
முன்னுரை:
- ரேவதி பாலு
கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறினார், "தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுக்கும்போதெல்லாம் என்னை நானே அவதரித்துக்கொள்கிறேன். நல்லோரைக் காத்துத் தீயோரை அழிக்க யுகந்தோறும் அவதரிக்கின்றேன்" என்று.
இதுதான் பகவானின் அவதார நோக்கம். பகவானின் சார்பாக மகான்களும் இந்தப் பூலோகத்தில் தக்கத் தருணத்தில் தோன்றி அவருடைய அவதார நோக்கம் நிறைவேறுமுகமாக தமக்கே உரித்தான முறையில் உதவி செய்கிறார்கள். இவ்வகையில்தான் 1838இல் ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவும் இப்பூவுலகத்தில் விஜயம் செய்தார். 1918இல் மஹா சமாதியடைந்த அந்த மகானின் 105 ஆவது மஹா சமாதி ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தொடங்குகிறது.
இவ்வுலக வாழ்க்கையில் இன்ப துன்பங்களில் உழன்று சம்சார சாஹரத்தை நீந்தி கடக்க முடியாமல் அவதிப்படும் மாந்தர்களைக் கருணையோடு கரையேற்றவே மஹான்கள் அவதரிக்கிறார்கள். குறிப்பாக, ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவைப் போன்ற மஹான்கள் ஒரு அவதார புருஷராக இந்த மண்ணில் பிறந்திருந்த போதிலும், மனிதர்களோடு பழகி, அவர்களோடு ஒருவராக எளிமையாக வாழ்ந்து, அதே சமயம் அவர்கள் ஆன்மிக த்தில் முன்னேற்றமடையவும் வழி காட்டியிருக்கிறார். தன்னுடைய பக்தர்களின் இதயங்களில் நிறைந்து, அவர்களை ஷீரடிக்கு தன்னுடைய தரிசனத்திற்கு வரவழைக்கிறார். அவர் அடிக்கடி கூறும் வார்த்தைகள், "என்னுடைய பக்தன் எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தாலும் காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக் குருவியைப் போல அவன் ஷீரடிக்கு இழுக்கப்படுவான்" என்பதே.
ஷீரடிக்கு இழுக்கப்பட்டு வரும் தன் பக்தர்களிடம் அன்போடு சொல்கிறார், "உனக்கும் எனக்கும் நேற்று இன்று அல்ல, 72 தலைமுறைகளாக பந்தம் இருக்கிறது. அதனால் தான் உன்னை இங்கே வரவழைத்தேன்." பாபாவோடு நமக்கு இப்படி ஒரு பந்தமா? அதையும் அவரே வெளிப்படுத்தி, நம்மை ஷீரடிக்கு அழைத்து அருள் புரிகிறாரா என்று பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போகிறார்கள்.
ஷீர்டி ஸ்ரீ சாயி பாபா கூறுகிறார், "யார் அதிர்ஷ்டசாலியோ யாருடைய பாவங்கள் ஒழிந்தனவோ அவர்களுக்கு என்னை தரிசிக்கவும், என்னுடைய வழிபாட்டைச் செய்யவும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. 'சாயி சாயி' என்று எப்போதும் கூறிக்கொண்டிருப்பீர்களானால் நான் உங்களை ஏழ்கடலுக்கு அப்பாலெடுத்துச் செல்வேன். என்னுடைய இந்த வார்த்தைகளை நம்புங்கள். நீங்கள் நிச்சயம் நன்மையடைவீர்கள். வழிபாட்டின் கூறுகள் எட்டோ பதினாறோ எனக்குத் தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நானே சென்று அமர்கிறேன்."
"உடல், செல்வம், வீடு முதலிய உலக ஆதாயமான விஷயங்களைப் பற்றியே நினைத்து மனதை அலைந்து திரிய விடாதீர்கள். எப்போதும் இறைவனை பற்றியே நினைத்துக் கொண்டிருக்க மனதைப் பழக்கப் படுத்துங்கள். அப்போது மனது அமைதியாகவும், அடக்கமாகவும், கவலையற்றும் இருக்கும்." என்றார் ஸ்ரீ பாபா.
சாயிபாபாவின் தரிசனமே நமது யோகசாதனம். அவருடன் பேசுவது நமது பாவங்களைப் போக்கும். அவரின் இருப்பிடம் ஷீரடியானாலும் அவரால் கவர்ந்து இழுக்கப்பட்டவர்கள் பஞ்சாப், கல்கத்தா, வட இந்தியா, குஜரத், தக்காணம், கன்னடம் ஆகிய எல்லா பகுதி களிலிருந்தும் ஷீரடிக்கு வந்தார்கள். இவ்வாறாக திக்கெட்டும் ஸ்ரீ சாயிபாபாவின் புகழ் பரவியதால் அடியவர்கள் திருக்கூட்டம் அவரின் தரிசனத்தையும் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்காகவே ஷீரடிக்கு வந்தது.
அவரிடம் என்னென்னவோ கோரிக்கைகள் வைக்க வேண்டும் என்று நினைத்து வந்தவர்கள் கூட அவரின் தரிசனம் ஒன்றிலேயே திருப்தியுற்று வாயடைத்து பிரமித்துப் போய் நின்றார்கள். அவர்களின் மனம் சொல்லவொண்ணா அமைதியைப் பெற்றது. ஈடு இணையற்ற மகிழ்ச்சியை அவருடைய தரிசனம் அவர்களுக்கு அளித்தது. அவருடைய தரிசனத்தால் அவர் களுடைய முந்தைய பிறவிகளில் உண்டான பாவங்கள் சுத்தமாக அடித்துச் செல்லப்பட்டதாக உணர்ந்தார்கள். சாயிபாபாவின் சுந்தர ரூபத்தை தரிசித்தாலே மகிழ்ச்சியால் நமது தொண்டை அடைக்கிறது. ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. நான், நீ என்னும் வேறுபாட்டைக் களைந்து நம்மை அவருடன் ஒன்றாக்குகிறது. சில கணங்களுக்கு நாம் நமது பார்வையை அவர்பால் செலுத்தினாலும் நமது முந்தைய பல பிறவிகளின் துக்கங்களையழித்து நம்மீது பேரானந்தத்தை பொழிகிறார். ஒரு சத்குருவின் முக்கியமான பண்பு அவர் அமைதியின் உறைவிடம் என்பதே. அவரைத் தரிசிக்கும் அனைவரின் மனதிலும் அந்த அமைதி குடிகொள்கிறது.
பாபாவால் ஷீரடிக்கு இழுக்கப்பட்டு அவர் தரிசனத்திற்கு வந்தவர்கள் அனைவரும் தாங்கள் முந்தைய பிறப்புகளில் செய்த நற்கர்மங்களின் குவியலின் விளைவாக சாயி பாபாவைப் போன்ற சத்குருவைச் சந்தித்து அவரால் ஆசிர்வதிக்கப்படும் நல்லதிர்ஷ்டத்தைப் பெற்றதைப் புரிந்துகொண்டு பரவசப்பட்டுப் போனார்கள்.
அவர் ஷீரடியில் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும் எங்கேயோ இருக்கும் தம் பக்தர்களின் வாழ்வில் நடந்தது, நடக்கப் போவது எல்லாமே அவர்கள் ஏதும் சொல்லாமலேயே அவருக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கிறது என்பதை அறிந்த அவருடைய பக்தர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அதை அவர் வாய்மொழியால் கேட்டபோது பணிவுடன் அவர் திருவடிகளில் வீழ்ந்து நமஸ்கரித்தார்கள். பற்பல புனித நூல்களைப் படித்தும், பிரவசனங்களைக் கேட்டும் பெற இயலாத ஆத்ம விவேகத்தை சத்குரு ஸ்ரீ சாயிபாபா அவருடைய வெறும் தரிசனத்திலேயே நமக்குக் கொடுக்கிறார். அதற்காக நம்மை ஷீரடிக்கும், சிட்டுக்குருவி காலில் நூலைக் கட்டி இழுப்பது போல இழுத்து, வரவழைக்கிறார் என்பதையும் பக்தர்கள் தங்கள் அனுபவங்களால் புரிந்து கொண்டார்கள்.
இந்தத் தொடரில் ஷீரடிக்கு இழுக்கப்பட்ட அப்படிப்பட்ட சில சிட்டுக்குருவிகளைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.(அருள் பெருகும்...)