ஷீரடி ஸ்ரீ சாயி – பக்தித் தொடர்

ஷீரடி ஸ்ரீ சாயி – பக்தித் தொடர்

ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக் குருவிகள் - காகா சாஹேப் தீக்ஷித்

அத்தியாயம் - 5

காகா சாஹேப் தீக்ஷித் என்று அழைக்கப்பட்ட திரு ஹரி சீதாராம் தீக்ஷித் 1864இல் காண்ட்வாவில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.  உயர் கல்விக்குப் பின் அவர் பம்பாயில் ஒரு பிரசித்தி பெற்ற வக்கீலாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  'லிட்டில் & கம்பெனி' என்னும் கம்பெனியில் சிறிது காலம் பணியாற்றியபின் தாமே சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.  பம்பாய் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் ஒரு அங்கத்தினராகவும் சிறிது காலம் பணியாற்றினார். அது மட்டுமல்ல. விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலும் அங்கம் வகித்தார். 1906ல் அவர் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே நடந்த விபத்து ஒன்றில் அவருடைய காலில் ஓர் ஊனம் ஏற்பட்டது. எவ்வளவு சிகிச்சைகள் மேற்கொண்டும் அந்த ஊனம் சரியாகவில்லை.  சரியாக நடக்க இயலாததால் அவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது.

காகா சாஹேப் தீக்ஷித்
காகா சாஹேப் தீக்ஷித்

1909ல் லோனாவாலாவில் அவருடைய பள்ளி கால நண்பர் நானா சாஹேப் சந்தோர்க்கரை சந்திக்க நேர்ந்தது.  அவருடைய கால் ஊனம் சரியாக வேண்டுமானால் அவர் ஷீரடிக்குச் சென்று ஸ்ரீ சாயிபாபாவை தரிசனம் செய்ய வேண்டும் என்று நானா கூறினார். மேலும், சாயி பாபாவைப் பற்றிய முழு விவரங்களையும் கூறி எப்படி அவர் தனது பக்தனை ஏழ்கடலுக்கு அப்பாலிருந்து கூட ஒரு சிட்டுக்குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போல இழுப்பார் என்றும் கூறினார். ஜன்ம ஜன்மமாக பாபாவின் ஆளாக இருந்தால்தான் ஒருவர் ஷீரடியில் கால் வைக்கவே முடியும், பாபாவை தரிசிக்க முடியும் என்றும் கூறினார்.  அவர் சொன்னதைக் கேட்டு பாபாவைக் காண மிக்க ஆர்வம் கொண்ட  காகா,  தன் கால் ஊனம் சரியாகாவிடினும்,  பாபாவை தரிசித்து தன்
மன ஊனத்தை சரி செய்து கொள்ளப் போவதாக கூறினார்.

சில நாட்களுக்குப் பிறகு பம்பாய் கீழ் சட்டசபையில் தமக்கு ஒரு இடம் கிடைப்பதற்காக ஓட்டுகள் பெறும் நோக்குடன் அஹமத்நகர் சென்று சர்தார் காகா சாஹேப் மிரீகர் வீட்டில் தங்கினார். தேர்தல் வேலை முடிந்ததும் ஷீரடி செல்ல விரும்பினார்.  இவரை யாருடன் ஷீரடிக்கு அனுப்புவது என்று மிரீகர் யோசித்துக் கொண்டிருந்த போது,  பாபா ஷீரடியில் காகா சாஹேப்பை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். பாபாவின் அணுக்க தொண்டரான ஷாமா தன் மாமியார் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டுக்கொண்டிருந்ததால் அவரைக் காண அஹமத்நகருக்கு வந்தார்.  ஷாமாவுடன் காகா சாஹேப்பை அனுப்பலாம் என்று முடிவு செய்யப்பட்டு அவ்வாறே காகா தன் முதல் விஜயமாக ஷீரடிக்குக் கிளம்பினார்.

ஷீரடியில் போய் பாபாவை தரிசித்ததும் அவர் மனமுருகிப் போனார்.  பாபா தான் அவர் வருகைக்காகவே காத்திருந்ததாகக் கூறியதும் மகிழ்ச்சிப் பெருக்கில் அவர் கண்கள் குளமாயின.  பல சந்தோஷமான வருடங்களை காகா ஷீரடியில் கழித்தார். காகா ஷீரடியில் 1910இல் ஒரு வாடா கட்டினார்.  அவ்வப்போது தன் வக்கீல் தொழிலுக்காக பம்பாய் போய் வந்தாலும், 1912 முதல் ஷீரடியிலேயே வசிக்க ஆரம்பித்தார். 'தீக்ஷித் வாடா' என்று அழைக்கப்பட்ட அந்தச் சத்திரம் பயணிகளுக்கு மற்றொரு தங்குமிடமாக அமைந்தது.  அங்கே தினமும் பாபாவின் கட்டளைப்படி,  'ஸ்ரீமத் பாகவதம்', 'பாவர்த்த ராமாயணம்' என்னும் ஏக்நாத்தின் நூல்களை வாசித்து அவையோருக்கு அதன் உட்கருத்துகளை எடுத்துச் சொல்வார்.

ஷீரடி புண்ணியஸ்தலத்தில் சாமானிய மனிதர்களோடு மனிதராக ஸ்ரீ சாயி பாபாவும் கலந்து உறவாடி வாழ்ந்த போதிலும் அவரை மகான் என்றும் சத்குரு என்றும் ஜனங்கள் மதிக்கவே செய்தனர்.  அவரும் குரு - சிஷ்ய பாவத்தில் அவர்களுக்கு அவ்வப்போது அநேக அறிவுரைகள் வழங்கினார்.

ஸ்ரீசாயி சத்சரித்திரத்தில் ஸ்ரீ ஹேமத்பந்த் அடியவர்களை மூன்று விதமானவர்களாக வகைப்படுத்துகிறார்.  முதல் தரம் அல்லது உத்தமர்கள்,  இரண்டாம் தரம் அல்லது மத்ய தரமானவர்,  மூன்றாம் தரம் அல்லது அதமர் சாதாரணமானவர்கள்.

முதல் தரமானவர்கள் குரு சொல்வதற்கு முன்பே அவருடைய விருப்பத்தை ஊகித்தறிந்து அவர் ஆணைக்குக் காத்திராமல் உடனேயே நிறை வேற்று பவர்கள்.   இரண்டாம் தரமானவர்கள் குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து  அப்படியே கொஞ்சமும் தப்பாமல் எழுத்துக்கு எழுத்து கடைப்பிடிப்பவர்கள்.  இவர்கள் மத்ய தரமானவர்கள்.  மூன்றாம் தரமானவர்களோ குருவின் கட்டளையை, "செய்கிறேன்! செய்கிறேன்!' என்று சொல்லிகொண்டிருந்தாலும், நிறைவேற்றுதலை ஒத்திப் போட்டுகொண்டு ஒவ்வொரு படியிலும் ஏதோ தவறு செய்து கொண்டும் இருக்கிறார்கள்.  இது 'அதம' சிஷ்யனின் அடையாளம்.  முதல் தரமான சிஷ்யனுக்கு உதாரணமாக காகா சாஹேப் தீக்ஷித்தின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி சத்சரித்திரத்தில் விவரிக்கப் பட்டுள்ளது.

ருமுறை ஷீர்டியில் 'காலரா' வியாதி தாண்டவமாடிக் கொண்டிருந்தது.  அப்போது ஒரு ஆடு கூட அங்கு கொல்லப்படக்கூடாது என்று கிராமப் பஞ்சாயத்து  சட்டத் திட்டங்களை விதித்தனர். இந்த காலகட்டத்தில் யாரோ ஒருவர் மசூதிக்கு ஒரு ஆட்டைக் கொண்டு வந்தார். அது மூப்படைந்து மிகவும் பலவீனமாக இறக்கும் தருவாயில் இருப்பதைப் போன்று தோற்றமளித்தது.  அந்தச் சமயத்தில் மாலிகானைச் சேர்ந்த பீர் முஹமது என்கிற 'படே பாபா' என்பவர் பாபாவின் அருகே நின்று கொண்டிருந்தார்.  பாபா அவரைக் கூப்பிட்டு, "இதை ஒரே வெட்டில் பலி கொடு" என்றார்.  இந்த படே பாபா என்பவர் சாயி பாபாவால் மிகவும் மதிக்கப்பட்டவர்.  ஆனால்  "எதற்கும் பயனின்றி அது ஏன் கொல்லப்பட வேண்டும்?" என்று படே பாபா அதைக் கொல்ல மறுத்துவிட்டார்.  பின்னர் பாபா ஷாமாவை அதனைக் கொல்லும்படி கேட்டுக்கொண்டார். ஷாமா ராதாகிருஷ்ணமாயியிடம் சென்று ஒரு கத்தி வாங்கி வந்து அதை பாபாவின் முன்னால் வைத்தார். கத்தி எதற்காக வாங்கப் பட்டிருக்கிறது என்பதையறிந்த ராதாகிருஷ்ணமாயி அதைத்  திரும்ப எடுத்துக்கொண்டு விட்டாள். ஷாமாவும் தன் கையால் ஆடு கொல்லப் படுவதைத் தவிர்ப்பதற்காக கொஞ்ச நேரம் தலைமறைவாக வாடாவில் போய் உட்கார்ந்துகொண்டார்.

இப்போது பாபா  காகா சாஹேப் தீக்ஷித்தைப் பரீட்சை செய்ய எண்ணினார். அவர் சொக்கத் தங்கம் என்பதில் சந்தேகமில்லை. ஜனங்களுக்கு அவர் குரு பக்தியை உணர்த்துவதற்காக பாபா ஒரு கத்தியை எடுத்து வந்து அந்த ஆட்டைக் கொல்லும்படி கேட்டுக்கொண்டார்.  தூய பிராமணக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு தமது  வாழ்க்கையில் கொலையை பற்றியே தெரியாது. இந்த மாதிரி ஹிம்சைச் செயல்களுக்கெல்லாம் அவர் முற்றிலும்  எதிரானபோதும் ஆட்டைக் கொல்வதற்குத் தன்னைத் தானே தைரியப்படுத்திக்கொண்டார்.

முஹமதியரான படேபாபா அதைக் கொல்வதற்கு விருப்பமற்றவராய் இருப்பதையும், இந்த தூய பிராமணர் அதைக் கொல்வதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டு இருப்பதையும் கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.  தன் வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டு கையைக் கத்தியுடன் தூக்கி பாபாவின் முடிவான ஆணைக்காக அவரைப் பார்த்தார்.

பாபா,"உம்! வெட்டு!" என்றதும் கைகள் வெட்டுவதற்குத் தயாராக கீழே இறக்கப்படவிருந்த அதே தருணம் பாபா, "நிறுத்து! நீ எவ்வளவு கொடுமையானவாக இருக்கிறாய்? பிராமணனாகயிருந்து கொண்டு ஆட்டைக் கொல்ல எவ்வாறு துணிந்தாய்?" என்றார். காகா சாஹேப் கத்தியைக் கீழே வைத்துவிட்டு பணிவோடு கூறினார். "அமிர்தத்தையொத்த தங்கள் சொல்லே எங்களுக்குச் சட்டமாகும்.  கொல்வது சரியா தப்பா என்று எங்களுக்குத் தெரியாது.  குருவின் கட்டளையை நாங்கள் ஆராயவோ, விவாதிக்கவோ விரும்புவதில்லை.  ஐயம் சிறிதுமின்றி குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிதலே எங்களது கடமையும் தர்மமும் ஆகும்!"  அப்பேர்ப்பட்ட உன்னதமான குரு பக்தியுடையவராக இருந்தார் காகா சாஹேப் தீக்ஷித். ஷீரடிக்கு பாபாவின் தரிசனத்துக்கு மஹாராஷ்டிராவின் எல்லா பகுதிகளிலிருந்தும் மக்கள் வருவதற்கு காகா சாஹேப் தீக்ஷித்தும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

பாபாவின் மறைவுக்குப் பிறகு ஷீரடியில் 'சாயி சன்ஸ்தான்' என்னும் அமைப்பு ஏற்படுத்தி சாயி சன்ஸ்தானின் கணக்கு வழக்கு விவகாரங்களை ஒரு 'ஹானரரி செக்ரடரி'யாக தன் மறைவு வரை கவனித்தும் வந்தார் அவர். சாயி சன்ஸ்தான் வெளியிட்ட 'சாய் லீலா' என்ற மராத்தி மாதப் பத்திரிகையையும் பொறுப்பேற்று நடத்தி வந்தார்.

பாபா, அவருக்கு மகிழ்வான மரணம் ஏற்படும் என்றும், தான் அவரை புஷ்பக விமானத்தில் எடுத்துச்செல்வேன் என்றும் வாக்குக் கொடுத்திருந்தார். 1926ஆம் வருடம் ஜூலை மாதம் 5ஆம் தேதி அவர் ஹேமத்பந்துடன் ரெயிலில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இருவரும் பாபாவின் பெருமைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். திடீரென்று காகா சாஹேப் தீக்ஷித் தன் கழுத்தை ஹேமத்பந்தின் தோளில் சாய்த்து எந்தவிதமான வலியோ, அசௌகரியமோ இன்றி காலமானார்.  பாபாவின் திருவடித்தாமரையில் சரணடைந்து, அவருடன் ஒன்றாகக் கலந்தது காகா சாஹேப் தீக்ஷித் என்னும் அந்தச் சிட்டுக்குருவி.

(அருள் பெருகும்)

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com