ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள் - காகாஜி வைத்யா

ஷீரடி ஸ்ரீ சாயி – பக்தித் தொடர்
ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள் - காகாஜி வைத்யா

அத்தியாயம் -7

ஷீரடி சாயிபாபாவின் பரம பக்தர்களுள் ஒருவரான காகாஜி அப்பாஜி வைத்யா நாசிக் ஜில்லாவைச் சேர்ந்த வணியில் வசித்து வந்தார்.  அங்கே ஸ்ரீ ஜகதம்பா மாதாவிற்கு ஸ்ரீ சப்தசிருங்கி தேவி கோவில்  என்னும் பெயரில் பிரசித்தி பெற்ற கோவில் ஒன்று இருந்தது.  காகாஜி வைத்யா அந்தக் கோவிலில் பிரதம பூஜாரியாக பக்தியோடு பணியாற்றி வந்தார்.  ஒரு கால கட்டத்தில்  அவர் வாழ்க்கையில் தொடர்ந்து வந்த கஷ்டங்களாலும் கவலைகளாலும் அவர் மனம் சொல்லவொணா துயரத்தில் ஆழ்ந்தது.  தன் மனக்கவலைகளைத் தீர்க்குமாறு அவர் தேவியிடம் இடையறாது பிரார்த்தனை செய்தார்.

பாபா காகாஜி
பாபா காகாஜி

தேவி ஒரு நாள் அவர் கனவில் தோன்றி  "நீ பாபாவைப் போய் தரிசனம் செய். உன் கவலைகள் தீர்ந்து  மனது அமைதியடையும்" என்றாள். காகாஜிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. தேவி குறிப்பிட்ட பாபா யாராக இருக்கக்கூடும் என்று மிகவும் யோசித்தார்.  பிறகு அந்த  பாபா சிவனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து 'த்ரியம்பக்'கிற்குச் சென்றார். பன்னிரெண்டு ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்றான த்ரயம்பகேஷ்வரை தரிசனம் செய்தார். அங்கேயே பத்து நாட்கள் தங்கினார். தினந்தோறும் அதிகாலையில் குளித்து ஸ்ரீ ருத்ரம், சமகம் முதலியவற்றை ஓதி சிவனுக்கு அபிஷேகம் செய்தார்.  ஆனால் அவர் மனநிலையில் எதுவும் மாற்றம் ஏற்படவில்லை.  பின்னர் அவர் வணிக்கே திரும்பினார்.

அங்கே ஸ்ரீ சப்தசிருங்கி தேவியை மனமுருக வழிபட்டு, தனக்கு ஒரு சரியான பாதையைக் காட்டுமாறு பிரார்த்தனை செய்தார். தேவி திரும்பவும் அவர் கனவில் தோன்றி,  "நீ ஏன் த்ரயம்பகேஷ்வருக்குச் சென்றாய்?  நான் குறிப்பிட்டது ஷீரடியைச் சேர்ந்த ஸ்ரீ சாயி சமாரத்தை.  நீ அங்கே செல்!" என்றாள். இப்பொழுது காகாஜிக்கு அடுத்த கவலை.  தேவி ஷீரடி என்று கூறிவிட்டாரே, அது எங்கே இருக்கிறது,  எப்படி அங்கே போவது என்று. ஒன்றும் புரியாமல்  அவர் கவலையுடன் இருந்தபோது, ஷீரடியில் பாபா காகாஜியின் வருகைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். 

ஒரு ஞானியை தரிசிக்க ஒருவன் உண்மையான ஆர்வமுள்ளவனாக இருந்தால் ஞானி மட்டுமல்ல, கடவுளும் அவனது வேண்டுகோளை நிறைவேற்றுகிறார்.  உண்மையில் ஞானியும் கடவுளும் ஒருவரே.  ஞானியிடம் செல்ல ஒரு பக்தன் எவ்வளவு அதிகம் கவலையுள்ளவனாக இருக்கிறானோ எவ்வளவு அதிக நம்பிக்கையுடனும் பக்தியுடனும் இருக்கிறானோ அவ்வளவு விரைவில் அவன் மன நிறைவு அடையும் வண்ணம் அவனது எண்ணம் நிறைவேற்றப்படும்.  காகாஜி சம்பந்தப்பட விஷயமும் அவ்வாறே நடந்தது.

ஷாமா என்று பாபாவால் பிரியமுடன் அழைக்கப்பட்ட மாதவ்ராவ் தேஷ்பாண்டே பாபாவின் அணுக்கத் தொண்டர். அவருடைய  குல தெய்வம் வணியிலுள்ள ஸ்ரீ சப்தசிருங்கி தேவி.   ஷாமா இளம் வயதில் நோய்வாய்ப் பட்டபோது  அவர் தாயார் அவரை தேவியின் சன்னதிக்கு அழைத்து வருவதாக வேண்டிக் கொண்டாள். தனக்கு ஒரு முறை ஸ்தனங்களில் ஏதோ சரும வியாதி ஏற்பட்டபோது ஒரு ஜோடி வெள்ளி ஸ்தனங்களை தேவிக்கு சமர்ப்பிப்பதாக பிரார்த்திக்கொண்டாள்.  தாயார் தன் மரணப் படுக்கையில் ஷாமாவை அருகில் அழைத்து  இந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாக சத்தியம் வாங்கிக்கொண்ட பின் உயிர் நீத்தாள்.  இருந்தாலும் முப்பது வருடங்கள் கடந்த பின்னரும் பிரார்த்தனைகள் நிறைவேறுவதாக இல்லை. ஷாமாவால் ரொம்ப வருடங்களாக வணிக்குப் போக இயலவேயில்லை. 

குலதெய்வத்திற்கு நேர்ந்து கொண்ட நேர்த்திக் கடனை நிறைவேற்றாததால் தான்  தங்களுக்கு வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்கள் வருகிறதென்று ஷாமாவின் தம்பி ஒரு ஜோசியர் மூலமாக அறிந்து கொண்டார்.  அவர் ஷாமாவிடம் இதைப் பற்றி கலந்தாலோசித்த போது  ஷாமா, "இனியும் தாமதம் வேண்டாம்!" என்று கூறி  விரைந்து ஒரு ஜோடி வெள்ளி ஸ்தனங்களை தயார் செய்து பாபாவின் முன் வைத்து தன்னை இந்த வேண்டுதல்களிலிருந்து விடுவிக்கும்படி வேண்டிக் கொண்டார்.  ஏனென்றால் ஷாமாவைப் பொறுத்தவரை பாபாவே அவருக்கு குலதெய்வம்! ஸ்ரீ சப்தசிருங்கி தேவி!  ஆனால் பாபா அதை ஏற்றுக் கொள்ளவிலலை.  ஷாமாவை உடனே அதை மீண்டும் வணிக்குச் சென்று ஸ்ரீ சப்தசிருங்கி தேவியிடமே சமர்ப்பிக்கச் சொன்னார்.

பாபாவின் அனுமதியையும் உதியையும் பெற்ற பின் ஷாமா வணிக்குச் சென்றார்.  அங்கே கோவில் பூஜாரியைச் சந்தித்து தான் ஷீரடியிலிருந்து வருவதாகச் சொன்னதும் காகாஜி வைத்யா அவரை அப்படியே கட்டியணைத்துக் கொண்டார். ஷீரடிக்குச் செல்வோமா, பாபாவைக் காண்போமா என்று அவர் அவ்வளவு ஏங்கிப் போயிருந்தார்.  ஷாமாவின் வேண்டுதல்களை நிறைவேற்றிய பின் அவர்கள் ஷீரடிக்குப் புறப்பட்டனர்.  பாபாவை வெறுமே தரிசித்தபோதே தன் மனதின் சலனங்கள் அடங்கி அமைதியாவதை உணர்ந்த காகாஜி வைத்யா மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்.

'என்னே பாபாவின்  மகிமை!  என்னிடம் ஒரு  வார்த்தை பேசவில்லை.  ஒரு கேள்வி கேட்கவில்லை.  சமாதானம் செய்யவில்லை.  வெறும் தரிசனம் ஒன்றே என் மனசஞ்சலத்தைத் தீர்த்து சாந்தி அளிக்கிறதே? இதுவல்லவோ தரிசன மகிமையென்பது?' என்று ஆனந்தப்பட்டார் காகாஜி.    ஷாமாவுக்கும் தான் வணிக்கு விரைந்து அனுப்பப்பட்டதன் பொருள் இப்போது தான்  விளங்கியது.  பக்தன் தன்னை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்து விட்டு அவன் வருகைக்காகக் காத்திருக்கும் பகவான் பாபாவைப் பார்த்து  இருவரும் மெய்சிலிர்த்து போய் பணிந்து வணங்கினர். காகாஜி வைத்யா பாபாவிடம் முழுமையாக சரணடைந்து தன் கவலைகளையும் கஷ்டங்களையும் மறந்தார்.  ஷீரடியிலேயே பன்னிரெண்டு நாட்கள் தங்கி பாபாவை தரிசித்து அமைதியான மனதுடன் பாபாவிடம் விடைபெற்று உதி, ஆசிர்வாதம் இவைகளுடன் வீடு திரும்பினார்.

(அருள் பெருகும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com