படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?

படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?

எஸ்தரின் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டவர்

பகுதி – 10

ஆங்கிலப் பேராசிரியர், பல்கலைக் கழகத் துணைவேந்தர், சாகித்திய அகாதமியின் தலைவர், மனதில் பட்டதைச் சட்டென உரைத்திடும் பேச்சாளர், நாவலாசிரியர், சர்ச்சைகளுக்குச் சளைக்காதவர், நேஷனல் புக் டிரஸ்ட்டின் இந்தியத் தலைவர் என பன்முகத்தாளனாக வலம் வந்த உடுப்பி ராஜகோபாலாச்சாரிய அனந்தமூர்த்தி என்ற யு.ஆர்.எ. கர்நாடக மாநிலம் தீர்த்தஹள்ளியில் ராஜகோபாலாச்சாரியா சத்தியம்மா தம்பதியினரின் வாரிசாக பிறந்த நாள் 21.12..1932.

எதைச் செய்தாலும் அதில் முழுமையாகத் தன்னை இணைத்துக்கொண்டு செயல்படுபவர் யு.ஆர்.எ. 13 வயதில் தன்னுடைய நண்பர்களோடு அவர் தொடங்கியது கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் கட்டுரைகள் அடங்கிய ‘அலை’ என்ற பொருள் கொண்ட ‘தரங்கனி’ என்ற கையெழுத்துப் பத்திரிகையே அவருடைய எழுத்துலகின் நுழைவாயிலாக அமைந்தது.

பெ. மாடசாமி
பெ. மாடசாமி

பாரம்பரிய சமஸ்கிருதப் பள்ளியில் அவருடைய ஆரம்பக் கல்வி தொடங்கியது. காமன்வெல்த் உதவித்தொகையில் இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக் கழகத்தின் வாயிலாக முனைவரானார்.

அவருடைய ‘சுயசரிதை’ என்பது குழந்தைப் பருவம். மாணவன், இல்லற வாழ்க்கை, ஆசிரியர் பணி, அவசரக்கால வாழ்க்கை, படைப்பாளியின் சங்கடங்கள், உயர்வு தாழ்வுகள், பல்வேறு நிலைகள், அவர் வசித்த நிர்வாக அதிகாரத்தில் எழுந்த சர்ச்சைகள் என பல கோணத்தில் அலசி எழுதப்பட்டதாகும்.

மாணவப் பருவ நட்பு வட்டத்தில் சோசலிஸ்டுகளான ராம மனோகர் லோஹியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன், சாந்தவேரி, கோபால கவுடா போன்றவர்களும் இருந்தார்கள்.

அவருடைய எழுத்துகள் ஒரு காலகட்டத்தை ஒட்டியுள்ள சூழ்நிலைகளில் உள்ள மக்களின் உளவியல் தழுவலாக இருந்தது. தான் சார்ந்திருந்த சமூகத்தைப் பற்றி முழுமையாகக் கண்டு, தெரிந்து, அறிந்து, உணர்ந்த உணர்வுகளின் வெளிப்பாடுதான் அவருடைய நாவலான 1965ல் வெளியான ‘சமஸ்காரா.’

நாரணப்பா என்ற பிராமண எதிர்ப்பு நிலை கொண்டவர்  ஒரு விபச்சாரியை வீட்டுக்கு அழைத்து வந்து அக்ரஹாரத்தில் வாழ்கிறார். முஸ்லீம் நண்பருடன் அசைவ உணவை ருசிக்கிறார். அவர் இறந்தபோது அவரை அடக்கம் செய்வதற்காக அக்ரஹாரத்தில் உள்ளவர்கள். வேதம் தெரிந்த அவர்களின் தலைவர், நாரணப்பாவோடு வாழ்ந்த பெண், அப்பெண்ணைச் சார்ந்த சமூகத்தினர் அனைவரும் செய்தது என்ன என்பதும், கடைசியில் நள்ளிரவில் யாருக்கும் தெரியாது எப்படி தகனம் செய்யப்பட்டார் என்பதும்தான் கதையின் கரு.

ஒரு நாவலே 8 வரிகளில் அடங்கிவிட்டது. ஆனால், நாவல் பற்றிய விமர்சனம் இன்றைக்கும் தொடர்வதுதான் அதன் மறுபுறம். ஒரு பிராமணனாக இருந்து  பிராமணியம் அதனின் மூட நம்பிக்கைகள் மற்றும் பாசாங்குத் தளங்களைக் கடுமையாக விமர்சித்தவர் என்ற அடையாளத்தை அவருக்குப் பெற்றுத் தந்தது சமஸ்காரா.

குடும்பங்களில் பெரிதாக குரல் எழுப்பாமல் அமைதியாக இயங்கி வருவதாக கருதப்படும் பெண்களுக்குள் இருக்கும் ஆவேசம் மற்றும் கோபங்கள் பற்றி பிறப்பு என்கிற படைப்பு வெளிக்காட்டுகிறபோது அவர் சமுதாயத்தை உற்று நோக்கிய நுணுக்கத்தை உணர முடிகிறது.

5 நாவல்கள், 1 நாடகம், 8 சிறுகதைகள், 3 கவிதை தொகுப்பு மற்றும் 7 கட்டுரைகள் அவருடைய படைப்புகளின் பட்டியலாகும்.

ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தாலும் தாய்மொழி மீது கொண்ட பற்றினால் ஆங்கிலத்தைவிட கன்னடமே சிறப்பு என்று அவர் கூறியதை இரட்டை வேடம் என்றார்கள். அவர் கண்டுகொள்ளவே இல்லை. ஆங்கிலம் கடினம் என்று எண்ணுகிற இளைஞர்களைத் தாய்மொழியில் படியுங்கள், எழுதுங்கள் என்று உற்சாகப்படுத்தியது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

தன்னுடைய தாய்மொழியைப் பாராட்டியவர், மாநில பள்ளிகளில் இருந்து தமிழை கர்நாடக அரசு அகற்றிய போது அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் ஆனந்தமூர்த்தி. தமிழ் தனித்து இருக்கிறது என்றும் தமிழர்கள் எங்கிருந்தாலும் தங்களை தமிழர்கள் என அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமைப்படுவார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

அவருடைய படைப்புகள் இந்திய மொழிகள் மட்டு மல்லாது ஐரோப்பிய மொழிகளையும் மொழி மாற்றத்தின் மூலமாக ஆக்கிரமித்தன. 80 ஆண்டு வாழ்க்கையில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களோடு தனக்கு நெருக்கம் அதிகம் என்று அவர் குறிப்பிடுகிறார்.

‘ஞானபீடம் விருது’ பெற்றவருக்குச் சாகித்திய அகாதமியின் தலைவராக இருந்தும் அவ்விருதினை அவர் பெறவில்லை என்பது பலரும் குறிப்பிடுவதுண்டு. பாராளுமன்றத்துக்குச் செல்கிற விருப்பம் அவருக்கு இருந்த நிலையில் வெற்றி வாய்ப்பு அவர் பக்கம் இல்லை.

அவருடைய பேச்சும், எழுத்தும் அவரை அடிக்கடி சர்ச்சையில் மாட்டிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தன. மைசூர் பல்கலைக் கழகத்தில் வேந்தராக இருந்தபோது இந்திராகாந்தி அம்மையாரைக் கண்டித்து பேசியதற்காகக் காரணம் கேட்டு நமுனா கொடுக்கப்பட்டது. 2013ல் மகாபாரதத்தில் பிராமணர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவது பற்றிய குறிப்பு இருப்பதாகக் கூறி சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். நரேந்திர மோடி கட்சி ஆட்சி செய்யும் நாட்டில் நான் வாழ மாட்டேன் என்று கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் அவருடைய மரணத்தின்போது “ஸ்ரீ யு.ஆர் அனந்த மூர்த்தியன் மறைவு கன்னட இலக்கியத்துக்கு இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என தன் இரங்கல் செய்தியைத் தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி.

மத்வா பிரிவில் பிறந்த அனந்தமூர்த்தி கிறித்துவரான எஸ்தரை திருமணம் செய்துகொள்வதை அவருடைய பெற்றோர்கள் விரும்பவில்லை. அதேநேரத்தில் எஸ்தரின் பெற்றோர் அவர் கிறித்துவ மதத்துக்கு மாற வேண்டும் என்று விரும்பினார்கள். இரண்டு கருத்தினையும் எதிர்த்தவர் அனந்தமூர்த்தி.

‘எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தன. அதனால் ஏற்பட்ட காயங்களை நாங்கள் மறந்துவிட்டோம்,’ என்று கூறும் அனந்தமூர்த்தி, தன்னிடமிருந்த அகங்காரம், பெருமிதம் இரண்டையும் எஸ்தர் களையெடுத்து விட்டதாகவும் தன் எழுத்துகளை அச்சமின்றி விமர்சிக்கும் பிள்ளைகளையும் எஸ்தர் கவனித்துக்கொண்டார் என்றும் குறிப்பிடுகிறார்.

எஸ்தருக்கு புகுமுகு வகுப்பு பாடம் எடுத்தபோது அவரவர்களுக்குப் பிடித்த அல்லது பிடிக்காத நபரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள் என்று வகுப்பில் சொன்னபோது, தான் அவளுக்குக் கற்பித்த விதத்தை கேலி செய்து, தன்னையே அவள் விவரித்திருந்தது தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்கிறார். எஸ்தர் ஒரு விழாவில் பாடிய திரைப்படப் பாடலைக் கேட்டு, ஆனந்தக்கண்ணீர் வடித்ததாகக் கூறுவதில் இருவரும் ஒருவரை ஒருவர் ரசித்திருக்கிறார்கள், நேசித்திருக்கிறார்கள் என்பதைக் காணமுடிகிறது.

அவருடைய நினைவேந்தலின்போது ‘65 ஆண்டுகள் அவரோடு இருந்து அவரைப் புரிந்துகொண்டேன்;  அவர் தேசத்தை மட்டுமல்ல தன்னை நேசித்தவரையும் அரவணைத்துக்கொண்டார்’ என்று கூறிய எஸ்தர் குழந்தைகள் தொலைக்காட்சியிலிருந்து விலகி இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். எஸ்தர் மட்டுமல்ல மருமகன் விவேக் ஷான்பாக்கும் ஒரு எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பல நாடுகளுக்குச் சென்றிருந்தாலும் 1993ல் சீனாவுக்குச் சென்ற எழுத்தாளர்கள் குழுவுக்குத் தலைவராகச் சென்றார் என்பது அவரது  தனித் தன்மையைக் காட்டுகிறது.

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வாசகர்களோடு மட்டுமல்ல, பொதுமக்களோடும் தொடர்பில் இருந்தார். எழுத்தாளர்கள் பேதமின்றி அவரை அணுக முடிந்தது. அதனால்தான் அவரை மேஷ்த்ரு / மாஸ்டர் என்றழைத்தனர்.

அவருடைய இறப்பை இலக்கியத்துக்கான பேரிழப்பு என்கிற வகையில் கர்நாடக அரசு ஒருநாள் விடுமுறை யோடு 3 நாள் அரசு துக்கத்தை அறிவித்தது. அவருடைய பூத உடலுக்கு மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டது.

வேத முழக்கங்களுக்கிடையில் அவரது மகனால் இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அவருக்குக் கிறித்துவ மதத்திலும், இஸ்லாம் மதத்திலும் பிரார்த்தனை நடத்தப்பட்டதே அவருடைய மதச்சார்பின்மைக்கு அடையாளம்.

இந்திய எழத்தாளர்களிடையே நன்கு அறியப்பட்ட அனந்தமூர்த்தி என்ற யு.ஆர்.எ. கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கல்லூரி விவாதத்திலும் மொழியின் மேதை பற்றிய விவாதத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com