூக்கமின்மை வழிவகுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் எளிதில் தொற்று ஏற்படும் பிரச்னையும் வரலாம்.

தவிர ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் வரும் பாதிப்புகள், மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.

தூக்க மாத்திரை போட்டுக் கொள்வது தவறுதானே..?

தூக்கம் வரவில்லை என்று சும்மா  யாரும் தூக்க மாத்திரை போட்டுக் கொள்ளக் கூடாது.. வயதானவர்களோ, உடல் ரீதியான பிரச்னை இருப்பவர்களோ, மருத்துவர் ஆலோசனைப் படி போட்டுக் கொள்ளலாம்.

தூக்கம் சம்பந்தமான வேறென்ன பிரச்னைகள் உள்ளன ?

குறிப்பிட்ட வகையான (pattern problems) மற்றும் சுவாசத்தில் ஏற்படும் பிரச்சினைகள் (breathing problems) என்று சில உள்ளன.

பேட்டர்ன் வகையான பிரச்னைகள்:

இன்சோம்னியா (Insomnia)

சீக்கிரம் தூங்க முடியாமல் அல்லது தொடர்ச்சியாக தூங்க முடியாமல் இருத்தல் சில மருந்துகளால் அல்லது மன அழுத்தத்தினால் ஏற்படும்.

பாராசோம்னியா (Parasomnia)

தூக்கத்தில் நடத்தல், பயந்து போதல், உறைந்தாற் போல் இருத்தல், தூக்கத்தில் பற்களைக் கடித்தல் போன்றவை.

சர்காடியன் டிஸ்டர்பன்ஸ் (Sleep circadian pattern disturbances)

ஒரு நாட்டிலிருந்து மற்றோர் நாட்டுக்குச் செல்லும் போது வரும் ஜெட்லேக், சரியான நேரத்தில் தூங்கும் பழக்கம் இல்லாதது போன்றவற்றால் வருவது.

சுவாசம் சம்பந்தமாக, பிரச்னைகள் இரண்டு வகையில் ஏற்படலாம்.

OSA எனப்படும் “Obstructive Sleep Apnea” பாதிப்பு.

இதில் மூச்சுக்குழாயின் மேற்பகுதி குறுகிக் கொண்டு சில நேரம் அடைத்துக் கொள்ளும். இதனால் தூக்கம் சரியாக வராது

சர்க்கரை, ரத்த அழுத்தம் தவிர  மாரடைப்பு, ஸ்ட்ரோக் வருவதற்கு வாய்பு இருப்பதால் இதை உடனே கவனிக்க வேண்டும்.

குறட்டை

சாதாரணமாக இருப்பதுதான் என்றலும் உடல் பருமனான வர்கள், குட்டையான கழுத்து கொண்டவர்கள், குறட்டை அதிகம் விடுகிறார்கள்.  இவர்களுள் பெரும்பாலானோர் பகலில் அதிகமாக தூங்குவார்கள். இவர்கள் மருத்துவரை அணுகி விவாதித்தல் நலம்.

ஸ்லீப் ஹைஜீன்  (Sleep hygiene) என்று குறிப்பிடுகிறீர்களே அப்படி என்றால் என்ன?

ன்றைய சூழலில், வாழ்க்கை முறையினால் தூக்கம் பாதிக்கப்பட்டு அதுவே பல நோய்களுக்குக் காரணமாகிறது.

சரியான நேரத்தில் தூங்கச் செல்லுதல், இதமான படுக்கையறைச் சூழல் மிக அவசியம்.

பிரகாசமான விளக்குகள், டிவி,  செல்ஃபோன் இவற்றை அணைத்து விட வேண்டும்.

தூங்கப் போகும் முன், காபி, குளிர் பானங்கள் இவற்றைத் தவிர்த்தல் அவசியம்.

ஆல்கஹால், புகை பிடித்தல் கூடாது,

உடலையும் மனத்தையும் அழுத்தமின்றி ரிலாக்ஸ்டாக வைத்திருக்க வேண்டும்.

இப்படி சில நெறிமுறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும். இதைத்தான் ‘ஸ்லீப் ஹைஜின் என்று குறிப்பிடுகிறோம்.

நல்ல தூக்கத்தினால் உடல் நலம், உடல் மற்றும் மனதின் வலிமை  அதிகரிக்கிறது.

நேர்மறை சிந்தனைகள் வளர்கின்றன. உணர்வுகளின் கட்டுப்பாடு, மகிழ்ச்சியான மனநிலை, வேலையில் கவனம் எல்லாமே கிடைக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com