மார்க்ஸ் என்ற மூலதனமும்; ஜென்னி என்ற சீதனமும்!

படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?
மார்க்ஸ் என்ற மூலதனமும்; ஜென்னி என்ற சீதனமும்!

பகுதி – 8

ந்தியாவில் அதிலும் குறிப்பாக, தமிழ் மக்கள் ஆங்கிலேயரால் பட்ட துயரத்தினை, ‘இந்தியாவில் நிகழ்ந்த சித்திரவதைகளைப் பற்றிய விசாரணை’ என்ற கட்டுரையின் மூலம் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வராமலேயே உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் கார்ல் மார்க்ஸ்.

மாடசாமி
மாடசாமி

ஜெர்மனியில் மோசெல் ஆற்றங்கரை நகரான டிரியனில் ஹென்ரிக் மார்க்ஸ்-  ஹென்றியெட்டா பிரெஸ்பர்க் என்ற தம்பதியினரின் ஒன்பது பிள்ளைகளில் ஒருவரான கார்ல் மார்க்ஸ் குறித்து,  ‘ஆயிரம் ஆண்டுகளில் மிகச் சிறந்த மனிதர்’ என இங்கிலாந்து நாட்டின் வானொலியின் கருத்துக்கணிப்பு வெளியானது.

இளைஞர்கள் எப்படிப்பட்ட வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தனது பள்ளி இறுதியாண்டில் எழுதிய கட்டுரையில் “மனித குலத்துக்காக பாடுபடக் கூடிய வேலையைத் தேர்ந்தெடுத்தால் எந்த ஒன்றாலும் நம்மைத் தலைவணங்கச் செய்ய முடியாது; நம் மகிழ்ச்சி லட்சக் கணக்கானவர்களின் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று குறிப்பிடுகிறார் கார்ல் மார்க்ஸ்.

ஒழுக்கச் சீலரும் கூரிய சிந்தனையாளருமான மார்க்ஸின் பண்புகளால் கவரப்பட்ட பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஜென்னியை அவர் மனப்பூர்வமாக விரும்பினார்.

மகன் தன்னைப் போன்றே வழக்கறிஞராக வர வேண்டும் என்று விரும்பிய அப்பாவுக்கு மகனின் தேடல் தத்துவயியலில்தான் என்பது தெரியவந்தது. குடும்பத்தைக் கவனிக்காத மகனுக்கு உதவியோ, சொத்தில் பங்கோ கிடையாது என்பது அம்மாவின் கோபமாக வெளிப்பட்டது.

தந்தையின் விருப்பப்படி தன் வாழ்வைத் தொடர முடியாவிட்டாலும், தந்தை மீது கொண்ட அன்புக்கு, அவர் இறக்கும் வரை தன் கோட் பையில் வைத்திருந்த தகப்பனாரின் புகைப்படமே சாட்சி.

காடுகளில் காய்ந்தச் சுள்ளிகளைப் பொறுக்கும் ஏழை எளிய மக்களைத் தடைசெய்து, தண்டனை வழங்கிய சட்டத்தையும், கந்துவட்டியால் வதைக்கப்படும் விவசாயிகளின் வேதனையையும் பற்றி முதன்முதலாக அவர் எழுதிய கட்டுரைகள் மூலம் அவர் யார் என்பதை நில பிரபுத்துவ அமைப்புகள் புரிந்துகொண்டன.

19.04.1843 மார்க்ஸும் ஜென்னியும் திருமணத்தில் இணைந்தனர். இருவரும் பாரிஸ் சென்றனர். அங்கு, ஒத்த கருத்தைக் கொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபிலெடரிக் ஏங்கெல்ஸ் நண்பரானார்.

பிரஷ்யா மாநிலத்தில் ராணுவ அடக்குமுறையில் 11 தொழிலாளர்கள் மரணம் அடைய, அதைக் குறித்து மார்க்ஸ் எழுதிய கட்டுரையால் ஆத்திரம் கொண்ட பிரஷ்யா அவரை வெளியேற்றும்படி பிரான்ஸைக் கேட்டுக்கொண்டது.

24 மணி நேர கெடு. மேஜை, நாற்காலி, பாத்திரங்களை விற்க, அரசாங்கத்துக்கு எதிராக எழுதக்கூடாது என்ற நிபந்தனையோடு மூத்த மகளோடு பெல்ஜியத்தில் கால் பதித்தனர் மார்க்ஸ் தம்பதியினர்.

இவரின் ‘ஜெர்மன் தத்துவம்’ என்ற புத்தகத்தைத் தொடர்ந்து, ஆணும் பெண்ணும் அரசியல், விஞ்ஞானம், கலை, ஓவியம், மதம் போன்றவை குறித்து ஆராயும் முன்னர் அவர்களுக்கு அடிப்படையாக வேண்டியது உணவு, நீர், உடை, வீடு என்பதை வலியுறுத்தும் வகையில் ‘தத்துவத்தின் வறுமை’ என்ற அவரது படைப்பு அடுத்து வெளிவந்தது.

பிரான்சில் 1948ல் பொருளாதார நெருக்கடி காரணமாக, தொழிலாளர்களின் சம்பளம் 60% குறைக்கப்பட, புரட்சி வெடித்து, பிரெஞ்சு குடியரசாக மாறியது. இதன் தாக்கம் பெல்ஜியத்தில் வெளிப்பட்டது. தன் குடும்பப் பாகப் பிரிவினையில் கிடைத்த பணத்தை மார்க்ஸ் போராட்டத்துக்குச் செலவழித்தார்.

மார்க்ஸ் கைது செய்யப்பட, அதற்கான காரணம் கேட்டு காவல்நிலையம் சென்ற ஜென்னியை பாஸ்போர்ட் இல்லாத நாடோடி என கைது செய்தது அந்த நாடு. கண்டனக்குரல் அதிகமாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்ற நிபந்தனையோடு இருவரையும் விடுதலை செய்தது.

அடுத்து அவர்கள் ஜெர்மன் சென்றடைய அங்கு நடந்த விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, பிறகு குற்றமற்றவர் என்று நீதிமன்றம் விடுவித்தாலும், அவர்கள் வெளியேற்றப்பட, மூன்று குழந்தைகளோடு பாரிஸ் வந்து சேர்ந்தனர்.

பாரிஸில் நடைபெற்ற தொழிலாளர்களின் போராட்டம் மிகப்பெரிய தோல்வியுடன் முடிய, ‘தொழிலாளர்கள் அடிபணியவில்லை; தோற்கடிக்கப்பட்டார்கள். அதே நேரத்தில் எதிரிகள் முறியடிக்கப்பட்டனர்’ என்று மார்க்ஸ் எழுதிய கட்டுரையால் மீண்டும் அவர்களை நாடு கடத்த உத்தரவு.

ஜெர்மன், பெல்ஜியம், கடைசியாக பிரான்ஸ்  என்று எந்த நாட்டிலும் இடமில்லை என்ற நிலையில் சுவிட்சர்லாந்தும் இவர்களை அனுமதிக்கவில்லை.

குழந்தைகள் மற்றும் கர்ப்பவதியான ஜென்னியோடு ஏங்கல்ஸ் அழைப்பின் பேரில் லண்டன் சென்றடைந்தார். ‘அந்நியர்கள் மசோதா’வைப் பயன்படுத்தி இருவரையும் நாடு கடத்தும்படி தன் நாட்டில் உள்ள இங்கிலாந்து தூதருக்கு ஜெர்மனி அழுத்தம் கொடுத்தது.

இந்த நேரத்தில்தான் வறுமை மார்க்ஸின் குடும்பத்தை வறுத்தெடுத்தது. பொருளாதார நெருக்கடியால் பத்திரிகை விற்பனை குறையவே கட்டுரைக்கான வருமானம் முற்றுப்புள்ளியானது. ஏங்கல்ஸின் உதவியைத் தவிர வேறொன்றுமில்லை.

மகன் ஹென்ரிச் நிமோனியா காய்ச்சலில் இறந்துபோனதுதான் துயரத்தின் ஆரம்பம் என்பதை அவர்கள் அறியவில்லை.

தட்டு முட்டு சாமான்கள் மட்டுமல்ல; குழந்தைகள் போர்த்தியிருந்த போர்வைகள்கூட அடகுக் கடைக்குச் சென்றன. தொழிலாளர்களுக்கான ஆராய்ச்சி பாதையிலிருந்து மாறி சென்று விடுவோமோ என்பதற்காகவே தங்களைத் தேடி வந்த வசதியான வாய்ப்புகளை இருவருமே நிராகரித்தனர்.

மார்புச் சளியால் அவதிப்பட்ட மகள் பிரான்சிஸ்கா அவர்கள் கண்முன்னே இறந்ததை மற்ற குழந்தைகள் அறியாதவாறு மற்றொரு அறையில் வைத்திருந்து, விடிந்ததும் கிடைத்த இரண்டு பவுண்டில் பிறக்கும்போது தொட்டில் வாங்காத குழந்தைக்கு சவப்பெட்டி வாங்கினா்.

வாடகை பாக்கியினால் அடுத்தடுத்து, உரிமையாளர்கள் துரத்திய நிலையில் மகன் இறக்கிறான். அவனுடைய இறப்பு மனம் தளராத மார்க்ஸை உடல்ரீதியாக பாதிக்க, தொடர் தலைவலியை உண்டாக்கியது.

மார்க்ஸ் மீது சிலர் அவதூறுகள் பரப்பியதை ஜென்னியால் பொறுத்துக் கொள்ளமுடியாத நிலையில், நரம்பு தளர்ச்சிக்குள்ளாகிறார்.

காலையில் லண்டன் நூலகத்துக்குள் நுழைந்தால் மூடுகிறவரை படித்து குறிப்பெடுக்க, வீட்டில் இரவெல்லாம் எழுதி முடிக்க, 1865 இறுதியில் ‘மூலதனம்’ புத்தகத்தை முடிக்க அவருக்கு 15 ஆண்டுகள் ஆனது.

மூலதனம் நூலின் சிறப்பானது முதலாளித்துவ வர்க்கத்துக்கும் தொழிலாள வர்க்கத்துக்கும் இடையிலான உறவு குறித்த விவரிப்பு. 10 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளி தனக்குக் கிடைத்த கூலிக்கு 2 மணி நேரம் வேலை செய்தால் போதும். ஆனால், கூடுதல் உழைப்பை எவ்விதக் கூலியும் இன்றி இலவசமாகச் செய்வதே உபரி உழைப்பு என்றும் இதுதான் முதலாளித்துவச் சுரண்டல் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

தொழிலாளர்களின் கூட்டில் உற்பத்தியாகும் பொருள் சமூகத்தன்மை வாய்ந்ததாகிறது. இதனை மறுபுறத்தில் முதலாளி அபகரித்துக்கொள்வதால் அது தனியுடைமை யாகிறது. இதுவே முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடு என்கிறார்.

கணவரின் அறிவாற்றல் மீது அபார நம்பிக்கைக் கொண்டிருந்த ஜென்னி, அவருக்கு இணையான ஆற்றல் கொண்டிருந்தார். அவர்களின் நேசிப்பே குடும்பத் துயரத்தைத் தாங்கிக்கொள்கிற சக்தியைக் கொடுத்தது. ஜென்னிதான் மார்க்ஸின் முதல் வாசகர், முதல் விமர்சகருமாவார். அவர்களின் பிள்ளைகள் தொழிலாளர்களின் போராட்டம் பற்றி தெரிந்தவர் களையே திருமணம் செய்தது மார்க்ஸ் தம்பதியினரின் பண நிறைவற்ற மன நிறைவான வாழ்க்கைக்கான அர்த்தமாகும்.

ஈரல் நோயால் மூலதனத்தின் இரண்டாவது பகுதியை முடிக்க முடியவில்லை. மார்க்ஸும் ஜென்னியும் தனித்தனி அறையில் சிகிச்சையில் இருந்ததால் நோயை விட பிரிவினால் அதிக வேதனை அனுபவித்தனர். 02.12.1881 அன்று ஜென்னி மரணமடைய, மார்க்ஸ் மயக்கமுற, இறுதிச் சடங்கில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. ஜென்னியின் பிரிவை 15 மாதங்கள்தான் அவரால் தாங்க முடிந்தது.

அடுத்து, ஜென்னியின்  மரணத்தால் மூத்த மகள் நிலைகுலைந்து போக, 14.03.1882 அன்று ரத்தக்குழாய் வெடித்து அந்த சிந்தனையாளன் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்.

ஒழுக்கம் நிறைந்த சிந்தனையாளன் தன் இன்ப, துன்பத்தோடு குடும்பத்தையும் அழைத்துச் சென்றார்.

ஜென்னி புதைக்குழி அருகிலேயே மார்க்ஸின் சவப் பெட்டியும் வைக்கப்பட்டது.

மார்க்ஸ் இறப்புக்கு பிறகு, ஏங்கல்ஸ் தனது 63வது வயதில் மூலதனத்தின் 2வது பகுதியையும், 10 ஆண்டுகள் கழித்து 3வது பகுதியையும் வெளியிட்டு மார்க்ஸின் விருப்பப்படி ஜென்னிக்கு சமர்ப்பணம் செய்தார்.

மார்க்ஸ் என்ற மூலதனம் தொழிலாளர்களுக்கும் ஜென்னி என்ற சீதனம் எப்படி வாழ வேண்டும் என்பதை உலகின் ஒவ்வொரு தம்பதியினருக்கும் எடுத்துரைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com