திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!
Published on

ஓவியம்: பத்மவாசன்

 பாகம் - 35 

அதிகாரம் 44:  ‘குற்றங்கடிதல்’ அதிகாரம் 45: ’பெரியாரைத் துணைக்கோடல்’

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை 

திறனறிந்து தேர்ந்து கொளல் 

 

அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக. 

(ஆழ்வார்கடியானுக்கும் அநிருத்த பிரம்மராயருக்கும் இடையேயான உரையாடல்...) 

       "சுவாமி! மாதோட்டத்தின் இயற்கை வளங்களைக் கண்டு களிப்பதற்காகவா தாங்கள் அந்த சேஷத்திரத்துக்குச் சென்றிருந்தீர்கள்?"

                    "இல்லை; உன்னை அங்கே அனுப்ப எண்ணியிருப்பதால் அதைப் பற்றியும் சொன்னேன். நான் சென்றது இளவரசர் அருள்மொழிவர்மரைப் பார்ப்பதற்காக..." 

           "இளவரசரைப் பார்த்தீர்களா, குருதேவரே?" என்று

ஆழ்வார்க்கடியான் கேட்டான். அவனுடைய பேச்சில் இப்போதுதான் சிறிது ஆர்வமும் பரபரப்பும் தொனித்தன.

           'ஆகா! உனக்குக்கூட ஆவல் உண்டாகிவிட்டதல்லவா, இளவரசரைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு? ஆம், திருமலை. இளவரசரைப் பார்த்தேன்; பேசினேன். இலங்கையிலிருந்து வந்துகொண்டிருந்த அதிசயமான செய்திகள் எவ்வளவு தூரம் உண்மை என்பதை நேரில் தெரிந்துகொண்டேன். கேள், அப்பனே! இலங்கை அரசன் மகிந்தனிடம் ஒரு மாபெரும் சைன்யம் இருந்தது. அந்தச் சைன்யம் இப்போது இல்லவே இல்லை! அது என்ன ஆயிற்று தெரியுமா? சூரியனைக்கண்ட பனி போல்கரைந்து, மறைந்து போய்விட்டது! மகிந்தனுடைய சைன்யத்திலே பாண்டியநாட்டிலிருந்தும் சேரநாட்டிலிருந்தும் சென்ற வீரர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நம் இளவரசர் படைத்தலைமை வகித்து வருகிறார் என்று அறிந்ததும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள். ஒருவரைப் போல் அனைவரும் நம்முடைய கட்சிக்கே வந்து சேர்ந்துவிட்டார்கள். மகிந்தன் எப்படிப் போர் புரிவான்? போயே போய்விட்டான். மலைகள் சூழ்ந்த ரோஹண நாட்டிற்குச் சென்று ஒளிந்துகொண்டிருக்கிறான். ஆக, நமது சைன்யம் போர் செய்வதற்கு அங்கு இப்போது எதிரிகளே இல்லை!"

          "அப்படியானால், குருதேவரே! இளவரசர் நம் சைனியத்துடன் திரும்பி விடவேண்டியதுதானே? மேலும் அங்கே இருப்பானேன்? நம் வீரர்களுக்குத் தானியம் அனுப்புவது பற்றிய ரகளையெல்லாம் எதற்காக?"

         "எதிரிகள் இல்லையென்று சொல்லி திரும்பிவந்து விடலாம். ஆனால், இளவரசருக்கு அதில் இஷ்டமில்லை. எனக்கும் அதில் சம்மதமில்லை. இளவரசரும், சைனியமும் இப்பால் வந்ததும், மகிந்தன் மலை நாட்டிலிருந்து வெளி வருவான். மறுபடியும் பழையபடி போர் தொடங்கும். அதில் என்ன பயன்? இலங்கை மன்னரும், மக்களும் ஒன்று நமக்குச் சிநேகிதர்களாக வேண்டும். அல்லது புலிக்கொடியின் ஆட்சியை அங்கே நிரந்தரமாக நிறுவுதல் வேண்டும். இந்த இரண்டு வகை முயற்சியிலும் இளவரசர் ஈடுபட்டிருக்கிறார். நமது போர் வீரர்கள் இப்போது இலங்கையில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் தெரியுமா? பழைய போர்களில் அநுராதபுர நகரமே நாசமாகிவிட்டது. அங்கிருந்த பழமையான புத்த விஹாரங்கள், கோயில்கள், தாது கர்ப்ப கோபுரங்கள் - எல்லாம் இடிந்து பாழாய்க்கிடக்கின்றன. இளவரசரின் கட்டளையின் பேரில் இப்போது நம்வீரர்கள் இடிந்த அக்கட்டிடங்களையெல்லாம் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.!"­

       "அழகாய்த்தானிருக்கிறது. சைவம், வைஷ்ணவம் இரண்டையும் கைவிட்டு இளவரசர் சாக்கிய மதத்திலேயே ஒரு வேளை சேர்ந்து விடுவாரோ, என்னமோ? அதையும் தாங்கள் ஆமோதிப்பீர்களோ?"

    "நானும் நீயும் ஆமோதித்தாலும் ஒன்றுதான்! ஆமோதிக்காவிட்டாலும் ஒன்றுதான். நம்மைப் போன்றவர்கள் நம்முடைய மதமே பெரிது என்று சண்டையிட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால், ஒரு நாட்டை ஆளும் அரசர் தம்முடைய பிரஜைகள் அனுசரிக்கும்  சமயங்கள் எல்லாவற்றையும் ஆதரித்துப் பராமரிக்க வேண்டும். இந்த உண்மையை யாருடைய தூண்டுதலுமில்லாமல் இளவரசர் தாமே உணர்ந்திருக்கிறார். சந்தர்ப்பம் கிடைத்ததும் காரியத்திலும் செய்து காட்டுகிறார். திருமலை, இதைக் கேள்! நம் இளவரசர் அருள்மொழி வர்மருடைய கரங்களில் சங்கு சக்கர ரேகை இருப்பதாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீயும் கேட்டிருப்பாய். ஆனால், அவருடைய கரங்களை நீட்டச் சொல்லி நான் பார்த்ததில்லை. அவர் கையில் சங்கு சக்கர ரேகை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஒன்று நிச்சயமாக சொல்கிறேன். இந்தப் பூமண்டலத்தை ஏக சக்ராதிபதியாக ஆளத்தகுந்தவர் ஒருவர் உண்டு என்றால் அவர் இளவரசர் அருள்மொழிவர்மர்தாம். பிறவியிலேயே அத்தகைய தெய்வ கடாட்சத்துடன் சிலர்  பிறக்கிறார்கள். சற்றுமுன் சில வர்த்தகத் தலைவர்களும் கைக்கோளப் படைச்சேநாதிபதிகளும் வந்து பேசிக் கொண்டிருந்தார்களே, அது உன் காதில் விழுந்ததா? இளவரசருக்கு என்றால் நம் வர்த்தகர்கள் எவ்வளவு தாராளமாகி விடுகிறார்கள், பார்த்தாயா?"

'சில நாளைக்கு முன்னால் பொதிகைமலைச் சிகரத்தில் ஒரு தவயோகியைப் பார்த்தேன்; அவர் ஞானக்கண் படைத்த மகான். அவர் என்ன சொன்னார் தெரியுமா? 'யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒருகாலம் வரும். இப்போது தென்னாடு மேம்பாடு அடையும் காலம் வந்திருக்கிறது. வெகு காலமாக இப்புண்ணிய பாரத பூமியில் பெரிய பெரிய சக்கரவர்த்திகளும், வீராதி வீரர்களும், ஞானப் பெருஞ் செல்வர்களும், மகா கவிஞர்களும் வடநாட்டிலேயே அவதரித்து வந்தார்கள். ஆனால், வடநாட்டைச் சீக்கிரம் கிரகணம் பிடிக்கப் போகிறது. இமய மலைக்கு அப்பாலிருந்து ஒரு மகா முரட்டுச் சாதியார் வந்து வடநாட்டைச் சின்னா பின்னம் செய்வார்கள். கோயில்களையும், விக்கிரகங்களையும் உடைத்துப் போடுவார்கள். ஸநாதன தர்மம் பேராபத்துக்கு உள்ளாகும். அப்போது நமது தர்மம், வேதசாஸ்திரம், கோயில், வழிபாடு - ஆகியவற்றையெல்லாம் தென்னாடுதான் காப்பாற்றித்தரப்போகிறது. வீராதி வீரர்களான சக்கரவர்த்திகள் இத் தென்னாட்டில் தோன்றி, நாலு திசைகளிலும் ஆட்சி செலுத்துவார்கள். மகா ஞானிகளும், பண்டிதோத்தமர்களும்
பக்த சிரோமணிகளும் இத்தென்னாட்டில் அவதரிப்பார்கள்!' என்று இவ்விதம் அந்தப் பொதிகை மலைச் சிவயோகி அருளினார். அந்த யோகியின் தீர்க்க தரிசனம் உண்மையாகும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது பிறந்திருக்கிறது, திருமலை!"

      "சுவாமி! தாங்கள் ஏதேதோ ஆகாசக் கோட்டைகள் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், அங்கே இராஜ்யத்தின்  அஸ்திவாரத்தையே தகர்த்தெறியப் பார்க்கிறார்கள் குரு தேவரே! நான் பார்த்ததையெல்லாம் தாங்கள் பார்த்து நான் கேட்டதையெல்லாம் தாங்களும் கேட்டிருந்தால் இவ்வளவு குதூகலமாயிருக்க மாட்டீர்கள். இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு ஏற்படப்போகும் அபாயத்தை நினைத்துக் கதிகலங்குவீர்கள்..."

       "திருமலை, ஆம், நான் மறந்துவிட்டேன். அதிக உற்சாகம் என் அறிவை மூடிவிட்டது. நீ உன் பிராயணத்தில் தெரிந்து வந்த செய்திகளை இன்னும் நான் கேட்கவே இல்லை. சொல், கேட்கிறேன். எவ்வளவு பயங்கரமான செய்திகளாயிருந்தாலும் தயங்காமல் சொல்!"

"சுவாமி, இங்கேயே சொல்லும்படி ஆக்ஞாபிக் கிறீர்களா? நான் கொண்டுவந்த செய்திகளை வாயு பகவான் கேட்டால் நடுங்குவார்; சமுத்திர ராஜன் கேட்டால் ஸ்தம்பித்து நிற்பார்; பட்சிகள் கேட்டால் பறக்கும் சக்தியை இழந்து சுருண்டுவிடும்; ஆகாசவாணியும், பூமா தேவியுங்கூட அலறிவிடுவார்கள். அப்படிப்பட்ட செய்திகளை இங்கே பகிரங்கமாகச் சொல்லும்படியா பணிக்கிறீர்கள்?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

        ''அப்படியானால் வா! காற்றும், கனலும் புகாத பாதாளக் குகை ஒன்று இந்தத் தீவிலே இருக்கிறது. அங்கே வந்து விவரமாகச் சொல்லு!" என்றார் அநிருத்தப் பிரமராயர்.

 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் 

பெற்றியார்ப் பேணிக் கொளல் 

வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.

ஈரடி வேதமும்  பொன்னியின் செல்வன் காட்சிகளுமே நமக்கு விளக்கிவிட புதிதாய் நாம் என்ன சொல்லி விட இயலும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com